விண்ணகத்தில் செல்வம் சேர்க்க தயாரா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 11 வெள்ளி 
I: 2 கொரி: 11: 18,21b-30
II: திபா 34: 1-2. 3-4. 5-6
III:மத்: 6: 19-23

அருட்தந்தை ஒருவர்  மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த வீட்டில் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. அருள்தந்தை தொடக்கத்தில் அருள்தந்தையாக மாற எந்தவொரு திட்டமும் இல்லை. பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.தனது படிப்பிற்கேற்ப  நல்ல வேலை வாய்ப்பும் கிடைத்தது. நல்ல ஊதியமும் கிடைத்தது. வசதியான வாழ்வு வாழும் அளவுக்கு அவருக்கு சொத்துக்களும் ஊதியமும் இருந்தும் ஒரு கட்டத்தில் அதில்  வெறுமையையே கண்டார் அவர். எனவே அவர் வேலையை விட்டு விட்டு மனிதநேயப் பணிகளைச் செய்து பிறருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். எனவே வசதியான ஆடம்பரங்களை தவிர்த்துவிட்டு எளிமையான ஆடைகளை அணியத் தொடங்கினார். தன்னிடமிருந்த விலை உயர்ந்த பொருட்களை விற்று வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற குடும்பங்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். எண்ணற்ற ஏழை எளிய மக்கள் படித்து வாழ்வில் முன்னேற வழிகாட்டினார். அப்பொழுது அவரிடம் குடும்ப உறுப்பினர் ஒருவர் "நம் குடும்பத்தில் இவ்வளவு சொத்துக்கள் இருக்க ஏன்  எளிமை வாழ்வு வாழ்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர் "நம்மிடமிருக்கும் பொருட்களோ சொத்துக்களோ நமக்கு மகிழ்ச்சியை தர முடியாது. மாறாக நாம் செய்யும் மனித நேயம் நிறைந்த பிறர் நலப்பணி தான் முழுமையான மகிழ்ச்சியைத் தர முடியும். அதன் வழியாக மட்டும்தான் விண்ணகத்தில் நிலையான சொத்துக்களை நாம் சேமித்து வைக்க முடியும். அதனால் மட்டுமே நாம் நிலையான வாழ்வைப் பெற முடியும். உலகம் சார்ந்த பொருட்களும் சொத்துக்களும் நிலையற்றது "என்று பதில் கூறினார். நாளடைவில் அருட்பணியாளராகவும் மாறினார்.

இவ்வுலகம் சார்ந்த சொத்துக்கள் நிலையற்றது என்று நினைத்தவர்கள் மாமனிதர்களாகவும் புனிதர்களாகவும்  மாறியுள்ளனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் புனித அருளானந்தர். தமிழகத் திருஅவையில் கிறிஸ்தவ நம்பிக்கை வேரூன்ற புனித அருளானந்தரின் பங்கு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. அவர் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளால் ஈர்க்கப்பட்டு தன்னையே கடவுளுக்கு அர்பணித்து   விண்ணகச் செல்வத்தைத் தன்னுடைய வாழ்வின் வழியாக சேமிக்க மறைசாட்சியாக மாறும் அளவுக்கு இறைப்பணி செய்தார்.

புனித வனத்து அந்தோனியார் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் நிலையற்றது என கருதி ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். இதன் வழியாக  இறைவனோடு ஒன்றித்து விண்ணக வீட்டில்  பேரின்ப செல்வத்தை சேர்த்து வைத்தார்.

மண்ணாசை, பொருளாசை பெண்ணாசை  (ஆணாசை) போன்றவைதான் மனிதரின் மனதில் பல்வேறு தீய எண்ணங்கள் உருவாக அடிப்படையாக இருக்கின்றது. எனவேதான் புத்தர் "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று கூறினார். ஆசைப்படுவது தவறு இல்லை. ஆனால் அந்த ஆசை சுயநலமாகவும் சிற்றின்பமாகவும் மாறும் பொழுது,  நாம் விண்ணக வீட்டில் செல்வத்தைச் சேர்க்க முடியாது.

இந்த உலகத்தில் நாம் சேர்க்க நினைக்கும் செல்வம் நிலையற்றது. நாம் சேர்க்கக்கூடிய செல்வங்களெல்லாம் இயற்கைச் சீற்றத்தாலோ,தொழில் முடக்கங்களாலோ,மனிதரின் சூழ்ச்சிகளாலோ அழிக்கப்படக் கூடியது. அதோடு மட்டுமல்லாது அச்செல்வங்கள் நம்மோடு விண்வீட்டிற்கு பயணிக்காது. மாறாக நம்முடைய நல்ல செயல்களும் அதனால் நமக்கும் பிறருக்கும் உண்டாகும் பயன்கள், மனமகிழ்வு ,சமாதானம் போன்றவை நாம் அழிந்தாலும் நினைவுகூறப்படும்.
எனவே அழியக்கூடிய செல்வத்தை நம்முடைய மனிதநேய செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தி, அழியாத நிலையான செல்வத்தை விண்ணக வீட்டில் சேர்த்து வைக்க முயற்சி செய்வோம். அப்பொழுது நாமும் புனித அருளானந்தர் மற்றும் புனித வனத்து அந்தோணியார் போல புனிதர்களாக வாழமுடியும் மாறமுடியும். விண்ணக வீட்டில் செல்வம் சேர்க்கத் தயாரா?

இறைவேண்டல் :
நிலையான இறைவா! விண்ணக வீட்டில் நிலையான செல்வத்தைச் சேர்க்க, நிலையற்ற செல்வத்தைக் குப்பை எனக் கருதி, அவற்றைப் பிறருக்குப் பகிர்ந்து அதன் வழியாக வாழ்வு கொடுத்து வாழ்வின் நிறைவைக் காணத் தேவையான ஞானத்தைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்