கடவுளின் பாராட்டைப் பெறுவோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 11 புதன் 
I: 2 கொரி: 9: 6-11
II: திபா 112: 1-2. 3-4. 9
III:மத்: 6: 1-6,16-18

இன்றைய நற்செய்தியின் மூலம் நாம் அனைவரும் நம்முடைய நற்செயல்களால் கடவுளின் பாராட்டைப் பெற அழைக்கப்படுகிறோம். நல்ல செயல்களைச் செய்தபின் மற்றவர்களிடமிருந்து ஒருவித பாராட்டு பெற எண்ணுவது மனிதர்களின் இயல்பே. அதுமட்டுமல்லாது நம்முடைய நன்னடத்தையையும் சிறப்பான செயல்பாடுகளையும் மற்றவர் பாராட்டும் போது அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு நமக்கு   எல்லா உரிமையும் உள்ளது. அதே நேரத்தில் நமது நோக்கம் அதுவாக மட்டும்  இருக்கக்கூடாது. நாம் செய்யவிருக்கும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலுள்ள நமது உந்துதல் தூய்மையானதாகவும் அனைவருக்கும்  நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும். அது தான் நிச்சயமாக கடவுளின் பாராட்டைப் பெறும்.

செபம், நோன்பு மற்றும் பிறரன்புச் செயல்கள் ஆகிய மூன்று நல்ல செயல்களும் கடவுளோடு,  நம்மோடும், அயலாரோடும் நம்மை  இணைக்கின்றன. அவற்றை நாம் செய்யும் போது மனிதரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம்   இல்லாமல், பாசாங்குத்தனம் இல்லாமல்  செய்யும் போது அச்செயல்கள் நம் மறைவான உள்ளத்து உணர்வுகளை அறியும் கடவுளையே நம் பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த  காலத்தில் நோயுற்றவர்களைக் குணமாக்க கடவுளிடம் செபிப்போம். தேவையற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தி நோன்பிருக்கவும்  ஏழைகளுடன் நமக்குள்ளவற்றை பகிர்ந்து கொள்ளவும் முயல்வோம். கடவுள் நிச்சயமாக நம்மை ஆசீர்வதிப்பார்.

இறைவேண்டல்
அன்பான தந்தையே! ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலுள்ள எங்கள் உந்துதலைத் தூய்மைப்படுத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்