அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

ஆண்டின் பொதுக்காலத்தின் 10 ஆம் வாரம் புதன்கிழமை 
I:1 கொரி: 3: 4-11
II: திபா 99: 5. 6. 7. 8. 9
III:மத்: 5: 17-19

ஒரு தந்தை பத்து தேக்கு மரத்தை வளர்த்து வந்தார். அந்த தந்தையின் மகன் அந்த பத்து தேக்கு மரத்தையும் ஒவ்வொரு நாளும் பார்த்து இரசித்து வந்தார். ஒரு நாள் பத்து  தேக்குமரத்தில் ஒரு தேக்கு மரத்தை தந்தை வெட்டினார். அதைக்கண்ட அவரின்  மகனுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. அழுதுகொண்டே "இந்த அழகான தேக்கு மரத்தை வெட்டி விட்டீர்களே!" என்று தன் தந்தையிடம் கேட்டார். அதற்கு அந்த தந்தை இந்த மரத்தை அழிக்க வேண்டும் நோக்கத்தோடு வெட்டவில்லை. மாறாக, இந்த வேறு விதமாக உருவாக்கி அதில் காணச் செய்ய வேண்டும் என்று பதிலளித்தார். பின்பு அந்த தந்தை மரத்தை அழகாக வெட்டி மிக அழகான நாற்காலி மேசையாக மாற்றினார்.  அழித்தலில் தான்நிறைவு இருக்கின்றது என்பதைபல உதாரணங்கள் வழியாகஅறிய முடியும். அரிசியை அழித்தால் தான் நமக்கு தோசை இட்லி சுட மாவு கிடைக்கும். கோதுமை அழித்தால் தான் சப்பாத்தி சுட மாவு கிடைக்கும். மலை கல்லை அழித்தால் தான் அழகிய சிற்பம் கிடைக்கும். அதேபோல நம்மிடையேயுள்ள  தேவையில்லாத கெட்ட எண்ணங்களையும் சுயநல சிந்தனைகளையும் அழித்தால் தான்,  நம் வாழ்வில் நிறையுள்ள வாழ்வு வாழ முடியும். அழித்தல் என்பது சீரழிப்பது அல்ல ; மாறாக,  சீரமைப்பது.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், மற்றும் யூத மக்கள் சிலர் இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்க வந்தார் என்று கருதினர். ஏனெனில்  இயேசு அவர்களின் தவறான போதனைகளை விமர்சனப்படுத்தி நேரிய முறையில் புதிய சிந்தனைகளை போதித்தார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இவரைப் பற்றிய தவறான எண்ணம் அவர்கள் கொண்டிருந்ததால் இயேசு அவர்களைப் பார்த்து "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்கவந்தேன்
என நீங்கள் எண்ண வேண்டாம்' என்றார்'' (மத்தேயு 5:17) என்று கூறினார்.

மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் மறைநூலையும் திருச்சட்டத்தையும் மக்களுக்கு விளக்கி கூறினார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து காட்ட வில்லை. ஆனால் ஆண்டவர் இயேசு மக்களுக்கு மறைநூலை விளக்கிக் காட்டியது மட்டுமல்ல; அவர் வாழ்ந்தும் காட்டினார். பிறரும் வாழ வழிகாட்டினார்.

எனவேதான் ஆண்டவர் இயேசு  "அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே" என்று கூறியுள்ளார்.  தன்னுடைய அன்றாட இறையாட்சி பணியின் வழியாக மெசியாவின் மதிப்பீடுகளை மக்களின் வழியாக வாழ்ந்து காட்டினார்.  ஏழை எளிய மக்களை அன்பு செய்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு இரக்கம் காட்டி,  தேவையில் உள்ளவர்களுக்கு வாழ்வு கொடுத்து பல்வேறு மனிதநேய பணிகள் வழியாக இறைவாக்கையும் திருச்சட்டத்தையும் வாழ்ந்து காட்டினார்.  எனவேதான் இயேசுவால் "விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று  சொல்ல முடிந்தது. எனவே நமது அன்றாட வாழ்வில் இயேசுவைப் போல திருச்சட்டங்களையும் இறைவாக்குகளையும் போதிப்பதோடு நின்றுவிடாமல் அதனை வாழ்ந்து காட்டி நிறைவுள்ள மனிதர்களாக வாழ முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா!  உம்முடைய திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் போதிப்பதோடு நின்றுவிடாமல், அதனை வாழ்வாக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய மாதா ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்