மறுஉலக வாழ்வை நாம் புரிந்து கொள்கிறோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
நற்செய்தி வாசகம்
மு.வா: தோபி: 3: 1-11, 16-17
ப.பா: திபா 25: 2-3. 4-5. 6-7b. 8-9
ந.வா:மாற்: 12: 18-27
மறுஉலக வாழ்வை நாம் புரிந்து கொள்கிறோமா!
இவ்வுலகமே கடவுளின் வல்லமையால் தான் இயங்குகிறது. இதற்கு முன் நடந்தவையும் இப்போது நடப்பவையும் எதிர்காலத்தில் நடக்கப்போவதும் கடவுளின் அனுமதியின்றியும் வல்லமையின்றியும் இல்லை. அதையும் தாண்டி நம்முடைய இறப்பிற்கு பின்பும் நமக்கு நிலைவாழ்வு அளிப்பவர் கடவுள் என்பது கிறிஸ்தவ மக்களுக்கு அடிப்படை நம்பிக்கையாக இருக்கிறது. ஏனெனில் நம் கடவுள் வாழும் கடவுள். வாழ்வோரின் கடவுள்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் ஒரு பிரிவினர் சதுசேயர் . அவர்களுக்கு உயிர்ப்பின் மேல் நம்பிக்கை இல்லை. ஆகவே இயேசுவை தங்கள் சூழ்ச்சி வலையில் விழ வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் " உலக வாழ்க்கையில் எழுவருக்கு மனைவியாக இருப்பவர் உயிர்ப்புக்கு பின் யாருக்கு மனைவியாய் இருப்பார்?" என்ற குதர்க்கமான கேள்வியைக் கேட்டனர். அவர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட இயேசு கடவுளின் வல்லமையையும் மறைநூலையையும் அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதைச் சுட்டிக்காட்டினார். கடவுள் இறந்தவர்களின் கடவுளல்ல வாழ்வோரின் கடவுள் என்பதையும் அவர்களுடைய மூதாதையரின் பெயரைக் குறிப்பிட்டு விளக்குகிறார்.
இயேசு இவ்வுலக வாழ்வையும் உயிர்ப்புக்குப் பின் வாழப்போகும் வாழ்க்கையையும் மிகத் தெளிவாகப் புரிய வைக்கிறார்.
பல வேளைகளில் நாமும் இவ்வுலக வாழ்வுக்குப்பின் நமக்கு கடவுள் அளிக்கவிருக்கிற நிலைவாழ்வைப் பற்றியத் தெளிவானப் புரிந்துணர்வு இல்லாமல் இருக்கிறோம். ஏன் இவ்வுலக வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் போதுமென மனம் போன போக்கில் வாழ்கிறோம். எல்லாமே இவ்வுலகோடு முடிந்துவிடுகிறது என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம். நம்மைச் சுற்றி நடப்பனவற்றை மிகக் குறுகிய பார்வையோடு சதுசேயர்களைப் போலக் காண முற்படுகிறோம். சூழ்ச்சியும், பொறாமையும் ,
கர்வமும் கொண்டு பிறரை விழவைப்பதில் மகிழ நினைக்கிறோம். இத்தகைய மனநிலையைக் களைந்து கடவுளின் வல்லமையையும் இறைவார்த்தையையும் தெளிவாகப் புரிந்து கொண்டு மறுவுலக வாழ்விற்கு வித்தாய் இவ்வுலக வாழ்வை வாழ முயற்சி செய்வோம்.
இறைவேண்டல்
வாழ்கின்ற இறைவனே! வாழ்வோரின் கடவுளே! நீர் அருள்கின்ற நிலைவாழ்வைப் பெற எங்கள் நில வாழ்வைச் சிறப்பாக வாழத் துணைபுரியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்