நோன்பு இருப்போமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - திருநீற்று புதனுக்குப்பின் வெள்ளி
I: எசா: 58: 1-9
II: திபா 51: 1-2. 3-4. 16-17
III: மத்: 9: 14-15
ஒரு ஊரில் வேளாங்கண்ணி அன்னையின் பக்தர் இருந்தார். அவர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தை நோக்கி நடை திருப்பயணம் செல்வது வழக்கம். இவர் இந்த பக்தி முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழவில்லை. ஏனெனில் நடை திருப்பயணம் செல்வதற்கு முன்பாக கிட்டத்தட்ட ஒரு மாதம் உண்ணா நோன்பு இருப்பது வழக்கம். அந்த ஒரு மாதத்தில் மட்டும் மாமிசம் மற்றும் இறைச்சி உண்ணுவதில்லை. அவர் ஒரு ஆன்மீகவாதியைப் போலவே அந்த ஒரு மாதம் செயல்படுவார். வேளாங்கண்ணிக்கு நடை திருப்பயணம் சென்று அனைத்து வேண்டுதல்களையும் முடித்தபிறகு, நேரடியாக அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்பு தன் நண்பர்களோடு பாண்டிச்சேரிக்கு செல்வார். தான் ஒரு மாதம் மது அருந்தாமலும் மாமிசம் உண்ணாமலும் சேர்த்து வைத்திருந்த பணத்தை தன் நண்பர்களோடு செலவிட்டு மகிழ்வாராம். அதன்பின்பு அவர் இயல்பு வாழ்க்கையை வீட்டுக்கு சென்ற பிறகு வாழத் தொடங்குவாராம். ஒரு வருடத்தில் பதினொன்று மாதத்தில் அந்த ஒரு மாதம் மட்டும் தான் அவர் உண்ணா நோன்பிருந்து பக்தி முயற்சியில் ஈடுபடுவாராம். இது உண்மையான நோன்பா?
இந்த நிகழ்வு நம் கிறிஸ்தவ வாழ்வை சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது. பல நேரங்களில் நாமும் அந்த நபரைப் போலத் தான் தவக்காலம் வருகின்ற பொழுது இறைவேண்டல், நோன்பு மற்றும் தானம் அறச்செயலில் ஈடுபட நினைக்கின்றோம். அந்த அறச்செயல்களில் இறைவேண்டல் மற்றும் நோன்பு போன்றவை பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றதன. ஆனால் அது மூன்றாவது நிலையான தானத்திற்கு பெரும்பாலும் செல்வதில்லை. அவ்வாறு செல்லும் பொழுது தான் கடவுளுக்கு உகந்த நோன்பினை நாம் மேற்கொள்ள முடியும். நாம் நோன்பிருந்து சேமிக்கக்கூடிய சேமிப்பானது இச்சமூகத்தில் தேவையுள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் செய்கின்ற அறச்செயல்களானது முழுமை பெறும்.
இன்றைய நற்செய்தியில் யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து,
“நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்று குற்றம் சுமத்தினர். இச்செயல் அவர்களின் நோன்பின் நோக்கம் சரியானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. வெறும் சட்டத்தை மட்டுமே நிறைவேற்றுகின்ற வகையில் அவர்கள் நோன்பு இருப்பதும்,தாங்கள் தான் நேர்மையாளர்கள் எனக் காட்டிக்கொள்ள விரும்புவதும் இக்குற்றச்சாட்டின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இது கடவுள் விரும்பும் நோன்பல்ல.
கடவுள் விரும்பும் நோன்பை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா மிகத் தெளிவாக விளக்குகிறார். ஏழை எளியவருக்கு உணவளிக்காமலும், ஆடையில்லாதவரின் மானம் காக்க உடையளிக்காமலும் ஒருவர் சாக்கு உடை உடுத்தி சாம்பலில் அமர்ந்து உண்ணா நோன்பு இருப்பது முற்றிலும் வீண் எனக் கூறுகிறார். வறியவரின் நீதிக்காக உழைப்பது மிக உன்னதமான நோன்பு எனவும் எடுத்துக்காட்டுகிறார்.
தவக்காலத்தில் அடி எடுத்து வைத்துள்ள நாம் நம்முடைய நோன்பிற்கான உண்மையான நோக்கத்தைக் கண்டறிந்து அதை இறைவனின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முயலுவோம். உணவு ,தேவையற்ற ஆடம்பரங்கள், வீணாக செலவழிக்கும் நேரங்கள் போன்றவற்றை நம்முடைய ஒறுத்தல் முயற்சிகளால் கொஞ்சம் சேமித்து உணவில்லாதோர், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாதோர், அன்பும் ஆதரவுமின்றி தவிப்போர் போன்றோரிடம் பகிர்ந்து கொள்ள முயற்சிப்போம். எல்லா நாட்களிலும் செய்ய இயலாவிட்டாலும் ஒருசில நாட்களாவது நம் முயற்சியால் ஒருசிலரின் மனதும் வயிறும் நிறைவு காண முயற்சிப்போம். அதுவே கடவுள் விரும்பும் உண்மையானத் தவமுயற்சி.
இறைவேண்டல்
எளியோரின் தெய்வமே! நாங்கள் மேற்கொள்ளும் நோன்புகள் உம்முடைய மனதை மகிழ்விக்கும் வண்ணம், தேவையில் உள்ளோருக்கு பயன்படும் விதமாய் அமைய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்