இயேசுவைப் பின்பற்ற தயாரா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் - திருநீற்று புதனுக்குப்பின் வியாழன்
I: இச:  30: 15-20
II: திபா 1: 1-2. 3. 4,6
III: லூக்: 9: 22-25

தவக்காலத்தைத் தொடங்கி இறைவனின் அருளையும் இரக்கத்தையும் பெறுவதற்கு நம்மையே ஆயத்தப்படுத்தி வருகிறோம். இந்த தவக்காலம் இயேசுவின் சீடர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மையான சீடத்துவ வாழ்வு எதுவென்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கி, தொடர்ந்து அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனையை இயேசு கொடுக்கிறார். "ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" என்ற  இயேசுவின் வார்த்தை இழத்தல் வழியாகத்தான் இயேசுவை முழுமையாகப் பின்பற்றமுடியும். அவரின் சீடத்துவ வாழ்வுக்குச் சான்றுபகர முடியும் என்ற வாழ்வியல் பாடத்தை நமக்குக் கொடுப்பதாக இருக்கின்றது.

இழத்தல்  என்பது நமது மனித வாழ்வில் முக்கியமான ஒன்று. அது பல நேரங்களில் நமது வாழ்வில் துன்பத்தை தருகின்றது என நினைக்கிறோம். ஆனால் அது நமது வாழ்வில் மகிழ்ச்சியைத்தான் தருகிறது. ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை தன்னுடைய சுய விருப்புகளை இழக்கிறார். எனவேதான் அவரால் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது வழியாக இந்த உலகிற்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்க முடிகின்றது. மாணவர்கள் தேர்விற்காக தங்களையே தயார்படுத்தும் பொழுது தங்களுடைய  பொழுதுபோக்கை, உறக்கத்தை, சோம்பேறித்தனத்தை இழக்கின்ற பொழுது, நல்ல முறையில் தேர்ச்சி பெற்று மகிழ்வான எதிர்காலத்தைப் பெற முடிகிறது. இன்றைய திருஅவையானது இமயமலைக்கு மேலாக உயர்ந்து இருப்பதற்கு காரணம் பல மறைசாட்சியர்களின் தியாகமும் மறைப்பணியாளர்களின் கடின உழைப்பும் தான். அவர்கள் தங்களையே முழுமையாக இயேசுவுக்காக இழந்ததால், திருஅவையின் வித்துக்களாக இருக்கின்றனர். எனவே இழத்தல் நல்லது.  

நம்முடைய அன்றாட வாழ்வில் சுயநலம், போட்டி, பொறாமை, தான் என்ற ஆணவம், அகங்காரம், காமவெறி, சாதிவெறி, தற்பெருமை, புறங்கூறுதல், குறைக்கூறுதல், பழிவாங்கும் மனநிலை போன்ற தீமைகளை இழக்கும் பொழுது, நம் வாழ்வு பல்வேறு சிலுவைகளைச் சந்திக்க நேரிடும். இத்தகைய தருணத்தில் இயேசு எவ்வாறு துணிவோடு சிலுவையைக் கல்வாரி நோக்கி சுமந்து சென்றாரோ, அதேபோல நாமும் நம்முடைய அன்றாட சிலுவைகளை ஒரு சில நிலைப்பாடுகளோடு சுமந்து செல்ல முயற்சி செய்ய வேண்டும். இதுதான் உண்மையான இழத்தல். அப்பொழுது தான் இயேசுவை முழுமையாகப் பின்பற்றி இயேசுவின் சீடத்துவ வாழ்வுக்குச் சான்று பகர முடியும்.  

நம்முடைய வாழ்விலே 'வாழ்வும் சாவும்' மற்றும்  'ஆசியும் சாபமும்' நம் முன்னால் இருக்கின்றது. அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது நம்முடைய கையில் தான் இருக்கின்றது என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. நாம் கடவுளின் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் முழுவதுமாக பின்பற்றும் பொழுது நம் வாழ்வு அருளின் வாழ்வாகவும் ஆசீர்வாதத்தின் வாழ்வாகவும் இரக்கத்தின்   வாழ்வாகவும்மாறும். அவ்வாறு வாழாமல் கடவுளின் வார்த்தைக்கு செவிமடுக்காமல் வேற்று தெய்வங்களை வணங்கி அவற்றிற்குப் பணிவிடை புரிந்தால் நம் வாழ்வு சாபமாக மாறும் என்பதையும் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைப்பதாக இருக்கின்றது.  

எனவே கடவுளுடைய கட்டளைகளையும் நியமங்களையும் முறைமைகளையும் கடைபிடித்து வாழ முயல்வோம். இயேசுவின் வழியைப் பின்பற்றுவோம். இயேசுவின் வழி நீதி, சமத்துவம், சகோதரத்துவம், உண்மை, நேர்மை, தூய்மை போன்ற உயரிய பண்புகளைக் கொண்டது. இத்தகைய பண்புகளை நம்முடைய வாழ்விலே வாழும் பொழுது, பல்வேறு சிலுவைகள் நமக்கு வரும். அவற்றைக் கண்டு பயந்து விடாமல் துணிவோடு இயேசுவின் மனநிலையில் சுமந்து சென்று இயேசுவின் இறையாட்சி மதிப்பீட்டிற்குச் சான்று பகரும் பொழுது, நம்  வாழ்வு  இயேசுவின் உண்மையான சீடத்துவ  வாழ்வாக மாறும். இயேசுவின் சீடத்துவ  வாழ்வுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.  இத்தகைய வாழ்வை வாழத்தான் இந்தத் தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே தன்னலம் துறந்து பிறர் நலத்தோடு நம் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! உம்முடைய திருமகன் இயேசுவின் வழியைப்  பின்பற்ற தடையாயுள்ள தன்னலத்தையும் சுயநலத்தையும் விட்டுவிட்டு, இயேசுவின் சீடத்துவ  வாழ்வுக்குச் சான்று பகரும் பொழுது எதிர்வரும் சிலுவைகளைக் கண்டு துவண்டுவிடாமல் துணிவோடு இறையாட்சி மதிப்பீட்டுக்குச் சான்று பகரத் தேவையான அருள் நலன்களைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்