இறைவிருப்பத்தை நிறைவேற்ற கலங்க வேண்டாம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகைக் காலம் மூன்றாம் புதன்
I: எசா: 7: 10-14
II:திபா 24: 1-2. 3-4. 5-6
III: லூக்:1:26-38

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு மிக அருகாமையில் நாம் இருக்கின்றோம்.  இந்நாட்களில் கிறிஸ்து பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகள் நமக்கு நற்செய்தியாகத் தரப்படுகிறது. அதனடிப்படையில் இன்றைய நாளில் கபிரியேல் தூதர் கன்னியான மரியாவிற்கு கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் நிகழ்வினைத் தியானிக்க  நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 

கடவுளுடைய திட்டத்தை கபிரியேலின் வார்த்தைகள் வழியாகக் கேட்டவுடன் மரியா கலங்கினார் என நாம் வாசிக்கிறோம். கடவுளின் விருப்பம் நம்மைக் கலங்கடிக்கக்கூடியதா?  பயமுறுத்தக் கூடியதா? என்ற கேள்வி நமக்கு எழலாம். அதற்கு சரியான விடையை யாராலும் தரமுடியாது. கடவுள் நம்மைக் குறித்து ஒரு திட்டம் தீட்டும் போது அதை நம்முடைய நலனுக்காக மட்டும்  செய்யமாட்டார். மாறாக நம்மூலம் பலருடைய நன்மைக்காக அதைச் செய்வார். அவ்வாறெனில் அக்காரியம் சற்று கடினமானதாக நமது ஆற்றலுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்டதாக அமையலாம் அல்லவா. அது நமக்கு கலக்கத்தையும் கவலையையும் குழப்பத்தையும் தருகின்றது.
இருந்த போதிலும் அத்திட்டத்தை நிறைவேற்ற அவர் சக்திதருவார். இறைவாக்கினர்கள், புனிதர்கள் ,சமூகத்திலே சாதனை புரிந்தவர்கள் ஆகியோரின் சவால் நிறைந்த வாழ்க்கை வரலாறு இச்செய்தியை நமக்குத் தருவதாக இருக்கிறது.

நம் அன்னை மரியாவின் வாழ்க்கை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவதை நம்மால் உணரமுடிகிறது. மண ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தான் தாயாகப் போவதாக தூதர் கூறிய வார்த்தைகள் மரியாவுக்கு கலக்கத்தை அளித்தது உண்மைதான். ஆயினும் " அஞ்ச வேண்டாம் " என்று ஆண்டவர் தந்த துணிச்சலின் வல்லமையால் இதோ ஆண்டவரின் அடிமை எனச் சொல்லும் அளவுக்கு இறைத்திருஉளத்தை நிறைவேற்ற புறப்பட்டார் மரியா. இது ஒருநாள் பயணமல்ல. வாழ்க்கைப் பயணம் என அவர் அறிந்திருந்தார். அன்று அவர் கடவுளின் திட்டத்தை ஏற்றதால் இறைவனின் தாயானார். இயேசுவால் பலரும் நன்மைகளைப் பெற காரணமானார்.

ஆம் அன்புக்குரியவர்களே நாம் நம் வாழ்வில் நடைபெறும் பல நிகழ்வுகளால் கலக்கமுறுகிறோம். அது இயற்கைதான். அவற்றை நாம் கடவுளின் திரு உளமாக ஏற்றுக்கொண்டு சரியான அணுகுமுறையோடும் கடவுள் அருளும் துணிச்சலோடும் கையாளும் போது நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாக அவற்றை மாற்ற இயலும்.அத்தகைய மனநிலையை வேண்டுவோம். கலக்கமின்றி இறை திருஉளத்தை நிறைவேற்றப் புறப்படுவோம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா!  உமது திருஉளத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற தடையாய் இருக்கும் கலக்கங்களையும் கவலைகளையும் நீக்கி துணிவைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்