நமது செபவாழ்வு மேலோட்டமானதா? ஆழமானதா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகை காலம் முதல் வியாழன்
I: எசா:  25: 6-10
II: திபா 118: 1,8-9. 19-21. 25-27
III: மத்:  7: 21,24-27

ஒரு கிராமத்தில் இரு பக்தியான குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. கோவில் காரியங்களிலும் பக்தி முயற்சிகளிலும் போட்டி போட்டுக்கொண்டு முழு ஆர்வத்துடன் பங்கேற்பதால் அப்பங்கிலே அவ்விரு குடும்பங்களுக்கும் நல்ல மரியாதை இருந்தது. ஆனால் அவர்களில் ஒரு குடும்பத் தலைவி மட்டும் கொஞ்சம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தார். அதிக பரபரப்பை அவர் வெளிக்காட்டுவதில்லை. இந்த மாற்றத்தைக் கண்காணித்த மற்றொரு குடும்பத் தலைவி அவருக்கு பக்தி குறைந்து விட்டதாக எண்ணினார். அத்தோடு அவருடைய குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாலேயே அதைத் தாங்க இயலாமல் அவர் அமைதி காப்பதாகவும் தவறாக எண்ணினார். ஒருமுறை இருவரும் இதைப்பற்றி பேசும் போது, அமைதியாகவும் பரபரப்பில்லாமலும் இருந்த அந்தக் குடும்பத் தலைவி தன்னுடைய செப வாழ்வு ஆழமடைந்திருப்பதாகவும், தன்னுடைய பிரச்சனைகளில் சரியான தீர்வு காண கடவுள் வழிநடத்துவதாகவும் கூறி எத்தகைய துன்பம் வந்தாலும் நான் அசைவுறேன் என்ற வார்த்தைகளைக் கூறி புன்னகைத்தார்.

ஆம் அன்புக்குரியவர்களே இத்தகைய ஆழமான இறைஉறவில் வளரவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு உதட்டளவில் ஆண்டவரே என அழைப்பதால் நம்மால் இறைஉறவில் வளர இயலாது எனக் கூறுகிறார். இதனால் பிரச்சனைகளும் துன்பங்களும் நம் வாழ்வில் எழும்போது நாம் ஆடிப்போய்விடுகிறோம்.செய்வதறியாது திகைக்கிறோம்.

மாறாக நம் செபவாழ்வு ஆழமாக இருக்கும் போது கடவுளோடு உள்ள நமது உறவு ஆழப்படுகிறது. அதனால் அவருடைய வார்த்தைகளை நம் உள்ளத்தில்  கேட்க முடிகிறது. அதன்படி நடக்க நாம் தூண்டப்படுகிறோம். நம் வாழ்வில் துன்பங்களும் வேதனைகளும் இருந்தாலும் அவற்றால் நம்மை அசைக்க முடியாது. நமது நம்பிக்கை பாறைமீது கட்டப்பட்ட வீடு போல உறுதியாக இருக்கும்.

நம்முடைய செப வழிபாடுகளிலெல்லாம் நாம் பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அநேக நேரங்களில் அவைகளெல்லாம் மனப்பாடம் செய்யப்பட்டு வெறும் உதட்டளவில் ஓதப்படுவதாக உள்ளது. நமது உள்ளத்தின் ஆழத்தை அச்செபங்கள் தொடுவதில்லை. இதன் விளைவாக நாம் வாழ்வில் தளர்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் இந்நாட்களைப் பயன்படுத்தி நம்முடைய இறை உறவை ஆழப்படுத்த முயலுவோம்.அவ்வுறவை நம் வாழ்நாளெல்லாம் தொடர முயற்சிப்போம். வாரும் ஆண்டவரே என உதட்டளவில் கூறாமல் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நாம் அழைத்தால் நமது வாழ்வும் பாறைமேல் கட்டப்பட்ட உறுதியான வீட்டைப் போலாகும். அத்தகைய வரம் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா!  வெறும் உதட்டளவில் செபிப்பவர்களாக அல்லாமல் உள்ளத்தின் ஆழத்தில் உம்மோடு உறவு கொள்பவர்களாக வாழ வரமருளும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்