கடவுள் நம் வாழ்வில் உயர்வானவரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 21 திங்கள்
I: 1 தெச:  1: 1-5, 8-10
II: திபா: 149: 1-2. 3-4. 5-6, 9
III: மத்: 23: 13-22

அவ்வூரிலே திருவிழா. ஒருபுறம் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் அசனவிருந்து தயாராகிக் கொண்டிருந்தது. திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருந்த பலருக்கு கவனம் எல்லாம் தயாராகிக் கொண்டிருந்த உணவின்மேல்தான். இதை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்துக் கொண்டிருந்தார் அப்பங்கின் அருட்பணியாளர். அவர் மறையுரையின் போது மக்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை மக்கள் பொருட்படுத்த வில்லை. இறுதியில் நற்கருணை விருந்தில் கூட பங்கு பெறாமல் பலர் அசன விருந்துக்கு முந்திக்கொண்டு வரிசையாக பயபக்தியுடன் நின்றுகொண்டிருந்தனர் மக்கள். பலியான இறைவனைவிட  உணவு முக்கியமாகிவிட்டது. 

இன்றைய நற்செய்தியில் இத்தகைய மனநிலையைக் கொண்ட யூதர்களை இயேசு சாடுவதைக் காண்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை பலிபீடம் உயர்ந்ததல்ல. மாறாக அப்பலிப்பீடத்தின் மேல் வைக்கப்பட்ட காணிக்கைப் பொருட்கள் உயர்வாகத் தோன்றியது. அதைப்போலவே கோயில் உயர்ந்ததல்ல. அக்கோயிலுக்குள் உறையும் தெய்வம் பெரியவரல்ல. ஆனால் அக்கோவில் உள்ள தங்கம் தான் உயர்வானது.இன்று இவ்வாசகத்தைத் தியானிக்கும் வேளையில் நமது மனநிலை எவ்வாறு உள்ளது என்பதையும் நாம் வருங்கால சந்ததிக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதையும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஏனெனில் இயேசு பரிசேயர் மறைநூல் வல்லுநர்களைப் பார்த்து கூறும் "குருட்டு வழிகாட்டிகளே "வெளிவேடக்காரரே, குருட்டு மடையரே " என்ற அடைமொழிகள் நமக்கும் பொருந்திவிடக் கூடாது அல்லவா?

உண்மையான நம்பிக்கை எது? வாழ்வில் எது உயர்ந்தது என்பதைப் பற்றி இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல் தெசலோனியருக்கு எழுதிய கடிதத்தில் நாம் காண்கிறோம். இங்கே புனித பவுல் அம்மக்களைப் பாராட்டுகிறார். அவர்கள் இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டதையும்,  இறைஊழியர்களை நம்பிக்கையோடு வரவேற்றதையும், சிலைகளை வணங்குவதைத் தவிர்த்து கிறிஸ்துவின் நற்செய்தியை முழுமையாக ஏற்றுக்கொண்டதையும் பாராட்டி கடிதம் எழுதுகிறார்.மேலும் தந்தை கடவுளோடும் கிறிஸ்துவோடும் அவர்கள் இணைந்து வாழ்வதாகவும் பவுல் பெருமையாய்க் குறிப்பிடுகிறார்.

ஏனென்றால் தெசலோனிக்க மக்கள் கடவுளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். நற்செய்தியை உயர்வாக மதித்தார்கள். எனவே ஆண்டவரின் பாராட்டு பவுலின் வழியாக வெளிப்பட்டது. 
நாம் சிந்நிக்க வேண்டிய தருணம் இது. நாம் யாரை உயர்வாக மதிக்கப்போகிறோம்?
கடவுளையா அல்லது கடவுளின் பெயரால் வெளிஆடம்பரங்களையா? கடவுளை! உயர்வாக மதித்து வெளிவேடங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் களைந்து பிறருக்கு நல் வழிகாட்டிகளாய் வாழ முயற்சிப்போம். அப்போது கடவுளிடமிருந்து நிறைவான அருள் நமக்குக் கிடைக்கும்.

இறைவேண்டல்
அன்பு இறைவா!  வாழ்வில் உம்மையே உயர்வாக மதிக்கும் மனதைத் தந்து ஆசிர்வதியும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்