கடவுளின் பார்வையில் எது நீதி! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 20 ஆம் புதன்
I: நீதி: 9: 6-15
II: திபா: 21: 1-2. 3-4. 5-6
III: மத்: 20: 1-16
நாம் வாழும் இந்த உலகத்தில் நீதி, நேர்மை, உண்மை போன்ற மதிப்பீடுகள் குறைந்து கொண்டே வருகின்றன. பணத்தாலும் பதவியாலும் அரசியல் பின்புலத்தாலும் அனைத்தையும் வாங்கி விட முடியும் என்ற ஆணவப்போக்கு பெருகிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய மனநிலைக்கு சவுக்கடியாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது. கடவுளின் பார்வையில் நீதி என்பது அனைவருக்கும் கொடுக்கப்படும் சமத்துவ வாய்ப்பாகும். அனைவருக்கும் அனைத்தும் சமத்துவமாக பகிரப்படவேண்டும். இதைத்தான் பொதுவுடமைத் தத்துவம் சுட்டிக்காட்டுகின்றது.
நாம் வாழும் இந்த சமூகத்தில் ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கும் செல்வர்கள் மென்மேலும் செல்வர்களாக உயர்வதற்கும் காரணம் என்னவெனில் சமத்துவத்தோடு நீதி பகிரப்படாமையாகும்.
ஒரு ஊரில் ஒருவர் இளங்கலைப் பட்டமும் மற்றொருவர் முதுகலைப் பட்டமும் பெற்றிருந்தனர். இளங்கலை பட்டம் பெற்றவர் சற்று செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். அரசியல் பின்புலம் உள்ளவர். அவர் இளங்கலைப் பட்டம் பெற்றாலும் அவர் அதிகமான மதிப்பெண்களைப் பெறவில்லை. ஆனால் முதுகலை பட்டம் பெற்ற அந்த நபர் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லை. அவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். இருவரும் அரசு வேலைக்காக முயற்சி செய்தனர். அரசு வேலை பெற பணம் கட்டினால் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டது. ஏழையான அந்த முதுகலை பட்டம் வாங்கிய மனிதர் பணம் கட்ட முடியாத காரணத்தினால் வேலையை இழந்து தன் தந்தை செய்த விவசாய வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் பணம் கட்ட வசதி இருந்ததால் அவர் அரசு வேலையை பெற்றார்.
இதுதான் சமூக அநீதி. சமூக அநீதி இந்த உலகத்தில் தலைவிரித்து ஆடுவதற்குக் காரணம் வாய்ப்புகள் மறுக்கப்படுவதேயாகும். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு திராட்சை தோட்ட உவமையின் வழியாக கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் நீதியையும் வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. முதலாவது தோட்டத்திற்கு வேலைக்கு வந்தவர்களுக்கு தான் தருவதாக வாக்குறுதி கொடுத்த ஊதியத்தை கொடுத்துவிட்டார். இது அவருடைய நீதியின் செயலை வெளிப்படுத்துகின்றது. வேலை முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திராட்சைத் தோட்டத்திற்கு வந்த அந்தப் பணியாளர்களுக்கும் முதலில் வந்த பணியாளர்கள் கொடுத்த ஊதியத்தையே வழங்கினார். இதுவும் அவரின் பார்வையில் நீதியானதாக இருக்கின்றது. காரணம் கடைசி ஒரு மணி நேரம் திராட்சைத் தோட்டத்தில் அவர்கள் வேலை செய்தாலும் வேலை செய்ய வாய்ப்பில்லாமல், தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று உறுதியோடு அந்த நாள் முழுவதும் காத்திருந்தனர். எனவே தோட்ட உரிமையாளரின் நீதி நிறைந்த பார்வை வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. கடைசி ஒரு மணி நேரத்தில் வேலை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் முதலில் வேலைக்கு வந்த நபர்களின் ஊதியத்தை ஒத்திருந்தது. இதைக்கண்ட முதலில் பணி செய்ய வந்த பணியாளர்கள் முதலாளிக்கு முன்பாக முணுமுணுத்தனர். இது தவறான பார்வை என்று முதலாளி அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நம்முடைய அன்றாட வாழ்வில் இந்த சமூகத்தில் வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ நபர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் சம்பந்தமே இல்லாத வேலை செய்து கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம் கல்வித் தகுதி இல்லாவிட்டாலும் வேலை வாய்ப்பினைப் பெற்றவர்களும் இருக்கின்றனர். இது நீதிக்கும் அநீதிக்கும் இடையே உள்ள போராட்டமாகவே இருக்கின்றது. இவற்றை சரிசெய்ய ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வாய்ப்பில்லாமலும் இச்சமூகத்தில் அடையாளம் காணப்படாமலும் உள்ள மக்களுக்கு வாய்ப்புக் கொடுத்து வாழ்வில் முன்னேற வழி காட்டவேண்டும். சமத்துவமும் சகோதரத்துவமும் இம்மண்ணில் வளர உழைக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து போனவர்களை திடப்படுத்த வேண்டும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை சிந்திக்க அழைப்பு விடுகின்றது. எனவே கடவுளின் பார்வையில் நீதியான இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சி செய்வோம் அப்பொழுது ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடு களை வாழ்வாக்க முடியும்.
இறைவேண்டல்:
அன்பான ஆண்டவரே! எங்கள் அன்றாட வாழ்வில் எந்நாளும் உம்முடைய இறையாட்சி மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென் .
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்