வாழ்வளிக்கும் செயல்பாடுகளைச் செய்வோம்! அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-மூன்றாம் வியாழன் 
I: திப: 8: 26-40
II: திபா :66: 8-9. 16-17. 20
III:யோவான் :6: 44-51

இன்றைய நற்செய்தியின் மூலம் நம் ஆண்டவர் இயேசு வாழ்வளிக்கும் செயல்பாடுகளைச் செய்ய நம்மை அழைக்கிறார். வாழ்வளிக்கும் செயல்பாடுகள் எவை? பிறருக்காக உயிரைக் கொடுப்பதா? இயேசுவைப் போல வல்ல செயல்களைச் செய்வதா?   இவைகள் வாழ்வளிக்கும் செயல்பாடுகள் தான். ஆனால் இவை மட்டும் அல்ல. நம் அன்றாட வாழ்க்கை முறைகளில் நம்மோடு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ,ஆறுதல் தரக்கூடிய, பிறர் வாழ்வை உயர்த்தக்கூடிய ஒவ்வொரு செயவ்பாடுமே வாழ்வளிக்கும் செயல்பாடு. 

உதாரணமாக இன்றைய முதல் வாசகத்தில் எத்தியோப்பியா அரசு அலுலருக்கு திருமுழுக்கு வழங்கிய பிலிப்புவின் செயல் வாழ்வளிக்கும் செயலே. இறையனுபவமில்லாத அறியாமையில் இருந்த மனிதருக்கு இறைவார்த்தைகளை விளக்கி ஆன்ம இருளை அகற்றி கடவுளன்பைப் பகிர்ந்து திருமுழுக்கு வழங்கிய பிலிப்பு இயேசுவின் பாதையில் வாழ்வளிக்கும் செயல்பாட்டைச் செய்தார். ஆம் இது உலகம் சாராத ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிகாட்டும் செயல். நாமும் இதைப் போலவே உலகம் சாராத நம் ஆன்மாவும் பிறர் ஆன்மாவும் ஈடேற்றம் பெற வழிவகுக்கும் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இயேசு நாம் வாழ்வு பெற தன்னையே கையளித்தார். தம் உடலை வாழ்வு தரும் உணவு என்றார். ஆம். பிறர் வாழ்வு பெற நம்மை சிறிதளவாவது நாம் இழக்க வேண்டும்.அது நம் உயிரை இழப்பது என பொருள்படாது. மாறாக நம் சுயநல எண்ணங்களை, நம் நேரங்களை, நம் திறமைகளை, நம்மிடம் உள்ள பொருட்களை இழப்பதாகக் கூட இருக்கலாம். மற்றொரு வகையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு பகிர்வும் வாழ்வளிக்கும் செயல்பாடே. 

மன்னா உணவை உண்ட முன்னோர் இறந்தனர். காரணம் அவர்களின் செயல்பாடு வாழ்வளிப்பதாக இல்லை. கடவுளையும் சக மனிதரையும் பிரிந்து வாழ்ந்த வாழ்வாக இருந்தது. சுயநலம் மிகுந்ததாக இருந்தது. உலகம் சார்ந்ததாக இருந்தது. நாமும் அவல்களைப் போல வாழப் போகிறோமா?  அல்லது இயேசுவைப் போல பிறருக்கு வாழ்வு தரும் மக்களாக விளங்கி கடவுள் பால் பிறரை ஈர்க்கப்போகிறோமா?  சிந்திப்போம்

இறைவேண்டல் 
இயேசுவே! எங்களையும் உம்மைப் போல வாழ்வளிக்கும் செயல்புரியும் மக்களாக மாற்றுவீராக. ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்