அழியாவற்றிற்காக உழைப்போமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-மூன்றாம் திங்கள் 
மு.வா: திப:6: 8-15
ப.பா: திபா :119: 23-24. 26-27. 29-30
ந.வா:யோவான் :6: 22-29

இன்றைய வாசகங்கள் அழியாத நிலையானவைகளுக்காக உழைக்க நம்மை அழைக்கிறது. நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் 
அழியாதவை  எவை எனப்பட்டியல் போட்டால் அன்பு, ஞானம்,நம்பிக்கை, இறைவனோடும் பிறரோடும் உள்ள உறவு போன்றவைகளாகும்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவைத் தேடி மக்கள் கூட்டம் வந்த போது இயேசு அவர்களைப் பார்த்து நான் உங்களுக்கு உணவு அளித்ததால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று கூறுகிறார். மேலும் அழிந்து போகும் உணவிற்காக உழைக்க வேண்டாம் என்றும் கூறுகிறார்.

இவ்வுலகில் நாம் உழைத்துப் பெறும் பெரும்பாலானவை அழிந்து போகக்கூடியவையே.உணவு மட்டுமல்ல. நாம் விதவிதமாக உடுத்தும் ஆடை அலங்காரங்கள், இன்னும் வீட்டின் பயன்பாட்டிற்காக வாங்கும் சாதனங்கள், பணம்,பதவி,பட்டம் ஏன் நாம் பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் நமது உடல் அனைத்துமே அழியக்கூடியவையே.
 அழியாமல் நிலைத்திருக்கக்கூடியது நாம் இறைமகன் இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை. "தன் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவருக்கும் தந்தை நிலைவாழ்வு அருள்வார் என நாம் யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இன்றைய நற்செய்தியும் கூட இறைமகன் மீது நம்பிக்கை கொள்வது எவ்வளவு அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

கடவுள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை அவரோடு இணைக்கிறது. முடிவில்லா வாழ்வு தருகிறது. உடலால் நாம் மறைய நேர்ந்தாலும் ஆன்மா முடிவற்ற வாழ்வை அடைகிறது. இத்தகைய வாழ்வுக்காக உழைக்கவே நம்மை இறைவன் அழைக்கின்றார். அவரின் இவ்வழைப்பை ஏற்று இறைவன் தரும் அழியா வாழ்வுக்காக உழைப்போம்.

இறைவேண்டல்
இறைவா அழிந்து போகும் பொருட்களுக்காக வருந்தி உழைப்பதை விட்டுவிட்டு நம்பிக்கை கொண்டவர்களாய் நிலைவாழ்வுக்கு உழைக்கும் வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்