கடவுளை நம்பினால் குறைவானதும் நிறைவாகும்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் வெள்ளி
மு.வா: திப:5:34-42
ப.பா: திபா :26:1,4,13-14
ந.வா:யோவான் : 6:1-15
பல சமயங்களில் நம் வாழ்க்கையில் நாம் குறைவானவற்றையே கூர்ந்து பார்க்கிறோம். பற்றாக்குறையில் அதிக கவனம் செலுத்துவகிறோம். இல்லையே, இல்லையே எனக் கவலைப்படுகிறோம். பணம் இல்லையே, பொருள் இல்லையே, வசதி இல்லையே, வாய்ப்பில்லையே என இல்லாதவற்றை குறித்தே கலங்குவதால் இருப்பவை நம் நினைவுக்கு வருவதில்லை. இருப்பவற்றை நாம் நிறைவாக்க முயலுவதில்லை. இதற்கு நம்முடைய நம்பிக்கையின்மையும் ஒரு காரணமே.
இன்றைய நற்செய்தி நமக்கு மிகச் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இயேசு உணவளிக்க வேண்டுமென விரும்புகிறார். இந்நிலையில் சீடர்கள் மத்தியில் பல கவலைகள் எழும்புகின்றன. அவையெல்லாம் இல்லாமையைப் பற்றியதே.
ஒருவர் இத்தனை பேருக்கும் உணவு வாங்க பணமில்லையே என்கிறார்.
இன்னொருவர் வாங்கினாலும் பற்றாது என உணவு பற்றாகுறையை பேசுகிறார்.
வாசகத்தின் தொடக்கத்திலேயே மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் இயேசு தான் செய்யப்போவதை அறிந்த பிறகும் சீடர்களை சோதிக்க இத்தகைய கேள்வியைக் கேட்டார் என்று. இதன்மூலம் சீடர்களின் நம்பிக்கை குறைவும் புலப்படுகிறது. நம்பிக்கை இன்மை குறைகளை மட்டுமே நம் முன் கொண்டுவருகிறது.
இயேசுவோ இருப்பதில் கவனத்தை செலுத்தினார்.
சிறுவனிடத்தில் இருந்த ஐந்து அப்பங்களும் மீனும் அவர் கண்களுக்கு நிறைவாய்த் தெரிந்தது.
அழகான புல்தரை அமர்ந்து உண்டு இளைப்பாறுவதற்கான இடமாய்த் தெரிந்தது.
கடவுளை நம்பினார். செபித்தார்.பரிமாறினார். குறைவெல்லாம் அங்கே நிறைவாயிற்று.
நாம் யாருடைய மனநிலையைப் பெற்றிருக்கிறோம்? இயேசுவின் மனநிலையையா?அல்லது சீடர்களின் மனநிலையையா? இருப்பதைக் காணும் மனநிலையைப் பெற்றுக்கொள்வோம். கடவுளை நம்புவோம். குறைவானதெல்லாம் நிறைவாகும்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உம்மேல் எமக்குள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தும். குறைவானதை மட்டுமே கண்ணோக்காமல் இருப்பதை நிறைவாக்கும் மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்