அச்சத்தை நீக்குவோம்! உயிர்ப்பின் சாட்சியாவோம்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா எண்கிழமையில் திங்கள்
I: திப :2:14, 22-33
II: திபா :16:1-2, 5 மற்றும் 7-8, 9-10, 11
III:மத்:28: 8-15

நாம் அனைவரும் உயிர்ப்பு விழாவைக் கொண்டாடிய மகிழ்வில் இருக்கிறோம்.இயேசுவின் உயிர்ப்பு இவ்வுலகத்தின் வரலாற்றையே புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு. தீயசக்தியை முறியடித்த கடவுளின் வல்ல செயல். பாவத்தின் சம்பளம் மரணமானால் அந்த மரணத்தையே வென்று எடுத்து நம்மை மீட்டது இயேசுவின் உயிர்ப்பு. இத்தகைய இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தரும் செய்திகள் ஏராளம் ஏராளம். இன்றைய நாளில் நாம் அச்சத்தைத் தவிர்த்து உயிர்ப்பின் சாட்சிகளாய் திகழ வேண்டும் என்ற செய்தி நமக்குத் தரப்படுகிறது. 

நற்செய்தி வாசகத்தில் அதிகாலையிலே கல்லறைக்கு வந்த பெண்கள் இயேசுவின் உடல் கல்லறையில் இல்லாததைக் கண்டவுடன் அச்சமுற்றனர் என நாம் வாசிக்கிறோம். ஆனாலும் "பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் சீடருக்கு அறிவிக்க விரைந்து ஓடினர் " என்ற வார்த்தையும் கொடுக்கப்பட்டுள்ளது. அச்சம் - பெருமகிழ்ச்சி இவ்விரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று முரணானவை அன்றோ.  இன்றைய நற்செய்தி பகுதிக்கு சற்றே முந்தைய பகுதியை வாசிக்கும் போது வானதூதர்கள் அப்பெண்களிடம் இயேசு உயிர்த்த செய்தியை அறிவிக்கிறார் எனத் தரப்பட்டுள்ளது. அச்செய்தியைக் கேட்ட பின்னரும் ஒருவித பயத்தோடும் அதே சமயத்தில் மகிழ்ச்சியோடும் அவர்கள் கல்லறையை விட்டு சென்றார்கள். இதை அச்சம் என்று சொல்வதை விட ஒருவித அதிர்ச்சி எனவும் நாம் சொல்லலாம்.அங்கே அவர்களை இயேசுவே எதிர்கொண்டு வந்து "அஞ்சாதீர்கள் " என்று கூறி அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்து உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிக்க அனுப்புகிறார்.

அன்புக்குரியவர்களே நற்செய்தி சொல்லவும் நற்செயல் புரியவும் அச்சம் தேவையில்லை. தேவையற்ற அச்சம் நம் வாழ்விலிருந்து சென்றுவிட்டாலே நாம் உயிர்ப்பு பெற்றவர்களாகிறோம். தவறு செய்வதற்கு தான் அச்சம் வேண்டும். இதே நற்செய்தி பகுதியில் இயேசுவின் உயிர்ப்பை பொய்யாக்க இயேசுவின் சீடர்கள் வந்து அவரின் உடலை திருவிட்டார்கள் என பொய் சொல்லிய யூதத் தலைவர்களையும், காவல் வீரர்களையும் நாம் காண்கிறோம். ஆனால் அதை அவர்கள் தைரியத்துடன் சொன்னார்களா? இல்லை. எப்போது வேண்டுமானாலும் உண்மை தெரிந்துவிடும் என்ற பயத்தில் தான் சொன்னார்கள். 

அச்சம் நம்மை கொன்றுவிடும். அச்சம் நம்மைத் தவறுக்கு மேல் தவறு செய்யத் தூண்டும். அச்சம் நம்மை இறைவனிடமிருந்து பிரித்து விடும். அச்சம் உறவு சிக்கல்களை ஏற்படுத்தும். அச்சம் நம்மை நிகழ்காலத்தில் வாழவிடாது. இத்தகைய அச்சத்தை நாம் கொண்டிருந்தால் நம்மால் உயிர்ப்பின் மக்களாக விளங்க முடியாது. எனவே அச்சத்தை விட்டொழிப்போம். இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றுபகர்ந்த பெண்களைப்போல, திருத்தூதர்களைப் போல நாமும் சான்று பகர முயல்வோம். அதற்கானவரம் கேட்போம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா! எங்கள் வாழ்வில் அச்சத்தை விட்டொழித்து உம்முடைய உயிர்ப்பின் நற்செய்திக்கு சான்றுபகர்பவர்களாக வாழும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்