வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News | 28.01.2025

 தலைப்பு செய்திகள்..

1.கடவுளின் மகனான மெசியாவை அடையாளம் காண முயல்வோம்

2.வத்திக்கானில் உலக சமூகத் தகவல் தொடர்பாளர்களுக்கான யூபிலி

3.33ஆவது உலக நோயுற்றோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

இனி விரிவான செய்திகளை பார்க்கலாம் 

1.கடவுளின் மகனான மெசியாவை அடையாளம் காண முயல்வோம்

இயேசுவை தச்சன் யோசேப்பின் மகனாக அறிந்துகொண்டிருந்த மக்கள், தொழுகைக்கூடத்தில் இயேசு எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசித்து இன்று இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறுவதைக் கேட்டுக் குழப்பமடைகின்றார்கள்

கடவுளின் மகனான இயேசுவை  நம் மீட்பரை அடையாளம் காண அழைக்கப்படுகிறோம் என்றும், எப்போதாவது நாம் ஏழையாக சிறையில் அடைக்கப்பட்டவர்களாக, பார்வையற்றவர்களாக, உணர்ந்திருந்தோம் என்றால் இந்த கடவுளது அருளின் ஆண்டு நமக்கானதாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 26 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலிலேயாவில் இயேசுவின் தொடக்கப்பணி என்ற தலைப்பில் உள்ள லூக்கா நற்செய்தியின் இறைவார்த்தைகள் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இயேசுவை தச்சன் யோசேப்பின் மகனாக அறிந்துகொண்டிருந்த மக்கள் தொழுகைக்கூடத்தில் இயேசு எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசித்து இன்று இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறுவதைக் கேட்டுக் குழப்பமடைகின்றார்கள் என்றும், அவர்களால் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதனை தங்களது பார்வையாலும் வார்த்தையாலும் வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2.வத்திக்கானில் உலக சமூகத் தகவல் தொடர்பாளர்களுக்கான யூபிலி

உலகின் ஏறக்குறைய 60 இடங்களிலிருந்து ஏராளமான இளம் பத்திரிக்கையாளர்கள், பொறுப்பளர்கள், அமைப்பு மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என ஏறக்குறைய 10,000 பேர் உரோம் நகரில் கூடியிருக்கின்றனர்.

2025ஆம் ஆண்டு யூபிலியை முன்னிட்டு ஜனவரி மாதம் 24 வெள்ளிக்கிழமை முதல் 26 ஞாயிற்றுக்கிழமை வரை உலக சமூகத் தகவல் தொடர்பாளர்களுக்கான யூபிலியானது வத்திக்கானில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் ஏறக்குறைய 60 இடங்களிலிருந்து ஏராளமான இளம் பத்திரிக்கையாளர்கள், பொறுப்பளர்கள் அமைப்பின் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என ஏறக்குறைய 10,000 பேர் உரோம் நகரில் கூடியிருக்கின்றனர்.

எதிர்நோக்கு என்பது மாயையோ அல்லது மிகக்குறுகிய ஒன்றோ அல்ல மாறாக, "எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள் என எந்த வழியிலும் நாம் சொல்லும் விஷயங்கள் எங்காவது சென்று படிப்பவர்கள், கேட்பவர்கள் மற்றும் பார்ப்பவர்களுடன் உறவை உருவாக்குகின்றன என்று நம்புவதற்கு நம் ஒவ்வொருவரையும் தூண்டும் உந்துதல் என்று உலக சமூகத்தொடர்பாளர்களுக்கான யூபிலியின் துவக்க நாளின்போது கூறினார் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி.

நல்ல தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கையின் செய்திகளைப் பகிர்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி திருத்தந்தை அடிக்கடி வலியுறுத்துகின்றார் என்று வலியுறுத்திய ருபினி அவர்கள், மக்கள் தங்களைத் தனிமையாக உணர்வதைக் குறைத்தல், குரலற்றவர்களுக்குக் குரல் கொடுத்தல், உண்மையாக தகவல்களைப் பரப்ப அவர்களைப் பயிற்றுவித்தல்  என்னும் மூன்று பண்புகளைத் தகவல் தொடர்பாளர்கள் கொண்டிருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

3.33 ஆவது உலக நோயுற்றோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம்

நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம் என்றும், துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க முடியாத பாறை, நம்மை வலிமையாக்கும் ஒரு அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கும் 33 ஆவது  உலக நோயுற்றோர் தினத்திற்கான செய்தியை சனவரி 27 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், எதிர்நோக்கு ஏமாற்றம் தராது நமது துன்பத்தில் அது நம்மைப் பலப்படுத்துகின்றது என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கடினமான நோயினால் வருந்தும்போது, நமது அன்புக்குரியவர்கள் துன்பத்தில் வாடும்போது என எல்லா நேரங்களிலும் கடவுளின் அருகிருப்பு நமக்கு தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள்,துயரமான நேரங்களில் கடவுளின் அருகிருப்பை நாம் உணரவும், சிந்திக்கவும் ஏதுவாக சந்திப்பு, கொடை, பகிர்தல் என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Comments

Gunasekaran (not verified), Jan 28 2025 - 8:02pm
Our programs are very different from other radio's radio stations all program is suppeer
Gunasekaran