இறைபணியில் மதி மயங்கியவரா நான்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின் இரண்டாம் சனி 
I: எபி: 9: 2-3,11-14
II: திபா: 47: 1-2. 5-6. 7-8
III: மாற்: 3: 20-21

வேலை செய்ய வேண்டியது மனித வாழ்வில் கட்டாயமான ஒன்று. ஆனால் பல சமயம் நம்மில் பலர் வேலை செய்வதற்கு அடிமையாகி விடுகிறோம். இதை நாம் ஆங்கிலத்தில் "Workaholic" என்கிறோம். இத்தகைய தன்மை உடையவர்கள் வேலை வேலை என்று தங்கள் சுயத்தை மறந்து, குடும்பத்தை மறந்து, ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தை மறந்து, உணவை மறந்து இறுதியில் தங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது என்பதையே மறந்து விடுகிறார்கள்.ஆனால் எதை நோக்கி நம் மனதை செலுத்த வேண்டுமோ அதில் தவறி விடுகிறோம். 
இதையும் தாண்டி தேவையற்ற காரியங்களில் நம் கவனத்தை செலுத்தி மதி இழந்தவர்களாகவும் ஆகிறோம்.


இன்று இயேசு இத்தகைய தன்மை உடையவராக நற்செய்தியில் சித்தரிக்கப்படுகிறார். அதற்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை மதி மயங்கியவர் என்பதாகும். ஆனால் இயேசுவின் இம்மதி மயக்கம் எப்படிப்பட்டது? எதன் அடிப்படையில் வந்தது என நாம் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.இயேசுவின் மதிமயக்கம் இறைபணியை அடிப்படையாகக் கொண்டது. இந்த மதிமயக்கம் எதிர்மறையானதல்ல மாறாக நேர்மறையானது.

ஆம். இயேசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கடவுளின் அன்பைப் பகிர்வதில் மதிமயங்கியவராக இருந்தார். கடவுள் பணி செய்வதே தனக்கு சிறந்த உணவு என மதிமயங்கி இருந்தார். மக்களுக்கு நற்செயல் புரிவதைவிட சிறந்த உணவு இல்லை என உணர்ந்து உணவைப்பற்றி கவலை கொள்ளாமல் இருந்தார். 

இன்று நாம் நம் வாழ்வை அலசிப்பார்ப்போம். நாம் நமது வேலைகளை எண்ணி மதிமயங்கி இருக்கிறோமா? வேலைகளே இன்றி வெறும் கேளிக்கைகளில் மதி மயங்கிக் கிடக்கிறோமா?  இல்லை உலக காரியத்தில் நம் மதியை இழக்காமல், செய்வதனைத்திலும்  கடவுளை முன்னிலைப் படுத்துகிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். கடவுளின் பணியில் நம் மனதை முழுமையாக செலுத்துவோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! நாங்கள் செய்வதனைத்திலும் இயேசுவைப் போல உமது பணியை முன்னிலைப்படுத்த வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்