பட்டாம்பூச்சி இனங்களும் பட்டாசு கழிவுகளும் | Veritas Tamil

சிறுமலை மலைப்பகுதியில் 129 பட்டாம்பூச்சி இனங்கள் - கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலை மலைப்பகுதியில் 129 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டி.என்.பி.எஸ்.,) கோயம்புத்தூர், திண்டுக்கல் வனக்கோட்டம் ஒருங் கிணைந்து பட்டாம்பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தின. கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1600 மீட்டர்கள் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13.987 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கி மதுரை மாவட்டம் வரை மலைப்பகுதி நீண்டுள்ளது. இதில் புதர்க்காடுகள் தொடங்கி சோலைக்காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் அதிகம் உள்ளன. சிறுமலையில் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. சிறுமலை வாழை பிரசித்தி பெற்றது. இங்கு மிளகு உள்ளிட்ட பல மலைப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

இதமான தட்பவெப்பநிலையும் நிலவுகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த பட்டாம் பூச்சி அமைப்புடன் சேர்ந்து சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன், வனச்சரக அலுவலர் சிவா மற்றும் வனஊழியர்கள் பட்டாம்பூச்சி கணக் கெடுப்பை நடத்தினர். அக். 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 129 வகையான பட்டாம்பூச்சிக்கள் சிறுமலையில் இருப்பது தெரியவந்தது.

இவை 5 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்தவை. எதிர்கால ஆய்வுகளானது பறவைகள், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்கினங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட வன அலுவர் பிரபு தெரிவித்தார்.

 

சென்னை மக்கள் வெடித்த பட்டாசுகளின் கழிவுகள் 276 டன் - 5 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு

சென்னை: சென்னையில் தீபாவளியையொட்டி 276 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு உயர்வு ஆகும்.

சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது, சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு கனரக வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த வாகனங்கள் மூலம் 23, 24, மற்றும் 25 ஆகிய மூன்று நாட்களில் 15 மண்டலங்களிலும் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. மேலும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் 95 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இதன்படி 5 நாட்களில் மொத்தமாக 276 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் 120 கனரக வாகனங்களின் மூலமாக கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2017ம் ஆண்டு 85 டன், 2018-ம் ஆண்டு 95 டன், 2019-ம் ஆண்டு 103 டன், 2020-ம் ஆண்டு 138 டன், 2021-ம் ஆண்டு 211 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. இதன்படி பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் பட்டாசு கழிவுகளின் அளவு 3 மடங்கு உயர்ந்துள்ளது.