திருத்தந்தையின் பிப்ரவரி மாத இறைவேண்டல் கருத்து ! | Veritas Tamil

துன்பங்களுக்கு மத்தியிலும், நோயுற்ற குழந்தைகளின் வலுவிழந்த உடலும் புன்னகையும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் சான்றாக உள்ளன என்று மொழிந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ. 

பிப்ரவரி 05, புதனன்று, வெளியிடப்பட்டுள்ள பிப்ரவரி மாதத்திற்கான செபக்கருத்து அடங்கிய காணொளி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, தனது முழு கருத்தையும் செப வடிவில் வழங்கியுள்ளதுடன் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் உலகளாவிய ஒன்றிப்புக்காக அழைப்புவிடுத்துள்ளார்,

நோயுற்ற குழந்தைகளுக்கு முறையான மருத்துவ பராமரிப்பும், இரக்கத்துடன் கூடிய கவனிப்பும் மற்றும் சமூகத்தின் அரவணைப்பும்  கிடைக்க வேண்டும் என்று இறைவேண்டல் செய்துள்ள திருத்தந்தை, 
துன்புறும் நேரங்களில் நம்பிக்கையை இழக்காமல், விசுவாசத்தின் சாட்சிகளாகத் திகழ அவர்களின் குடும்பங்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தனது ஆசீர்வாதத்தை வழங்கியுள்ள திருத்தந்தை, அவர்கள் தூய ஆவியாரால் ஒளியூட்டப்பெறவும், அவர்களின் பணி இரக்கம், பொறுமை, இளகிய மனம் ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

துன்புறும் ஒவ்வொரு குழந்தையிலும் இறைவனைக் காணவும், அன்பு, கனிவு மற்றும் ஒருமைப்பாட்டின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் அக்குழந்தைகளுக்குப் பதிலளிக்கவும் சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

ஒரு திருஅவையாக, நாம் வலுவின்மையை நிலைநிறுத்தி, துன்பங்களுக்கு மத்தியிலும், ஆறுதலின் ஊற்றாகவும், நம்பிக்கையின் விதையாகவும், புதிய வாழ்வின் ஆதாரமாகவும் திகழ்வோம் என்று கேட்டுக்கொண்டு பிப்ரவரி மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.