இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைக்கும் ஒடிசா கத்தோலிக்க இளைஞர்கள் ! | Veritas Tamil

ராஜ்காங்க்பூரைச் சேர்ந்த கத்தோலிக்க இளைஞர் பிரதிநிதியான ஷில்பா எக்கா, பூர்வீக மக்களை பாதிக்கும் பெரிய தொழில்துறை திட்டங்களால்  நீண்டகால பழங்குடி மக்களின் நிலத் பிரச்சனைகளில் தலையிடுமாறு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க இளைஞர்கள், பழங்குடி சமூகங்களை பாதித்து வரும் முக்கிய தொழில்துறை திட்டங்களால் உருவான நீண்டகால நிலப் பிரச்சினைகளில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.

“பழங்குடி மக்களுடன் நின்று அவர்களை காக்குமாறு” வேண்டுகோள் விடுத்துள்ளனர்  இந்த நகரம் மாநிலத் தலைநகரமான புவனேஸ்வரத்திலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.“லாஞ்சிபெர்னா பகுதியில் டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் (DCBL) நிறுவனம் பழங்குடி நிலங்களை ஆக்கிரமித்ததாலும், இதுபோன்ற பிற கார்ப்பரேட் நடவடிக்கைகளாலும் எங்கள் மக்களுக்கு அளவிட முடியாத துன்பங்கள் ஏற்பட்டுள்ளன,” என்றும் அவர் கூறினார்.

பழங்குடி சமூகங்களின் உரிமைகள், மரியாதை மற்றும் பாரம்பரிய நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்காக குடியரசுத் தலைவரின் தலையீடு அவசியம் என இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், பல பழங்குடி பெரும்பான்மை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து, நில அபகரிப்பு, கட்டாய இடம்பெயர்வு மற்றும் பழங்குடி உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் பலவீனமாக நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த கவலைகளை முன்வைத்தனர்.

“எங்கள் அரசியலமைப்பு பழங்குடி சமூகங்களுக்கு சிறப்பு பாதுகாப்புகளை உறுதி செய்கிறது. ஆனால் நடைமுறையில் அவை பல நேரங்களில்  புறக்கணிக்கப்படுகின்றன ,” என்று மனுவில் கூறப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், சட்டப்படி நிலங்கள் மீட்கப்படவும் குடியரசுத் தலைவரின் தலையீடு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வளர்ச்சி என்பது அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும், பழங்குடி மக்களின் பண்பாட்டு வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

சட்ட நிபுணர்கள் கூறுவதாவது, அரசியலமைப்பின் ஐந்தாம் அட்டவணையின் கீழ், திட்டமிடப்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணித்து, பழங்குடி நலன்களை பாதுகாக்கும் சிறப்பு பொறுப்பு இந்திய குடியரசுத் தலைவருக்கு உள்ளது. இதன் அடிப்படையில், மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கைகளை கோரியும், தேவையான திருத்த நடவடிக்கைகளை பரிந்துரைத்தும் குடியரசுத் தலைவர் தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வேண்டுகோள், குடிமக்கள் அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உரிமை அடிப்படையிலான போராட்டங்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இறுதியாக இதுவரை குடியரசுத் தலைவர் அலுவலகம் அல்லது ஒடிசா மாநில அரசு தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. இருப்பினும், தெளிவான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அமைதியான வழிகளில் விழிப்புணர்வு இயக்கங்களையும் ஆதரவு முயற்சிகளையும் தொடருவோம் என இளைஞர் குழு உறுதி கொண்டுள்ளது.