மந்திர வழிகள் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

வாழ்க்கை வாழ்வதற்கே....
வாழ்க்கை பல வரங்களைத் தருகிறது.

புதியனவற்றைப் படைக்கும் ஆற்றல் கொண்டவர் எங்கும் வாய்ப்புகளையும், வரங்களையும் காண்கிறார். இந்த வாய்ப்புகளையும், வரங்களையும் பயன்படுத்த சிறிதளவு தன்னம்பிக்கை போதும்.

தன் இசையால் எல்லோரையும் கவரும் தன்மை படைத்தவர் வயலின் வித்வான் ஃபிரிட்ஸ் க்ரெய்ஸ்லர். மிகவும் அழகான வயலின் இசைக்கருவியை வாங்க அவர் ஆவல் கொண்டார். ஆனால், அவரிடம் போதுமான பணம் இல்லை. எனவே, அவர் சென்று பணத்தைச் சேர்த்து அதே இசைக்கருவியை வாங்கவந்தார். ஆனால், அது ஏற்கனவே விற்பனையாகி விட்டதை அறிந்து மிகவும் வருந்தினார். வயலின் வாங்கிச் சென்ற உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்கு அந்த வயலினை விற்றுவிடுமாறு வற்புறுத்திக் கேட்டார். ஆனால் அவரோ, "என்னுடைய விலைமதிப்புமிக்க சொத்துகளில் இதுவும் ஒன்று, அதைத் தர முடியாது" என்று மறுத்துவிட்டார். மனமுடைந்த க்ரெய்ஸ்லர் அங்கிருந்து புறப்படுமுன், “நான் ஒருமுறை இதை வாசித்துப் பார்க்கலாமா!" என்று கேட்டார். அனுமதி கிடைத்ததும், அளவிலா சந்தோஷத்தோடு தன்னையே மறந்து, கேட்பவரையும் மறக்கச்செய்யும் அளவுக்கு அருமையாக வாசித்தார். திகைப்பு மாறாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்த உரிமையாளர், "இது என்னிடம் இருந்தால், அது வெறும் அழகுக்காக மட்டும்தான். இதை வைத்திருக்க எனக்கு உரிமையே இல்லை. இது உன்னுடையது. எடுத்து செல். அனைவருக்கும் பயன்படும் வகையில் இசையை மீட்டு" என்றார்.

நீங்களும் நானும் இந்த நேர்த்தியான இசைக்கலைஞரைப் போன்றவர்கள். தன்னம்பிக்கையோடு, பிறருக்கும் பயன்படும் வகையில் வாய்ப்புகளையும், வரங்களையும் வாழும்போதுதான் அவை உயர்ந்த மதிப்புடையதாகிறது. வாய்ப்பும், வரமும் எப்போதும் வராது. ஆனால், வருகின்றபோது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வோம். இந்தத் தன்னம்பிக்கையின் மூன்று மந்திர வழிகள்.

செய் (Do it)

எதையாவது செய்யவேண்டும். இது தன்னம்பிக்கைக்கு வலிமை தரக்கூடியது. எதுவும் செய்யாதிருத்தல் பயத்தின் வெளிப்பாடு. ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட, எதையாவது செய்வதில்தான் 'செய்' என்னும் வார்த்தை முழுமை பெறுகிறது.

சரியானதைச் செய் (Do it right)

காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றாற்போல் வாய்ப்பைப் பயன்படுத்தி, பிறருக்கு நன்மை தரக்கூடிய வகையில் சரியானதைச் செய்யவேண்டும். சிறியதோ, பெரியதோ உரிய வழியில், தகுந்த முறையில் செய்யவேண்டும்.

சரியானதை இப்பொழுதே செய் (Do it right now)

“இப்பொழுது” இது மிகவும் முக்கியமானது. எதையும் சரியானதாக, பயனுள்ள வகையில் செய்யக்கூடிய நேரம். இப்பொழுதுதான். இந்த மணித்துளிதான்.

வாய்ப்பும் வரமுமான இந்த மணித்துளிகளை மூன்று மந்திர வழிகளைக் கொண்டு தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.

Tamil Survey Popup Image