அம்மானா ! சும்மாவா! | அருட் சகோதரி செலஸ்டி சலேஸ், SSAM | Veritas Tamil

அம்மானா !

              சும்மாவா!

தன்னுயிர் தந்து இன்னுயிர் ஈந்து அன்னை 
படைத்தாள் உன்னைப் படைத்தவனின் திட்டப்படி 
படைத்தவனின் சித்தப்படி அம்மான்னாஇ சும்மாவா?

ஒவ்வொரு அம்மாவும்,
ஆரிரோ பாடி, நாடி, தேடி, ஓடி, வளர்க்கிறாள். 
சக்தியைக் கூட்டி, புத்தியைத் தீட்டுகிறாள்
பிறரன்பைக் காட்டி, பேரன்பைச் சூட்டுகிறாள் 
நடக்க கைக்கொடுத்துஇ படைக்க மைக்கொடுக்கிறாள் 
கனிவோடுப் பார்த்து. துணிவோடுக் காக்கிறாள் 
உள்ளதைக் கொடுத்து, நல்லதைத் தொடுக்கிறாள் 
மெல்லமாய் பேசி, செல்லமாய் ஏசுகிறாள்

வாரியணைத்து முத்தமிட்டு, தாவியணைத்து சத்தூட்டுகிறாள் 
சுவையோடுச் சமைத்து, கதையோடுக் களிப்பூட்டுகிறாள் 
தூக்கம் தழுவும் வரை, தூங்காது தழுவுகிறாள் 
படித்திட உதவுவாள், அடித்திட தயங்குவாள் 
சிந்தித்து, சவாலைச் சந்தித்துச் சமாளிப்பாள் 
எறும்பு போல் உழைப்பாள். இரும்பு போல் நிலைப்பாள்
கேட்பதையெல்லாம் கொடுப்பாள், கேளாத்தை முடிப்பாள் 
சுத்தமாய் இருப்பாள், சத்தமாய் சிரிப்பாள் 
ஊக்கு தான்விற்பாள், சிகரம் காண ஊக்குவிப்பாள் 
தன்கண்ணீர் பாராது, உன் கண்ணீர் வாராது பார்ப்பாள் 
கொஞ்சி மகிழ்வாள் மழலையை, பிழையைக் கெஞ்சி அகழ்வாள்

அம்மானா ! சும்மாவா ! பூமித்தாயைக் காட்டிய தாயின், 
பூவடி விழுந்து வணங்குவோம். உன்னைச் சிறப்பு செய்த தாய்க்கு 
நீ செய்யும் சிறப்புத் திண்ணையா? 
உன் மீது பைத்தியமாக இருக்கும் அன்னையை, 
பைத்தியமென கருதி கைதியாக்கினாயோ? 
நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக்குது. 
இதயம் கனக்குது. அன்னையரை அரவணைப்போம், ஆண்டவரை வரவழைப்போம்.

எழுத்து

அருட் சகோதரி செலஸ்டி சலேஸ், SSAM