கூடா நட்பு கேடாய் விளையும்! | Veritas Tamil
அடர்ந்தக் காடு! நரி ஒன்று புதரிலிருந்து வெளியே வந்தது. இன்றைக்குரிய இரையைத் தேட நினைத்தது. இன்றைக்கு வழக்கத்திற்கு மாறாகப் பசி அதிகம் எடுத்தது. சின்னதோ பெரியதோ கிடைப்பதைக் கொன்று சாப்பிட வேண்டும் என்று முடிவுக்கு வந்தது. கழுத்தை உயர்த்தி ஊளை இட்டது. நரி ஊளை இட்டது கோபத்தின் அடையாளம். நரியின் ஊளையிட்ட சத்தத்தைக் கேட்டு சிறிய விலங்குகள் புதருக்குள் மறைந்தன.
நரி இருந்த இடத்திலிருந்து 30 அடி தூரத்தில் கொழு கொழு என்று முயல் ஒன்று வந்து நின்றது.வெள்ளை வெளேர் நிறத்துடனும் உயர்ந்தும் பருத்தும் இருந்தது. நரிக்கு நாக்கில் எச்சில் ஊறியது. இந்த முயலை கொன்று சாப்பிட்டால் ஒரு வாரத்திற்குப் பசி எடுக்காது என்று கற்பனை செய்தது. ஆனால் நரிக்கு அதிர்ச்சியாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
முயல் நரியைப் பார்த்து பயந்து ஓடுவதற்குப் பதிலாக ஹாலோ! நரியாரே! காலை வணக்கம்! எப்படி இருக்கிறீங்க? என்று கேட்டது. நரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்தக் காட்டில் நான் யார் என் குணம் என்ன? என்று எல்லா விலங்குகளுக்கும் தெரியும். அப்படி இருந்தும் இந்த முயல் என்னைப் பார்த்து காலை வணக்கம் சொல்லி நலம் விசாரிக்கிறது. கொஞ்சம் கூட பயம் இல்லை. இந்த முயல் ஒரு வித்தியாசமான விலங்காக இருக்கிறது. அடித்துக் கொல்வதை விட்டுவிடுவோம். அன்பாக பழகிப் பார்ப்போம். மெதுவாக முயல் அருகில் சென்றது. புதரில் மறைந்திருந்த சிறிய விலங்குகள் எல்லாம் என்னதான் நடக்கப்போகிறது என்று ஆவலுடன் பார்த்தன. முயலினுடைய வாழ்க்கை இன்றோடு முடியப் போகிறது. நரி தந்திரம் தெரியாமல் நரியுடன் பழகுகிறது. ஐயோ! பாவம்! தந்திரம் தெரியாமல் நரியும் முயலைப் பார்த்து நலம் விசாரித்தது. முயலுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. முயல் தம்பி உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லு என்றது.
நானும் இந்தக் காட்டில்தான் இருக்கிறேன். எனக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள்.மலை இடுக்கில் தங்கியிருக்கிறோம். என் உறவினரும் அங்குதான் இருக்கிறார்கள். புல்லை சாப்பிடுவோம். கிடைத்தால் காய்கனிகளையும் திண்போம். யாரையும் கொல்லமாட்டோம்.
உன்னைப்பற்றி மிகவும் பயங்காரமாக சொன்னார்கள். ஆனால் சொன்னதற்கு மாறாக நீ சாதுவாகப் பழகுகிறாய். உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று முயல் சொன்னது. நரி சந்தோஷம் பட்டது.
சரி! இன்றைக்கு இது போதும். நாளைக்கு சந்திக்கலாம் என்று கூறிவிட்டு நரி முயலைவிட்டுப் பிரிந்து சென்றது. நரிக்கு ஒன்றும் விளங்கவில்லை. காலையில் கிடைத்த கொழு கொழு முயலை அடித்துக் கொல்லாமல் வந்து விட்டோமே! என்ன துணிச்சல் இருந்தால் நம்முடன் பழகுவதற்கும் முன் வந்திருக்கிறது. முயலுக்கு நல்ல காலம்! இன்று தப்பித்துவிட்டது.
சில வாராங்கள் மாதங்கள் ஓடின. காட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. இரையாக எதுவும் கிடைக்கவில்லை. அரைவயிறு உணவு என்ற நிலைக்கு வந்துவிட்து. வழக்கம் போல் முயல் நண்பணைச் சந்தித்தது. காட்டின் பஞ்ச நிலையை இருவரும் பகிர்ந்து கொண்டன. நரிமீது இரக்கம் கொண்ட முயல் தன் குட்டிகளில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து இரையாகக் கொடுத்தது. நரி அந்த முயல் குட்டியை துடிதுடிக்க கொன்று திண்றது. முயலுக்கு நன்றி கூறியது.
மேலும் காட்டில் பஞ்சம் தீவிரம் அடைந்தது. முயல் வாரம் ஒரு குட்டிவீதம் தூக்கிக் கொண்டுவந்து நரிக்கு இரையாகக் கொடுத்தது. நரிக்கு அளவு கடந்த சந்தோஷம். முயலைப் பார்த்தவுடன் கொல்லாமல் விட்டது சரியாகப்பட்டது. முயல் கடைசி குட்டியையும் இரையாகக் கொண்டுவந்து கொடுத்தது. இப்போது முயல் மட்டும் இருந்தது. நரி முயல்வரும் வழியில் பதுங்கியிருந்தது. முயல் நரி நண்பனைப் பார்க்க வந்தது. நரி எதுவும் தெரியாததுபோல முயல் மீது பாய்ந்து கொன்றது. கூடா நட்புக் கேடாய் முடிந்தது என்று கூறி எல்லா முயல்களும் வருத்தப்பட்டன.
நம் வாழ்க்கையில் நாம் பழகும் மனிதர்களின் உண்மையான குணத்தை தெரிந்துகொண்ட பழக முற்படுவோம். இல்லையெனில் அது நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சார்ந்து இருப்பவர்கள் அனைவரையும் அது பாதிக்கும்.
கூடா #நட்பு கேடாய் விளையும்! சிந்தித்து செயல்படுவோம்!!
எழுதியவர் - ராஜாத்தி
Source - 'அன்பின் சுவடுகள்' மதஇதழ்.