சுயநலம் மறந்து பிறர்நலம் பேணுவோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
சுயநலம் மறந்து பிறர்நலம் பேணுவோம்!
நாம் ஒவ்வொருவரும் நமக்காக வாழாமல் நம்முடன் வாழும் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்றுதான் கடவுள் விரும்புகிறார். நாம் ஒவ்வொருவருமே ஒரு குடும்பமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பம் என்கிறபோது ஒருவர் மற்றவருக்காக விட்டுக் கொடுப்பது இயல்பாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள நபர்களோடு நாம் ஒத்துப்போகாத வாழ்க்கை வாழ்ந்தோம் என்றால் சுயநல எண்ணத்தோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். பல சமயங்களில் நம்மிடம் நாம் என்கிற உணர்வைவிட நான் என்ற உணர்வுதான் மேலோங்கி காணப்படுகிறது. இந்த உணர்வு நம்மை நல்வழியில் நடத்திச் செல்லாது. எனவே நாம் நமக்காக வாழ்வதை மட்டுமே முன்னிலைப்படுத்தாது சிறிது மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்காக வாழ நம்மை பயிற்றுவிப்போம். நமக்காக வாழ்வதைவிட மற்றவர்களுக்காக வாழும்போது நிச்சயம் அது மகிழ்ச்சியை தரும் என்பதை மனதில் பதிப்போம்.
வீடு, குடும்பம், சமூகம், நாடு என்பனவெல்லாம் ஏன்? எதற்காக? மனிதன், தனக்கு மட்டும் வாழ்வதை விடுத்து, வீட்டிற்காக, குழுவிற்காக, சமூகத்திற்காக, நாட்டிற்காக வாழ்வதற்காகவே. அதனால்தான் சான்றோர், வாழ்க்கையை அறம் என்று போற்றினர். தனக்கு என வாழும் மனப்போக்கை விட்டு, எல்லோரும் வாழ இருப்பதால்தான், தங்கும் இடம்,வீடு எனப்பட்டது. தன் பற்றை விடுவிப்பதெதுவோ அதுவே வீடு. சுயநலப்பற்றை மிகுவிப்பவைகள் வீடுகள் அல்ல காடுகளே. வீடு என்பது சமூகத்தின் உறுப்பு ஆகும். தனித்தீவு அல்ல. மனித மனத்தின் விலங்குக் குணத்தை ஒழித்துத் தாய்க் குணத்தை உருவாக்கும் பள்ளியே வீடு அல்லது இல்லம். சமூக ஒழுங்கிற்குக் குடும்பமே அடிப்படையாய் அமைந்து விட்டது. மரம், மற்றவர்களுக்கு நிழல் தருகிறது. வானம் மழை தந்துதவுகிறது. உலகில் உள்ள யாவுமே ஒரு வழியிலோ, பல வழிகளிலோ மற்றவர்களுக்கு தொண்டாற்றுகின்றன. அப்படியேதான் மனிதமும். எனவே நானை விடுத்து, நாமைத் தேடுவோம். அதுவே நம்மை உயர்ந்த மனிதர்களாக்கும்.
நாம் நமக்காக வாழ்வதை மட்டுமே முன்னிலைப்படுத்தாது சிறிது மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்காக வாழ்வோம்.