இயேசுவின் அதிகாரம் நம்மை விடுவிக்கும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 13ஆம் வாரம் – புதன்

ஆமோஸ் 5: 14-15, 21-24
மத்தேயு 8: 28-34

 இயேசுவின் அதிகாரம் நம்மை விடுவிக்கும்!
 
முதல் வாசகம்.

இன்றும் இறைவாக்கினர் ஆமோஸ் பேசுகிறார். இறைவன் தனது மக்களை நன்மையை நாடி, தீமையை விட்டு விலகி, நீதி மற்றும் நேர்மையை நிலைநாட்டுமாறு அழைக்கிறார் என்ற செய்தியை மையப்படுத்துகிறார். 

வெறும் வெளிப்புற வழிபாடுகள், திருவிழாக்கள், பகழ்ச்சிப்  பாடல்கள் ஆகியவற்றால் அவர் மகிழ்வதில்லை; மாறாக, மனிதர்களின் வாழ்வில் நீதி ஆற்றைப் போலவும், நேர்மை வற்றாத நீரோடையைப் போலவும் பெருக வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும். உண்மையான இறைவழிபாடு என்பது நீதியுடனும் இரக்கத்துடனும் வாழ்வதாகும் என்பதை ஆமோஸ அன்று வழிதவறிய வடநாட்டு மக்களுக்கு வலியுறுத்தியதை வாசிக்கிறோம்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், மத்தேயு மற்றொரு முக்கிய செய்தியைத் தருகிறார். இயேசு கெரசேனரின் நாட்டிற்கு வந்தபோது, பேய்கள் பிடித்திருந்த இரு மனிதர்களைச் சந்தித்தார். அவர்களில் இருந்த பேய்கள் இயேசுவின் அதிகாரத்தை அறிந்திருந்ததால்,  தங்களைத் துன்புறுத்தாமல், பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பும்படி வேண்டின. இயேசு அனுமதித்தவுடன், பேய்கள் பன்றிகளுக்குள் புகுந்தன, பின்னர் அவை அனைத்தும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து  மடிந்தன.   
இதைக் கேள்வியுற்ற பன்றிகளின் உரிமையாளர்கள்  இயேசுவின் வல்லமையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பன்றிகளின் இறப்பால் தங்களுக்கு மேலும்  நட்டம் ஏற்படுவதைத் தடுக்க இயேசுவை அந்த ஊரை விட்டு வெளியேறுமாறு அவரிடம் வேண்டினர்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ்,  உண்மை கடவுளை வட்டு விலகிய வடநாட்டு இஸ்ரயேல் மக்களை தீமையை விட்டு நன்மையை நாடுங்கள் என்றும், நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுங்கள் என்றும்,  நிறைவகா, அவர்களது வாழ்வில், "நீதி நீரைப்போலும், நேர்மை வற்றாத ஆற்றைப்போலும் பெருகட்டும்" (ஆமோஸ் 5:24) என்று இறைவன் விரும்பும் உண்மையான இறைபக்தியை இரு உவமைகளைக் கொண்டு விவரிக்கிறார். 

•    “நீதி நீரைப்போலும் பெருகட்டும்” என்றால், நீர் எப்படி தடையில்லாமல் தொடர்ந்து ஓடுகிறதோ அதுபோல, மனித வாழ்க்கையில் நீதி எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். நீதி என்பது சில சமயங்களில் மட்டும் அல்ல, தினமும் செயல்பட வேண்டியது என்பதை இப்படியாக ஆமோஸ் எடுத்துரைக்கிறார். 

•    “நேர்மை வற்றாத ஆற்றைப்போலும்” என்றால், வற்றாத ஆறு எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது போல, நேர்மை ஒருபோதும் குறையாமல், நிலைத்திருக்கும் பண்பாக இருக்க வேண்டும் என்பதாகும். அது சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியது அல்ல என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

ஆம், "உண்மையான இறைவழிபாடு என்பது சடங்குகளில் அல்ல; நீதி, நேர்மை, இரக்கம் மற்றும் நன்மையை வாழ்வில் செயல்படுத்துவதில்தான் உள்ளது” என்பது தெள்ளத் தெளிவாகிறது. இறையரசை நாம் நாட வேண்டும் என்பது இயேசுவின் படிப்பினை. இறையரசு  என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது என்று இறையரசின் தன்மையை பவுல் அடிகள் விவரிக்கிறார், (உரோ 14:17)

பேய்கள் இறையரசின் எதிரிகள். பேய்கள் மக்களை இறையரசுக்கு எதிராகச் செயல் படத்தூண்டுபவை. இயேசு அவற்றின் பிடியிலிருந்து விடுவித்து இறையரசின் மக்களாக அந்த இருவரை நடமாடவிடுகிறார். ‘எனவே, கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்’ என்று புனித யாக்கோப்பு அறிவுறுத்துகிறார் (4:7) .

ஆகவே, இன்று முதல் இயேசுவுக்கு தீய ஆவிகளின் மீதும் முழு அதிகாரம் உண்டு என்பதை நாம் ஏற்பதோடு, உலகினருக்கும் எடுத்துரைக்க வேண்டும். . அவர் மனிதனை பாவம் மற்றும் தீமையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க விழைகிறார் . ஆனால், அவருடைய மீட்பை ஏற்றுக்கொள்வதா அல்லது உலக நலன்களையே முன்னிலைப்படுத்துவதா என்பது நமது தேர்வாக உள்ளது.

இறைவேண்டல்.

இரக்கத்தின் ஆண்டவரே.  என மனதையும் வாழ்வையும் கட்டிப்போடும் பாவம், பயம், தீய பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து என்னை முழுமையாக விடுவித்தருள்வீராக. ஆமென்.
  


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452