மக்களோடு மக்களாக ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு நடைபயணம் - பேராயர் ஜார்ஜ் ஆண்டனிசாமி | Veritas Tamil

மக்களோடு மக்களாக பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு நடைபயணம் மேற்கொண்ட பேராயர்
சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் டாக்டர் ஜார்ஜ் ஆண்டனிசாமி அவர்கள் பெசன்ட் நகர், வேளாங்கண்ணி அன்னையின் திருத்தலத்திற்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருப்பயணத்தை வழிநடத்தினார்.
05.09.2025, இன்று காலை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் ஆண்டனிசாமி அவர்கள் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு தனது வழக்கமான ஆண்டு திருப்பயணத்தை நடைபயணமாக மேற்கொண்டார். இத்திருப்பயணத்தில் பேராயர் அவர்களுடன் உயர் மறை மாவட்ட நிர்வாக அருட்தந்தையர்களும் இணைந்து, திருவிழா காலத்தில் இந்த திருத்தலத்தை நோக்கி யாத்திரை செய்யும் கோடிக்கணக்கான பக்தர்களோடு ஒன்றிணைந்து நடந்தனர்.
திருப்பயணம் சாந்தோமில் உள்ள பேராயர் இல்லத்திலிருந்து தொடக்க ஜெபத்துடன் ஆரம்பித்து. பெசன்ட் நகர் திருத்தலத்தில் காலைத் திருப்பலியுடன் நிறைவுற்றது. திருப்பயனத்தின்போது, பேராயரும் நிர்வாக அருள்தந்தைகளும் தங்களுடன் சேர்ந்து நடப்பதை கண்ட நம்பிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து ஆழ்ந்த பக்தியில் மூழ்கினர்.
திருப்பயணம் முழுவதும், பேராயர் ஜார்ஜ் ஆண்டனிசாமி அவர்கள் மறைமாவட்டத்திற்காகவும் அனைத்து நம்பிக்கையாளர்களுக்காகவும் வேண்டிக்கொண்டார். திருத்தலத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறையுரை ஆற்றும் போது அவர் சீடத்துவம் குறித்த நற்செய்தி அழைப்பை சிந்தனைக்கு கொண்டு வந்து “இயேசு அழைத்தபோது, அவருடைய சீடர்கள் உடனே சென்றார்கள். இன்று இயேசு நம்மை அழைத்தால், நம்மில் எத்தனை பேர் அவருடன் செல்லத் தயாராக இருப்போம்?” என்ற கேள்வியோடு அனைவரையும் சிந்திக்க அழைத்தார்.
பேராயரின் இந்த ஆண்டு திருப்பயணம், நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவோடு தங்கள் உறவை ஆழப்படுத்த ஆரோக்கிய அன்னையின் வழியாக ஊக்குவிக்கும், மேய்ப்பனின் அன்பின் அடையாளமாகத் திகழ்கிறது.
Daily Program
