நமது நம்பிக்கையொளி, பிறரில் இருளகற்றட்டும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

22 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 25ஆம் வாரம் – திங்கள்
 
எஸ்ரா 1: 1-6
லூக்கா 8: 16-18

நமது நம்பிக்கையொளி, பிறரில் இருளகற்றட்டும்! 

 

முதல் வாசகம்.


யார் எஸ்ரா?

இன்றைய முதல் வாசகம் எஸ்ரா நூலிலிருந்து எடுக்கப்பட்டது. எஸ்ரா என்பவர ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். பாபிலோனில் சிறைப்பிடக்கப்ட்ட மக்களை சைரஸ் மன்னன் விடுவுத்த போது, யூதர்கள் இரு பிவுகளில் சொந்த நாடான யூதேயாவுக்குத் திருப்பினர். எஸ்ரா என்ற குரு இரண்டாவது குழுவில் சொந்த நாடு திருப்பினார். இவர், பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்ப மிகவும் உதவினார் என்பது விவிலிய வரலாறு. மேலும், யூதர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.  

பாரசீக மன்னர் சைரஸ் பாபிலோனில் நாடுகடத்தப்பட்டவர்களை விடுவிப்பவராக மட்டுமல்லாமல், எருசலேமில் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பின்னால் இருந்த சக்தியாகவும் இருந்தார்.  யூதர்கள் ஒரு அந்நிய மன்னர் (சைரஸ்)  தங்கள் வாழ்க்கையில் விடுதலை மற்றும் மறுகட்டமைப்பிற்கு கடவுள் அனுப்பிய ஆதாரமாக இருப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

சைரஸ் யூதர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவுடன், அவர் அவர்களை எருசலேமுக்கு அனுப்பி ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவினார். அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமட்டுமல்லாமல், அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும், மற்றப் பொருள்களையும்,  விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 
நற்செய்தி.


நற்செய்தியில், விளக்கின் நோக்கம் ஒளியைக் கொடுப்பதுதான் என்பதை இயேசு கூட்டத்தினருக்கு நினைவூட்டுகிறார். விளக்கை ஒரு பானையால் மூடினால் அல்லது விளக்கை படுக்கைக்கு அடியில் மறைத்தால், அது விரும்பியபடி அதன் கதிர்களைப் பரப்ப முடியாது. இந்த உவமையின வழி, கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தால் இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும், இல்லாதவர்கள் பகிர்ந்து கொள்ளாததால் அவர்களிடம் உள்ள சிறியவையும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இயேசு குறிப்பிடுகிறார்.


சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில், கீழ்ப்படியாத, அந்நிய தெய்வங்களை வழிபட்ட  யூதர்களை கடவுள் பாபிலோனியர் வசம் ஒப்படைத்தார். பாபிலோனில் துன்புற்றனர், விடுதலைக்கு ஏங்கினர், குற்றத்தை நினைத்து அழுதுப் புலம்பினர். கடவுள் அந்நிய அரசன் சைரஸ் வழியாக அவர்களுக்கு விடுதலை அளித்ததோடு, சொந்த நாட்டுக்கு அனுப்பிவைத்தார்.  ஆம், அந்நிய நாட்டில் கடவுளை அழுதுப் புலம்பி அழைத்த யூதர்கள் மட்டில் அவர் மனமிரங்கினார். எனவே,  கடவுளாகிய ஆண்டவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற படிப்பினை  நமக்கு கொடுக்கப்படுகிறது.
‘உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும்  எடுத்துக் கொள்ளப்படும்’ என்பது ஆண்டவரின் அறிவுறுத்தலாக இன்று உள்ளது. ஆண்டவரின் இந்த கூற்றுக்குச் பொருள் அறிதல் இன்றியமையாதது. 

நிச்சயமாக, நம் ஆண்டவர் நம்மிடம் அதிக பணம் இருந்தால், நாம்  அதிகமாகப் பெறுவோம்  என்றோ, நாம் ஏழையாக இருந்தால், நாம் மேலும் ஏழையாகிவிடுவோம்  என்றோ  சொல்லவில்லை. மாறாக, வசதிபடைத்தோரில், பிறரோடு மனமுவந்துப் பகிர்வோருக்கு கடவுள் மேலும் கொடுத்துக்கண்டே இருப்பார் என்றும், கஞ்சத்தனம் கொண்டோர் மீதோ கடவுள் இரக்கம் காட்டாமல் உள்ளதையும் எடுத்துக்கொள்வார் என்று நினைவூட்டப்படுகிறோம்.

மேலும், இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் இயேசு எரியும் விளக்கை மையமாக வைத்து, ஓர் உவமையைக் கூறுகிறார்.  விளக்கை ஏற்றும் ஒருவர் அதைப் பாத்திரத்தால் மூடிவைத்தால், அல்லது கட்டிலின் அடியில் வைத்தால், அவருக்குப் பயனேதும் கிட்டாது. அவர் இருளில்தான இருக்க நேரிடும். இருளில் உள்ளவரால் யாருக்கு என்ன பயன்?

இருள் பரவியிருந்த உலகின் மீது கடவுள் ஒளியைப் படைத்து, இருளையும் ஒளியையும் பிரித்தார் (தொ.நூ. 1:3) ஏனெனில், தம் மக்களை ஒளியின் மக்களாக வாழ வைக்க விரும்பினார். ஆனால், மக்களோ ஒளியைக் காட்டிலும் இருளை விரும்பும் மக்களாக வாழத்தொடங்கினார். இதன் விளைவாக, உலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. இருளை அகற்ற ஒரே  வழி, நம்மில் ஒளியே ஏற்றுவதாகும். 

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் ஒளி வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது. மரித்த ஆண்டவர் அவரது உயிர்ப்பினால் நம்மில் நிலைவாழ்வுக்கான ஒளியை ஏற்றியுள்ளார். பாஸ்கா திருவிழிப்பில் இந்த உண்மை நமக்குப் புலப்படுத்தப்படுகிறது.  நாம் பெற்ற ஒளி நாம் வாழுமிடங்களில் ஒளிர வேண்டும். நம்மைச் சுற்றியுளோர் உண்மை எனும் ஒளியில் வாழ நாம் ஒளிர வேண்டும். 

கிறிஸ்தவ வாழ்வில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இருளுக்கும் ஒளிக்கும் பணிவிடை செய்ய இயலாது. கடவுளுடனான நமது உறவை தைரியமாக அறிவிக்கவும் சாட்சியம் பகரவும் துணிவு தேவை. இந்த வரத்திற்காக தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.  இதயத்தில் எழும் எண்ணங்கள் பற்றி நாம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில் நம் எண்ணங்கள் கட்டுக்கடங்காத குதிரைகள் போல இங்கும் அங்கும் இருளை நாடி ஓடிக்கொண்டே இருக்கும்.  இருளை விலக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. அது கடவுளுடைய வார்த்தையைக் கவனமாகக் கேட்கவும், பயமின்றி நமது ஒளியைப் பிரகாசிக்க விடவும் முயற்சிபதாகும்.  

வாழ்வில் வெளிச்சத்தை ஏற்றுதல் என்பது, கடவுளின் அன்புறவில் வாழ முற்படுவது என்றும் ஒளியான வாழ்க்கை என்பது, “இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வது என்றும பொருள்கொள்ளலாம். பாபிலோனில் அடிமை வாழ்வு வாழ்ந்த யூதர்களுக்கு சைரஸ் மன்னன் ஒளியாக வந்தார். அவர்கள் விடுதலைப் பெற்றனர். ஆகவே,  நமது வாழ்க்கை, வெளிச்சத்தைத் தேடும் விட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாய் இருக்க வேண்டுமேயொழிய,  இருட்டுக்குள் பதுங்கும் கரப்பான் பூச்சிகளாய் இருக்கக்கூடாது. நமக்கு நாமே உண்மையாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

இறைவேண்டல்.

'நானே வழியும், உண்மையும், வாழ்வும்' என்றுரைத்த ஆண்டவரே,  என்  வாழ்க்கைப்    இப்பயணத்திற்கு ஒளியாகவும், வழியாகவும் நீர் திகழ்வீராக. ஆமென்.

  


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452