நம்பிக்கை, நீதி, ஒற்றுமைக்கு இந்தோனேசிய ஆயர்கள் அழைப்பு | Veriats Tamil
மே 20 அன்று இந்தோனேசியா தனது 118வது தேசிய எழுச்சி நாளை கொண்டாடிய நிலையில், அந்த நாட்டின் ஆயர் பேரவை (KWI), சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, புதிய நம்பிக்கையுடன் முன்னேறுமாறு மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது.
“நம்பிக்கையில் ஒன்றிணைந்து எழுவோம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட மேய்ப்புப் பணிச் செய்தியில், உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மை, அரசியல் பதற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு சமூகப் பிரச்சினைகள் போன்றவை நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் சவால்களாக இருப்பதாக ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“உலக பொருளாதார மாற்றங்கள், வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி, சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் அனைத்தும் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடும்பங்களின் பொருளாதார சுமைகள், இளைஞர்களின் மனநலப் பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாதுகாப்பற்ற மக்களின் நிலை போன்றவற்றையும் ஆயர்கள் கவலைக்குரிய விடயங்களாக சுட்டிக்காட்டினர்.
மேலும், பப்புவா பகுதியில் நீடித்து வரும் பதற்ற நிலை குறித்து ஆயர்கள் கவலை வெளியிட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதுமான தீர்வாக அமையாது என்றும், அங்குள்ள மக்களின் வரலாறு, பண்பாடு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை மதிக்கும் மனிதநேய உரையாடலே உண்மையான தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களிடமும் சமமாகச் சென்றடைவதில்லை என்றும், வேலைவாய்ப்பின்மை, உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சமூக இடைவெளிகள் அதிகரித்து வருவதாகவும் ஆயர்கள் எச்சரித்தனர்.ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தனிநபர் லாப நோக்கங்கள் ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை பாதிக்கின்றன என்றும், அரசியல் மற்றும் பொருளாதாரம் பொதுநலனுக்காக செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“அரசியலும் பொருளாதாரமும் சிலரின் லாபத்திற்காக அல்ல; பொதுநலனுக்காக செயல்பட வேண்டும்” என்று ஆயர்கள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் ஆயர்கள் வலியுறுத்தினர். காடச்சேதம், மாசுபாடு மற்றும் இயற்கை வளங்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு குறித்து கவலை தெரிவித்த அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si’ சுற்றறிக்கையை நினைவுபடுத்தினர்.இறுதியாக, உரையாடல், ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் நாட்டில் நம்பிக்கையையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்த வேண்டும் என்று இந்தோனேசிய ஆயர்கள் மக்களிடம் அழைப்பு விடுத்தனர்.