விவசாயம் காப்போம்! | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

ஏர் பிடிப்பவர் இல்லையேல், என்றோ 
அழிந்திருக்கும் இந்த உலகம் பட்டினியால்!

விவசாயத்தில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள் போதுமான விளைச்சல் இல்லாததாலும், அதற்கு உரிய வருமானம் கிடைக்காததாலும் இன்று விவசாயப் பணியைத் துறந்து வருகின்றனர். விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கால்நடை மருத்துவம் படித்து, அமெரிக்காவில் பல இலட்ச லட்ச ரூபாயில் மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்தபோதும், அதையெல்லாம் மறுத்துவிட்டு இயற்கை விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக அதில் சாதித்து வருபவர்தான் கும்பகோணத்தில் வசிக்கும் ஆனந்தி என்பவர். 

தர்மபுரியைச் சொந்த ஊராகக் கொண்ட ஆனந்தி, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தும் படித்துக்கொண்டிருந்தார். இருவரும் விருப்பத்தோடும் பெற்றோரின் அனுமதியோடும் 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவரும் மேற்படிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டனர். அங்கு இருவரும் எம். எஸ். படித்தனர். கணவருக்கு அங்கேயே வேலை கிடைத்தது. ஆனந்திக்குக் கால்நடை மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் இருவரும் படித்துக்கொண்டிருந்தபோது எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் குறித்து அறிந்துகொண்டனர்." இந்த மருந்து பறவைகளை மட்டும் கொல்லும் உயிர்கொல்லி மருந்து அல்ல, மனிதர்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் உயிர்க்கொல்லி மருந்து என்பதை உணர்ந்துகொண்டனர். எனவே நம் மக்கள் நஞ்சில்லா உணவை உட்கொள்ள வேண்டும் என இருவரும் தீர்மானித்தனர்.

2010ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே தில்லையம்பூரில் 15 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கைச் சாகுபடி செய்ய முடிவெடுத்தனர். விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூட தெரியாத ஆனந்திக்குத் தொடக்கக்காலம் சவால் நிறைந்ததாகவே இருந்தது. முதல் மூன்று ஆண்டுகளில் நிலத்தைச் செம்மைப்படுத்தவும், தண்ணீர்க் குழாய்கள் அமைக்கவும் செலவிட்டனர். இயற்கை உரங்களை வீட்டில் தாங்களாகவே உற்பத்தி செய்தனர். பாரம்பரிய நெல் ரகங்களான கருங்குறுவை, அறுபதாம் குறுவை, மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, ஆத்தூர் கிச்சிடிச் சம்பா, மதுரைப் பொன்னி என அனைத்து நெல் ரகங்களையும் பயிரிடுகிறார்கள். நஞ்சில்லாக் காய்கறிகளையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஒரு நெல்லை வைத்து அதை நூறு நெல்லாக மாற்றும் விவசாயிதான் இந்த உலகின் தலைசிறந்த விஞ்ஞானி.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image