நமது பொதுவான இல்லத்திற்கான குரல்கள்” – படைப்பைப் பாதுகாக்கும் பொறுப்புக்கான அழைப்பு | Veritas Tamil

இறைவா உமக்கே புகழ்  (Laudato Si') திருமடல் வெளியிடப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரேடியோ வெரித்தாஸ் ஆசியா (Radio Veritas Asia) வெளியிட்டுள்ள "Voices for Our Common Home" என்ற நினைவு நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பார்வையை ஆசிய நாடுகளும் சமூகங்களும் எவ்வாறு நடைமுறைப்படுத்தி வருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. படைப்பைப் பாதுகாப்பது, சமூக நீதி மற்றும் இறைவன் படைத்த உலகின் பொறுப்புள்ள பாதுகாவலர்களாக வாழ்வது ஆகியவை ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.

இறைவா உமக்கே புகழ்   திருமடல், கத்தோலிக்க திருஅவையில் சுற்றுச்சூழல் மனமாற்றத்திற்கான புதிய விழிப்புணர்வை உருவாக்கியது. உலகின் பல பகுதிகளில் திருஅவை தைரியம், புதுமை மற்றும் மேய்ப்புப் பணிக்கான அர்ப்பணிப்புடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இது ஊக்கமளித்தது. படைப்போடு ஒற்றுமையுடனும், ஏழைகளுடன் ஒருமைப்பாட்டுடனும், எளிமையான மற்றும் நிலையான வாழ்க்கை முறையுடனும், இறைவனுடனும் அவரது படைப்புகளுடனும் ஆழமான உறவை வளர்க்கும் ஆன்மீக வாழ்வுடனும் வாழ அழைக்கும் வழிகாட்டியாக இது அமைந்துள்ளது. அதனால் தான், "பூமியின் அழுகுரலும், ஏழைகளின் அழுகுரலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது" (LS 49) என்ற திருமடலின் செய்தி இன்று மேலும் பொருத்தமானதாக உள்ளது.

இந்த நூலை நான் முழுமையாக வாசித்தேன். நீங்கள் இன்னும் வாசிக்கவில்லை என்றால், அதை வாங்கி வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

திருப்பாடல் 24:1, "எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை" (LS 91) என்ற திருத்தந்தையின் நினைவூட்டலை பிரதிபலிக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு சுற்றுச்சூழல் அமைப்பும், அதன் அளவு அல்லது இடம் எதுவாக இருந்தாலும், இறைவனின் திட்டத்தில் தனித்துவமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. படைப்பைப் பாதுகாப்பது என்பது தனிமையான செயல் அல்ல; அது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் நீதியோடு ஆழமாக இணைந்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை ஒரு இறையழைப்பாக நாம் கருதும்போது, அனைத்து படைப்புகளுடனும் நமக்குள்ள புனிதமான உறவை மேலும் ஆழமாக உணர முடியும். அப்போதுதான் நீதிக்கான நமது முயற்சிகளும், நமது பொதுவான இல்லத்தைப் பாதுகாக்கும் பணிகளும் பலனளிக்கும்.

இறைவா உமக்கே புகழ்   (LS 12), இறைவனின் படைப்பில் எதுவும் தேவையற்றது அல்ல என எடுத்துரைக்கிறது. முழு பிரபஞ்சமும் இறைவனின் அன்பையும், மனிதர்மீது கொண்டிருக்கும் அளவற்ற பாசத்தையும் வெளிப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பருவநிலை நெருக்கடி ஆகியவை வெறும் கோட்பாட்டு பிரச்சினைகள் அல்ல; மக்களின் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்களை நேரடியாகப் பாதிக்கும் கடுமையான உண்மைகள். இந்நிலையிலும், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துணிச்சலுடன் குரல் கொடுப்போர் மிகச் சிலரே. அவர்கள் உலகிற்கு நம்பிக்கையை விதைக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை பகிர்வதிலேயே நிற்கின்றனர்.

அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகூவில் உலக சுற்றுச்சூழல் தின மாநாடு நடைபெறும் வேளையில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இணையவழி மற்றும் நேரடி நிகழ்வுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒன்றிணைகின்றனர். பருவநிலை மாற்றம், உயிரினங்களின் அழிவு மற்றும் கட்டுப்பாடற்ற மாசுபாடு காரணமாக வேதனைப்படும் இறைவனின் படைப்பின் அழுகுரல், உலக நாடுகளை முன்னெப்போதையும் விட நெருக்கமாக இணைந்து செயல்படத் தூண்டியுள்ளது.

இந்த நோக்கில், இந்தியாவின் மும்பை நகரின் மாஹிம் பகுதியில் உள்ள புனித மிக்கேல் ஆலயம், வெற்றிநாயகி அன்னை ஆலயம், மற்றும் கனோசா உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நான் நேரடியாகக் கண்டும், பங்கேற்றும் பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திறமையான தலைமைத்துவம், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக மனமாற்றத்திற்கான அழைப்பை வலுப்படுத்தி, விசுவாசிகளையும் மாணவர்களையும் தங்கள் நம்பிக்கையை செயல் வடிவில் வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. சுற்றுச்சூழல் என்பது ஒரு பிரச்சினை மட்டுமல்ல; அது கேட்கும், சாட்சி தரும், இரக்கத்துடன் செயல்படும் இணைநடை திருஅவையின் வெளிப்பாடாகும்.

இன்றும் பல பழங்குடியின சமூகங்கள் தங்களின் பாரம்பரிய ஞானம், சமூக அடிப்படையிலான வாழ்க்கை முறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும் அவர்கள் இந்தப் பொறுப்பை விடாமல் காத்து வருகின்றனர். இந்த மனிதநேய உண்மைகளை இன்னும் உணராத மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இறைவன் தந்த இந்தப் படைப்பைப் பாதுகாக்க அச்சமற்ற அர்ப்பணிப்பை உருவாக்குவதில் திருஅவைக்கு இன்னும் நீண்ட பயணம் இருக்கலாம். இருப்பினும் நம்பிக்கை நிலைத்திருக்கிறது.

இறைவா உமக்கே புகழ்  , ஒவ்வொரு உயிரினமும் ஒரு பெரிய உயிர்ச் சங்கிலியின் அங்கமாக இருப்பதை நினைவூட்டுகிறது. ஒரு உயிரின் வாழ்வு மற்ற உயிர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. இந்த பரஸ்பர சார்பில் ஏற்படும் எந்தக் குழப்பமும் தொடர் விளைவுகளை உருவாக்கும். ஆனால் இதை மனிதர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கின்றனர். ஒருகாலத்தில் அரிதாகக் கருதப்பட்ட திடீர் மேக வெடிப்பு மழைகள், இன்று மேற்கு இமயமலையின் புவியியல் அமைப்பையே பாதித்து, எண்ணற்ற உயிரிழப்புகளையும் பெரும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. சுற்றுச்சூழலை அணுகும் நமது மனப்பான்மையில் அடிப்படை மாற்றம் தேவை என இறைவா உமக்கே புகழ்   கிறிஸ்தவர்களையும் அனைத்து விசுவாசிகளையும் அழைக்கிறது.

தொடக்க நூல் 1:28-இல், இறைவன் மனிதனை பூமியை ஆளுமாறு அழைத்தார். ஆனால் இன்று வீணடிக்கும் கலாச்சாரம், அதிகரித்து வரும் கார்பன் வெளியேற்றம், மனித உரிமைகளை மறுக்கும் சமத்துவமின்மை, மற்றும் பலவீனமான அரசியல் தலைமைத்துவம் ஆகியவை பூமியையும் அதன் வரையறுக்கப்பட்ட வளங்களையும் அழிவுக்குத் தள்ளுகின்றன. மனித வாழ்வுக்கான மாற்று கிரகத்தை பல ஆண்டுகளாகத் தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உலகம் நமக்குச் சொந்தமானது என்ற எண்ணத்தோடு அல்ல, இறைவனின் படைப்பைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள பராமரிப்பாளர்களாக நாம் வாழ வேண்டும். ஏனெனில் இந்த உலகின் உண்மையான உரிமையாளர் இறைவனே; நமது ஒவ்வொரு தேர்வுக்கும் நித்திய விளைவுகள் உள்ளன.

நமது காலத்தின் முரண்பாடு என்னவென்றால், தொழில்நுட்பத்தின் மூலம் பாலைவனங்களைப் பசுமையாக்கிய மனிதன், அதே தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி நமது பொதுவான இல்லத்தையே சேதப்படுத்தி வருகிறான். உண்மையான அறிவின் அளவுகோல், மாற்றத்திற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் திறன்தான். அதை எவ்வளவு விரைவாகச் செய்கிறோமோ, அவ்வளவு நல்லது.

நமது பலன் இந்த உலகில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இறுதியில், மத்தேயு 25:21-ல் கூறப்பட்டபடி, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன் என்று ஆண்டவரின் பாராட்டுச் சொற்களைக் கேட்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.