நம்பிக்கையின் அண்டை வீட்டாராக மாற அழைப்பு- பேராயர் சைமன் போ

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-ஆவது பொதுப்பேரவை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறவுள்ள நிலையில், FABC-யின் நற்செய்திப்பணிக் குழுவின் (FABC Office of Evangelization – FABC-OE) தலைவரும் மலேசியாவின் பேராயருமான பேராயர் சைமன் போ, ஆசியா முழுவதுமுள்ள கத்தோலிக்கர்களை "நம்பிக்கையின் அண்டை வீட்டாராக" மாறுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பேரவைக்கு முன்னதாக வெளியிட்ட தனது செய்தியில், ஆசியா என்பது பல்வேறு பண்பாடுகள், இனக்குழுக்கள் மற்றும் சமய மரபுகள் இணைந்து வாழும் கண்டம் என்று அவர் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாக பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தாலும், போர்கள், மற்றும் சமூகப் பிளவுகள் போன்ற சவால்களையும் ஆசியா எதிர்கொண்டுள்ளதாக அவர் நினைவூட்டினார்.

இந்த சவால்களுக்கு மத்தியிலும், அமைதியான இணை வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றிற்கான ஆழமான விருப்பம் ஆசிய மக்களிடையே தொடர்ந்து நிலைத்திருப்பதாக பேராயர் சைமன் போ தெரிவித்தார்.

வரவிருக்கும் FABC பொதுப்பேரவையில், திருத்தந்தை பிரான்சிஸின் ஜகார்த்தா திருத்தூதுப் பயணத்தின் ஆவியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வாக அமையும் என்றும் அவர் கூறினார். பல்வேறு சமயங்கள், பண்பாடுகள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சகோதரத்துவம், உரையாடல் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்த திருத்தந்தை பிரான்சிஸ் திருச்சபையை அழைத்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

"இந்த FABC பொதுப்பேரவையின் வழியாக, ஆசியாவின் அனைத்து சமயங்கள், பண்பாடுகள் மற்றும் தேசிய இன மக்களுக்கிடையே பாலங்களை அமைக்கும் திருஅவையின் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது," என்று பேராயர் சைமன் போ கூறினார். நற்செய்தி அறிவிப்பே அல்ல, கருணையின் வாழ்வும். நற்செய்திப்பணி என்பது வெறுமனே நற்செய்தியை அறிவிப்பது மட்டுமல்ல; மாறாக, கிறிஸ்துவின் இரக்கம், கருணை, ஒப்புரவு மற்றும் குணப்படுத்தும் அன்பை சமூகத்திற்கு எடுத்துச் செல்வதே திருஅவையின் உண்மையான பணி என பேராயர் வலியுறுத்தினார்.

ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள், நட்பு, உடனிருப்பு மற்றும் அன்பான உறவுகளின் வழியாக, "ஒரு நேரத்தில் ஓர் அண்டை வீட்டாரை" அணுகி நற்செய்தியை வாழ்வின் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று FABC நற்செய்திப்பணிக் குழு ஊக்குவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்ல சமாரியரின் வழியில் வாழ அழைப்பு,

நல்ல சமாரியரின் உவமையை நினைவுகூர்ந்த பேராயர் சைமன் போ, துன்பம், அநீதி மற்றும் புறக்கணிப்பை அனுபவிக்கும் மக்களிடம் இறைவனின் இரக்கத்தைக் கொண்டு சேர்க்கும் "நல்ல அண்டை வீட்டாராக" கிறிஸ்தவர்கள் வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

"நம்பிக்கையின் மாபெரும் திருப்பயணம்" – FABC-OE மாநாடு

2025 நவம்பரில் மலேசியாவின் பினாங்கில் நடைபெற்ற "நம்பிக்கையின் மாபெரும் திருப்பயணம்" (The Great Pilgrimage of Hope) என்ற FABC-OE நற்செய்திப்பணி மாநாட்டையும் பேராயர் சுட்டிக்காட்டினார். உரையாடல், மனித உறவுகள் மற்றும் இரக்கமிக்க உடனிருப்பின் வழியாக நற்செய்திக்கு சாட்சியமளிக்கும் ஆசிய அணுகுமுறையை அந்த மாநாடு ஆராய்ந்ததாக அவர் கூறினார்.

"பெத்லகேமில் பிறந்த இயேசு, உண்மையிலேயே ஒரு ஆசியர்," என்று குறிப்பிட்ட பேராயர் சைமன் போ, கதைகள், எளிமையான சந்திப்புகள், குணமளித்தல் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் வழியாக இயேசு இறையன்பை உலகிற்கு வெளிப்படுத்தினார் என்றார்.

பழங்குடியின மக்களுடன் இணையும் புதிய முயற்சி

திருத்தந்தை பிரான்சிஸின் Evangelii Gaudium திருத்தூது அறிவுரையில் இடம்பெற்றுள்ள "விளிம்புநிலை மக்களை நோக்கிச் செல்லுங்கள்" என்ற அழைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், FABC நற்செய்திப்பணிக் குழு, FABC சமய ஒற்றுமை மற்றும் சமயங்களிடையேயான உரையாடல் அலுவலகம் (FABC-OEIA), மற்றும் FABC இறையியல் அலுவலகம் (FABC-OTC) ஆகியவை இணைந்து "நற்செய்தியும் பழங்குடியின வாழ்வியல் மரபுகளும்" என்ற தலைப்பில் 2026 டிசம்பர் 2 முதல் 5 வரை தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள கமில்லியன் மேய்ப்புப்பணியியல் மையத்தில் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளன.

இந்த மாநாட்டில் ஆசியா முழுவதிலுமிருந்து ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலையினர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த முயற்சியின் நோக்கம், பழங்குடியின மக்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், நற்செய்திக்கும் அவர்களது பண்பாட்டு மரபுகளுக்கும் இடையே பாலங்களை அமைப்பதும், காலநிலை மாற்றச் சவால்களுக்கு மத்தியில் தலைமுறை தலைமுறையாக இயற்கையையும் தாயக நிலங்களையும் பாதுகாத்து வாழும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதுமாகும்.

அமைதியும் நல்லிணக்கமும் மலரட்டும்  திருஅவையின்

ஆசியா முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்கள் மற்றும் திருஅவைத் தலைவர்களின் வாழ்வின் வழியாக கிறிஸ்துவின் இரக்கம், ஒப்புரவு மற்றும் குணமளிக்கும் அன்பு உலகிற்கு வெளிப்பட வேண்டும் என்பதே திருச்சபையின் ஆழமான நம்பிக்கை என்று பேராயர் சைமன் போ தனது செய்தியை நிறைவு செய்தார்.அத்தகைய வாழ்வுச் சாட்சி, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Tamil Survey Popup Image