படைப்பைப் பராமரிக்கும் நாளுக்கான திருத்தந்தையின் செய்தி! | Veritas Tamil
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பாரம்பரியமாக செப்டம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படும் படைப்பைப் பராமரிப்பதற்கான உலக இறைவேண்டல் நாளுக்கு, "அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்" (எசாயா 2:4) என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டுக்கான திருப்பீடத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், இந்நாளுக்காகத் திருத்தந்தை விடுத்துள்ள செய்தி, ஆயுத மோதல்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அவற்றுக்கு இடையேயான தொடர்பையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சீரழிவு, படைப்பைப் பராமரிக்கும் நமது கடமைக்கு எதிரான கடுமையான மீறலாக இருப்பது மட்டுமின்றி, பல கோடி மக்களின் வாழ்விற்கு நீண்டகால அச்சுறுத்தலாகவும் உள்ளது என்று அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
மேலும், "போர் இயற்கை வளங்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக இருந்தாலும், அது மோதல்களைத் தடுப்பதற்கும், கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கும் தேவையான அமைப்புகளை உருவாக்கவோ அல்லது பொறுப்பான முடிவுகளை எடுக்கவோ வழிவகுக்கவில்லை" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
இறுதியாக, எசாயா இறைவாக்கினர் ஆயுதங்களை விவசாயக் கருவிகளாக மாற்றுவது குறித்து முன்னுரைக்கும் இறைவார்த்தை, "வன்முறை மற்றும் அழிவை விட வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான அழைப்பாகும்" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.