இயற்கை தரும் நம்பிக்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 24.05.2024

                                                        இயற்கை தரும் நம்பிக்கை

நம்பினோர் கெடுவதில்லை!

சுகமாகப் போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையை விடச் சிரமப்படுவோமோ, போய்ச் சேரமாட்டோமோ என்கிற அவநம்பிக்கை தான் பலருக்கு அதிகமாக இருக்கும்.

மனிதனுக்கு இயற்கை கொடுத்துள்ள அறிவு, வருமுன் காக்கும் திறன். ஆபத்துகளை எதிர்பார்க்கும் முன் எச்சரிக்கை இன்று அவநம்பிக்கையை உருவாக்குகிறது.

ஆனால் கனடாவிலிருந்து மெக்ஸிகோவுக்கு ஆயிரக் கணக்கான மைல்கள் நம்பிக்கையோடு ஆண்டு தோறும் கூட்டம் கூட்டமாக ஒரு பயணம் நிகழ்கிறது.

பயம் இல்லை. அவநம்பிக்கை இல்லை. வழியில் உணவு கிடைக்குமா கிடைக்காதா என்கிற கவலை இல்லை. சுகமாக உற்சாகமாக ஆடிப்பாடி அந்தப் பயணம் நடக்கிறது. பயணம் செய்வது யார் தெரியுமா? பட்டாம் பூச்சிகள்.

வண்ணத்துப் பூச்சிகள். கோடி கோடியாகப் பறக்கின்றன. பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தை அவை நம்புகின்றன.

உணவளிக்கும், ஓய்வளிக்கும், நமக்கு மரணம் நிகழாது என்று உலகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பட்டாம் பூச்சிகள் கனடாவிலிருந்து மெக்ஸிகோவுக்குக் கோடிக் கணக்கில் ஆண்டுதோறும் பறந்து செல்கின்றன.

நமது தாய் மண் நமக்கு வாழ்வு தரும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஆனால் வேடந்தாங்கலையும் அதில் உள்ள ஏரியையும் அதன் சுற்று மரங்களையும் நம்பி, கண்டம் விட்டுக் கண்டம் கடந்து பட்சிகளும் பறவைகளும் வருடம் தோறும் வருகின்றன.

இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன. 
நம்புங்கள்... நம்புங்கள்...

பிறரை நம்புவதில் சில சிக்கல்கள் உண்டு, என்றாலும் நம்புங்கள். பிரபஞ்சத்தை நம்புங்கள். அது நமக்குச் சாதகமானது என்று நம்புங்கள்.

கடவுளுக்கே நம்பர் என்று ஒரு பெயர் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா? 

நம்மவர், நம்பிக்கைக்குரியவர் என்பதால் கடவுள் நம்பர் எனப்பட்டார்.

நம்பினோர் கெடுவதில்லை. நம்புங்கள். நம்புங்கள்
வெற்றி உண்டாகும்.

 

வாழ்க வளர்க.                                
சாமானியன்.                                
ஞா சிங்கராயர் சாமி.              
கோவில்பட்டி