இடுக்கமான வாயில் வழியாக நுழையுங்கள்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

பொதுக்காலம், வாரம் 30 புதன்    மறையுரை 29.10.2025
மு.வா: உரோ: 8: 26-30
ப.பா:  திபா 13: 3-4. 5-6
ந.வா: லூக்: 13: 22-30

 இடுக்கமான வாயில் வழியாக நுழையுங்கள்! 

கிறிஸ்துவில் அன்புக்குரியவர்களே!  இன்று இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு, இடுக்கமான வாயில் வழியாக பயணம் செய்ய வேண்டும் என்பதாகும். "இடுக்கமான" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? அகலம் குறைவாக அல்லது விரிவான பரப்பளவு இல்லாத இடம் எனலாம். ஆனால் இயேசுவின் பார்வையில் இடுக்கமான என்பது  வாழ்க்கையின் சிறிய அசௌகரியங்களை ,இன்னல்களை ,குறைபாடுகளை, சவால்களை, சோதனைகளை, வேதனைகளை  ஏற்றுக்கொள்வதாகும். 

வாழ்க்கை என்பது ரோஜாக்களால் ஆன படுக்கை அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முட்களும் அங்கே இருக்கும்.முட்கள் இருக்கின்ற காரணத்தால் ரோஜா செடியையோ மலரையோ நாம் வெறுப்பதில்லை. 

 ஆனால் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தால் மட்டும் சலித்துக்கொள்கிறோம்.
 வாழ்க்கையில் நாம் எளிதானதைத் தேர்ந்தெடுக்க முனைகிறோம் 
மென்மையானவை எவையோ
தயார்நிலையிலுள்ளவை எவையோ எளிதானவை எவையோ
குறைந்த நேரத்தில் செய்யப்படுபவை  எவையோ
பெரும்பான்மை எவையோ அவற்றைதான் நாம் தேர்வு செய்கிறோம்.
குறைவாக பயணப்பட்ட   பாதையை நாம் தேர்ந்தெடுக்கத் தவறிவிடுகிறோம். பலர் நடந்து சென்ற பாதையைத்தான் தேர்வு செய்கிறோம்.

இன்று இயேசு நம்மை குறைவாக பயணம் செய்யப்பட்ட    பாதையில் செல்ல அழைக்கிறார். கடினமாக உழைக்க ,கூடுதல் அன்பு மற்றும் ஆர்வத்துடன் காரியங்களைச் செய்ய அழைக்கிறார்.  அது ஜெபமாக இருக்கலாம், நமது அன்றாட வேலையாக இருக்கலாம், படிப்புகளாக இருக்கலாம் அல்லது எதுவாக இருந்தாலும் சரி. நாம் சற்று சிந்தித்து கடினமானவற்றை தேர்ந்தெடுப்போமா! அப்போது எதிர்காலத்தில் நம் வாழ்க்கை எளிதாகிவிடும். 

 இறைவேண்டல் 
கடினமான வாழ்வை மீட்புக்காக தேர்ந்த இயேசுவே! வாழ்வில் சின்ன சின்ன சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தாரும். ஆமென்.