துணிவே துணை | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
நமது நம்பிக்கைகள் எல்லாம் நகல் நம்பிக்கைகள்
நமது நடத்தைகள் எல்லாம் நகல் நடத்தைகள்.
நம்முடைய கற்பித்தல்களும் நகல்களே.
கற்றல்களும் நகல்களே
எல்லாமே நகல் என்றால்...
நம்முடைய சுயசிந்தனையின் வெளிப்பாடு மழுங்கிப் போகிறது. துணிவு துவண்டு போகிறது.
ஆய்வு ஒன்று நடந்தது. 25 நபர்கள் இந்த ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் ஓர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள திரையில் தோன்றும் இரு படங்களை உற்றுநோக்கி எது பெரியது, உயரமானது, நீளமானது என்று முடிவு செய்து தங்கள் கருத்தைச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
படங்களைத் திரையிடுவதற்குமுன், அவர்களில் 20 பேரை அழைத்து, நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டு உண்மை நிலையைச் சொல்லக்கூடாது, அதாவது பெரியதாக இருக்கும் படத்தை 'சிறியது' என்று சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினர். மற்ற ஐந்து பேரை அழைத்து, அவர்கள் என்ன பார்க்கிறார்களோ அந்த உண்மை நிலையை சொல்லச் சுதந்திரம் அளித்தனர். மீண்டும் இரு குழுவினரும் ஒன்றாக அழைக்கப்பட்டு, படம் திரையிடப்பட்டது. அதில் A, B என்ற இருகோடுகள் இருந்தன. Aஎன்ற கோடு Bஎன்ற கோட்டை விட நீளமானதாக இருந்தது. கருத்துக்கணிப்பு தொடங்கியது.
எந்தக் கோடு நீளமானது - A தான்.
ஆனால், ஏற்கனவே இந்தப் பதில்தான் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட 20 பேரும் உண்மையை மறுத்து, Aஎன்ற கோடு B-யைவிட நீளமானது என்று உறுதியாகவும், தீர்க்கமாகவும் கூறினர்.
இந்த எதிர்மரைப் பதில், சுதந்திரமாக முடிவெடுக்கச் சொன்ன மற்று ஐந்து பேரையும் சந்தேகப்பட வைத்தது. ஆனால், உண்மையை உரக்கச் சொல்லத் துணிவில்லாமல், அந்த 20 நபர்களின் தவறான கருத்தையே ஆமோதித்தனர். பெரும்பான்மையானவர்களின் ஆதிக்கத்தால் இவர்களின் துணிவு தொலைந்து போனது.
அதிக எண்ணிக்கையுடையவர்களோடு இணைந்துகொண்டு தங்கள் துணிவை இழந்தனர். இந்த ஐந்து பேருக்குள் நமது சமூகம் முழுவதும் அடக்கம். தனி மனிதச் சிந்தனைகளை, மறந்து மழுங்கடித்து துணிவின்றி வாழ்கின்றோம். இயல்பாக நமது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடத் தயங்குகிறோம். நகைச்சுவையுணர்வின் வெளிப்பாடான சிரிப்பைக் கூட, நம் துணிவின்மை முடங்கச் செய்து விடுகிறது.
ஆம். தொலைக்காட்சி அலைவரிசைகளில் சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் வருகின்றன. அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் எப்போது நாம் சிரிக்க வேண்டும் என்பதைப் பின்னணி சிரிப்பொலிகள் தீர்மானிக்கின்றன. காட்சிகளைப் பார்த்து, வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்காமல், அவர்கள் சிரிக்கும்போது, நாமும் சிரிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இவ்வாறே அழுகையும் கூ இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கும்போது நாம் நகல்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயல்பாக, அசலாக வாழ நமக்குத் துணிவில்லை.
நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்பிக்கையும் துணிவுமே நம்மை வழிநடத்த வேண்டும். துணிவு உடலில் ஓடும் இரத்தம் போல. அது ஓடுவதால்தான் பல காரியங்கள் நடக்கின்றன. எந்தச் சவாலும் சாதனையும் சாதாரணமாகிவிடும். துணிவிருந்தால் மட்டுமே. எதையுமே துணிந்துசெய்வோம்.
தெளிந்து செய்வோம் துணிந்து செய்வோம்.