திரு அவையின் மறைவல்லுநர்'புனித ஜான் ஹென்றி நியூமன்' | Veritas tamil

புனித பேதுரு சதுக்கத்தில் அனைத்துப் புனிதர்களின் பெருவிழா மற்றும் கல்வி யூபிலி நிகழ்வுச் சிறப்புத் திருப்பலியில், புனித ஜான் ஹென்றி நியூமனைத் திரு அவையின் மறைவல்லுநராகத் திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். நம்பிக்கையாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இத்திருப்பலியில், புனித ஜான் ஹென்றி நியூமனுடைய பணியும் வாழ்வும் விட்டுச்சென்ற மதிப்பீடுகளும் இள தலைமுறையினருக்கு ஒளியாகவும், அவர்கள் தங்கள் முழு மாண்புடன் விண்மீன்களைப் போல ஒளிவீச வழிகாட்டும் எனத் திருத்தந்தை அறிவுறுத்தினார்.

மேலும், "பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒவ்வொரு கல்விச் சூழலும், முறைசாரா நிறுவனங்கள் கூட, எப்போதும் உரையாடல் மற்றும் அமைதியின் கலாச்சாரத்திற்கான நுழைவாயில்களாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புனித ஜான் ஹென்றி நியூமன் "கல்வியின் கோட்பாடு மற்றும் நடைமுறைச் செயல்பாடுகளைக் கற்றுத்தந்த பேரறிஞர்" என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய திருத்தந்தை, அவர் தனது பிரபலமான பாடலில் குறிப்பிட்டுள்ளதுபோல, அநீதி மற்றும் நிலையற்ற தன்மையால் உலகம் மிகவும் இருளடைந்துள்ள இந்த நேரத்தில்,நம்பிக்கையின் கனிவான ஒளியையும் வழிகாட்டுதலையும் வழங்க அவர் நம்மை அழைக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கர்தினால் நியூமன் செய்தது போல், ஒவ்வொருவருக்கும் ஒரு பணி, ஒரு பொறுப்பு இருப்பதையும், நம் வாழ்க்கை நம்மைவிட உயர்ந்த ஒன்றைச் செய்ய அழைக்கிறது என்பதையும் நாம் கண்டுணரும்போது வாழ்க்கை ஒளிபொருந்தியதாகிறது என்றும் திருத்தந்தை கூறினார். ஒவ்வொருவரும் வழங்க வேண்டிய பங்களிப்பு, தனித்துவமானது; மதிப்புமிக்கது என்று குறிப்பிட்ட அவர், சமூ கத்தில் கல்விப்பணியாற்றும் பொறுப்பு அதற்கு அளிக்கப்படும் பங்களிப்பு எப்போதும் ஊக்குவிக்கப்படவேண்டும். இக்கல்விப் பயணத்தில் இளையோரை ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்: அப்போதுதான் அவர்கள் தங்கள் முழு மாண்புடன் விண்மீன்களைப் போல ஒளிவீச முடியும்" என்று தெரிவித்துள்ளார்.