தாவீதின் மகனுக்கு ஓசன்னா! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு 29.03.2026)
மு.வா: எசா: 50: 4-7
ப.பா: திபா: 22:7-8, 16-17, 18-19, 22-23
இ.வா: பிலி: 2: 6-11
ந.வ: மத்: 26:14 - 27:66
தாவீதின் மகனுக்கு ஓசன்னா!
ஓசன்னா என்ற எபிரேய வார்த்தையின் பொருள் "எங்களை மீட்டருளும் " என்பதாகும். பாடுகளின் ஞாயிறை கொண்டாடும் இந்நாளில் ஓசன்னா என்ற வெற்றிமுழக்கத்தை நாம் எல்லாரும் சொல்லும் போது ஓசன்னா என்ற வார்த்தையின் அர்த்தம் நம் வாழ்விலே நிறைவேற வேண்டுமல்லவா !
இறைவாக்கினர்கள் எருசலேமில் தான் இறக்கவேண்டும் என்து பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட செய்தி. இயேசு வெற்றி ஆர்பரிப்போடு எருசலேமிற்குள் நுழைவது அவரது பாடுகளின் நாள் நெருங்கி வந்துவிட்டது என்தைக் குறிக்கிறது என இயேசு அறிவார். பாடுகளை குறித்த அச்சம் அவரிடம் இருப்பினும் மகிழ்வோடும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றபோகிறேன் என்ற மனநிறைவோடும் உள்நுழைகிறார்.
ஆம். நம் வாழ்வில் ஓசன்னா நிகழ வேண்டும் என்றால் முதலிலே நாம் செய்ய வேண்டியதென்னவெனில் தந்தை கடவுளின் விருப்பத்திற்கு நம்மை கையளிப்பது. பல வேளைகளில் கடவுளின் விருப்பத்திற்கு மேலாக நமது விருப்பம் மேலோங்கி நிற்கும் போது நாம் அடிமைப்படுத்தப்படுகின்றோம். அங்கே ஓசன்னா நடைபெறாது என நாம் உணரவேண்டும்.
யூதர்கள் ஆரவாரத்தோடு ஒலிவக்கிளைகளை ஏந்தி ஓசன்னா பாடினார்கள். ஏனென்றால் உரோமையரின் அடிமைத்தனத்தில் இருந்த அவர்களுக்கு இயேசுவின் போதனைகளும் அருஞ்செயல்களும் புது விடியலாக விடிவு காலமாக தெரிந்தது. அறிவுசார்ந்த பொருளாதாரம் சார்ந்த ஆன்மீகம் சார்ந்த அந்தஸ்து சார்ந்த எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் இயேசு விடுவிப்பார் என நம்பி அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்டதன் அடையாளமே அந்தக் குருத்தும் ஓசன்னா முழக்கமும். ஆனால் சில நாட்களிலேயே அந்தக்குருத்து காய்ந்து சிலுவையானது. ஓசன்னா முழக்கம் ஒழிக என்றானது.
நம் வாழ்வில் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு நாந் பிடித்திருக்கும் நம்பிக்கை என்னும் குருத்தின் நிலை என்ன? நம் வாயில் ஒலித்த ஓசன்னா இன்னும் அதே சுரத்தில் ஒலிக்கிறதா அல்லது மழுங்கி விட்டதா ? என்பதையும் ஆராய இந்தக் குருத்து ஞாயிறு நம்மை அழைக்கிறது.
உயிர்ப்பின் மக்களாக ஓசன்னா வாழ்வில் நிறைவேறிய மக்களாக வாழ தந்தையின் விருப்பத்திற்கு நம்மை கையளித்து நம் வாழ்வின் எல்லாவித அடிமைத்தனங்களையும் அகற்ற கடவுளிடம் அடிபணிவோம். இறைவேண்டல் இறைவார்த்தை நற்செயல்களால் நம் நம்பிக்கை என்னும் குருத்து வாடாமலும் ஓசன்னா என்ற முழக்கத்தின் சுரம் குறையாமலும் பார்த்துக்கொள்வோம்.
இறைவேண்டல்
ஆண்டவரே எங்களை மீட்டருளும். தாவீதின் மகனுக்கு ஓசன்னா !