பிளவுப்படாத நம்பிக்கை இறைவனின் அருளைப் பெற்றுத்தரும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 12ஆம் வாரம் –  சனி

புலம்பல் 2: 2, 10-14, 18-19
மத்தேயு 8: 5-17

பிளவுப்படாத நம்பிக்கை இறைவனின் அருளைப் பெற்றுத்தரும்!
 
முதல் வாசகம்.

புலம்பல் நூலின் இப்பகுதியில் எருசலேமுக்குரிய தண்டனை இறைவனின் தண்டனை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. முன்பு காலத்தில் இந்நூலை இறைவாக்கினர் எரேமியா எழுதியிருக்கக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், நவீன விவிலிய ஆய்வாளர்கள் சிலர், புலம்பல் நூலில் எழுத்தாளரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதால், இதை எருசலேமின் அழிவை நேரில் கண்ட வேறு ஒருவர் எழுதியிருக்கலாம் என்று இக்கால விவலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

இனைறய வாசகப் பகுதியில், எருசலேமின் அழிவையும் யூத மக்களின் துயரமான நிலையையும் ஆசிரியர்  மிகுந்த வேதனையுடன் விவரிக்கிறார். ஆண்டவர் தமது மக்களின் பாவங்களின் காரணமாக அவர்களைத் தண்டித்தார். எருசலேமின் மதில்கள் இடிக்கப்பட்டன; நகரின் தலைவர்கள், முதியோர், இளம்பெண்கள் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர் என்று அனைறய அவல நிலையை விவரிக்கிறார். 
இறைவாக்கினர்ககளில் சிலர்  மக்களுக்கு உண்மையான இறைவார்த்தையை அறிவிக்காமல், பொய்யான மற்றும் வீணான போதனைகளைச் சொல்லி அவர்களை வழிதவறச் செய்தனர். அதனால் மக்கள் மனந்திரும்பும் வாய்ப்பை இழந்தனர்.
இறுதியாக, மக்களை இறைவனை நோக்கி முழு மனதுடன் கதறி மன்றாடும்படி அழைக்கிறார். இரவும் பகலும் கண்ணீர் சிந்தி, தங்கள் பிள்ளைகளின் நலனுக்காகவும், தங்கள் வாழ்வின் மீட்பிற்காகவும் இறைவனிடம் கருணை வேண்டுமென ஊக்குவித்தார் என்று வாசகம் அறிவுறுத்துகிறது.

நற்செய்தி.

நற்செய்தியில், நூற்றுவர் தலைவன், தனது வேலைக்காரன் கடுமையாக நோயுற்றிருப்பதாக இயேசுவிடம் முறையிடுகிறார். தன் வீட்டிற்கு இயேசு வருவதற்கு தான் தகுதியற்றவன் என்றும், "ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள்; என் வேலைக்காரன் குணமடைவான்" என்றும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூறுகிறார். அவனுடைய நம்பிக்கையைக் கண்டு இயேசு வியந்து, இஸ்ரயேலில் கூட இவ்வளவு பெரிய நம்பிக்கையைக் காணவில்லை என்று பாராட்டி, வேலைக்காரனை குணமாக்குகிறார்.
அதன்பின், இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்று, காய்ச்சலால் அவதிப்பட்ட அவரது மாமியாரைக் குணமாக்குகிறார். உடனே அவர் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்கிறார்.
மாலை வேளையில், பேய் பிடித்தவர்களும் பலவித நோயாளிகளும் இயேசுவிடம் கொண்டுவரப்படுகிறார்கள். இயேசு தமது வார்த்தையால் தீய ஆவிகளை விரட்டி, எல்லா நோயாளிகளையும் குணமாக்குகிறார். இதன் மூலம், "அவர் நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்" (எசாயா 53:4) என்ற இறைவாக்கு நிறைவேறியதை மத்தேயு தெளிவுப்படுத்துகிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியில் நாம் கண்ட  உரோம நூற்றுவர் தலைவருக்கு இவ்வளவு ஆழமான நம்பிக்கை வெளிப்பட உதவிய முக்கியமான பண்புகளில் ஒன்று, அவர் ஒரு இராணுவ அதிகாரியாகக் கொண்டிருந்த கடமை உணர்வும் அதிகார அனுபவமும் ஆகும் எனலாம்.  தனது வாழ்நாள் முழுவதும் பிறருக்குக் கட்டளையிட்டு வழிநடத்திய அனுபவம் அவருக்கு அதிகாரத்தின் இயல்பை நன்கு புரிய வைத்திருந்தது. அந்த இயல்பான புரிதலையே அவர் இயேசுவின் தெய்வீக அதிகாரத்திற்குப் பொருத்திப் பார்த்தார்.

யூத மக்களைப் போல, அவருக்கு திருச்சட்டம் (தோரா), மீட்பின் வரலாறு, அல்லது மெசியாவைப் பற்றிய இறைவாக்குகள் குறித்து அதிக அறிவு இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தபோதிலும், இயேசு நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டபோது, உலக ஆட்சியாளர்களின் அதிகாரத்தைவிட மேலான, தெய்வீக அதிகாரம் அவரிடம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தார் என்றே கூற வேண்டும்

இயேசுவும் தெய்வீக அதிகாரம் கொண்டவர் என்றுணர்ந்ததால்,  அவர் நேரில் வர வேண்டிய அவசியமில்லை; ஒரு வார்த்தை மட்டும் சொன்னாலே தனது வேலைக்காரன் குணமடைய முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். உரோமப் படைத்தலைவரின் நம்பிக்கையைப் பற்றி சிந்திக்கும் போது,  “இஸ்ரயேலில் எவரிடமும் இவ்வளவு விசுவாசத்தை நான் கண்டதில்லை”  என்று இயேசு அவரைப் புகழ்ந்தார்.

ஆம், அவருடைய நம்பிக்கை யூதர்களைப் போன்று,  திருச்சட்டத்தைப் பற்றிய அறிவின் அடிப்படையில் உருவானதல்ல; மாறாக, கிறிஸ்துவின் தெய்வீக அதிகாரத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருந்தது.

முதல்வாசகத்தோடு ஒப்பிடுகையில் இஸ்ரயேல் மக்களிடம் இத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை  காணப்படவில்லை. குறிப்பாக அரசர்கள் கடவுளை விட்டு விலகினர். அவர்கள் வேற்று தெய்வ வழிபாட்டில் ஆழ்ந்திருந்தனர்.. எனவே கடவுள் அவர்கைளை அன்னியரிடம் (பாபிலோனியரிடம்) ஒப்படைத்தார். 

நூற்றுவர் தலைவனின் அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் முன்மாதிரியாகக் கொள்ள ஆண்டவர் அழைக்கிறார்.  நம்மை நாம்  முழுமையாக கிறிஸ்துவிடம் ஒப்படைப்போமானால்  “நீர் நம்பியபடியே உமக்கு நிகழட்டும்; என்று நமக்கும் ஆண்டவர் பதில் அளிப்பார் என்பது திண்ணம்.

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே,
நூற்றுவர் தலைவனைப் போல உம்முடைய வார்த்தையின் வல்லமையில் உறுதியான நம்பிக்கை கொள்ளும் அருளை எனக்குத் தாரும்.  ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452