ஆண்டவரே ஒரே கடவுள்: அவரே நம்பிக்கையின் வெற்றி ! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 10 ஆம் வாரம் –  புதன்

1 அரசர் 18: 20-39
மத்தேயு   5: 17-19

ஆண்டவரே ஒரே கடவுள்: அவரே நம்பிக்கையின் வெற்றி !--- காட்டும் ஒளி


முதல் வாசகம் 

 இறைவாக்கினர் எலியா, இஸ்ரயேல் மக்களையும் பாகாலின் பொய்வாக்கினர்களையும் கர்மேல் மலையில் ஒன்று சேர்த்தார். மக்களிடம், “ஆண்டவரா அல்லது பாகாலா? யார் உண்மையான கடவுள் என்பதைத் தீர்மானியுங்கள்” என்று சவால் விடுத்தார்.
எலியாவும் பாகாலின் பொய்வாக்கினர்களும் தலா ஒரு பலிபீடம் அமைத்து, நெருப்பு வைக்காமல் பலியைச் செலுத்தினர். தங்கள் கடவுள் வானத்திலிருந்து நெருப்பை அனுப்பி பலியை எரிக்கச் செய்வாரோ அவர் உண்மையான கடவுள் என்று தீர்மானிக்கப்பட்டது. பாகாலின் பொய்வாக்கினர் நாள் முழுவதும் வேண்டினாலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
பின்னர் எலியா ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டி, பலியின்மேல் தண்ணீரைக் கொட்டச் செய்து, இறைவனை நோக்கி வேண்டும் வேளை,  உடனே ஆண்டவரின் நெருப்பு வானத்திலிருந்து இறங்கி பலியையும், பலிபீடத்தையும், தண்ணீரையும் எரித்தது.

நற்செய்தி.
 
இயேசு, தாம் திருச்சட்டத்தையோ இறைவாக்கினர்களின் போதனைகளையோ ஒழிக்க வரவில்லை; அவற்றை நிறைவேற்றவே வந்ததாகக் கூறுகிறார். இறைவனின் வார்த்தையும் திருச்சட்டமும் நிலைத்திருப்பவை என்பதால், அவற்றில் மிகச் சிறிய கட்டளையைக்கூட அலட்சியம் செய்யக்கூடாது என வலியுறுத்துகிறார். மேலும், இறைவனின் கட்டளைகளை கடைப்பிடித்து பிறருக்கும் கற்பிப்பவர்கள் விண்ணரசில் பெரியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று போதிக்கிறார்.

சிந்தனைக்கு. 

இறைவனின் திருச்சட்டத்தை உண்மையோடும் முழுமையோடும் கடைப்பிடித்து வாழ்வதே கிறிஸ்தவ சீடத்துவத்தின் அடிப்படை என்பது இன்றைய நினைவூட்டலாக உள்ளது. 

இன்றைய முதல் வாசகத்தில் எலியா இறைவாக்கினர் கர்மேல் மலையில் மக்களை ஒரு முக்கியமான முடிவுக்கு அழைக்கிறார்: “ஆண்டவரே கடவுள் என்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் கடவுள் என்றால் அவனைப் பின்பற்றுங்கள்” என்று சவால் விடுகிறார். ஆதாவது, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வேண்டாம் என்கிறார்.   மக்கள் இரு மனதோடு வாழ்ந்தனர். ஒரு பக்கம் ஆண்டவரை நம்புவதாகச் சொன்னார்கள்; மறுபக்கம் அன்னிய தெய்வமான பாகாலை வழிபட்டனர்.
எலியா உண்மையான கடவுள் யார் என்பதை வெளிப்படுத்த ஒரு சவாலை முன்வைக்கிறார். பாகாலின் பொய்வாக்கினர் பல மணி நேரம் கூப்பிட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் எலியா ஆண்டவரை நோக்கி மன்றாடியபோது,  வானத்திலிருந்து நெருப்பு இறங்கி பலியை எரித்தது. அப்போது மக்கள், “ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்!” என்று அறிக்கையிட்டனர்.
நமது வாழ்க்கையிலும் சில நேரங்களில் நாம் இரு மனதோடு இருக்கிறோம். இறைவனை நம்புகிறோம்; ஆனால் உலக ஆசைகள், செல்வம், அதிகாரம், சுயநலம் ஆகியவற்றிற்கும் இடம் கொடுக்கிறோம். இன்று எலியாவின் அழைப்பு நமக்கும் பொருந்துகிறது: உண்மையான இறைவனை முழுமனதுடன் தேர்ந்தெடுப்பதோடு அவரில் வாழ்தல்  வேண்டும்.
நற்செய்தியில் இயேசு, தாம் திருச்சட்டத்தை ஒழிக்க வரவில்லை; அதை நிறைவேற்ற வந்ததாக கூறுகிறார். கடவுளின் கட்டளைகள் மனிதரை கட்டுப்படுத்துவதற்காக அல்ல; அவரை வாழ்வின் நிறைவுக்கு அழைத்துச் செல்லவே கொடுக்கப்பட்டவை. ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் இறைவார்த்தையை கேட்பதோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தவும் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டு முக்கியமான பாடங்களை வழங்குகின்றன:
1.    இறைவனுக்கே முதன்மை இடம் கொடுக்க வேண்டும்.
நம் இதயத்தில் வேறு “பாகால்கள்” இடம்பிடிக்காதபடி கவனிப்போம். 
2.    இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்வோம்.
சிறிய கட்டளைகளையும் அன்போடு கடைப்பிடிக்கும்போது நம் வாழ்க்கை இறைவனுக்கு சாட்சியாக மாறும். 
கர்மேல் மலையில் மக்களின் இதயத்தை மாற்றிய ஆண்டவர், இன்று நமது இதயத்தையும் புதுப்பிக்கட்டும். நாம் முழுமனதுடன் அவரைத் தேர்ந்தெடுத்து, அவரது வார்த்தையின்படி வாழும் உண்மையான சீடர்களாக இருப்போமாக.
 
இறைவேண்டல். 

ஆண்டவரே, பாகால் இவ்வுலகை ஆளும் வேளையில் நான் என்றும் உம்மில் வாழ்வும் உமது அருளால் இறையரசுக்குச் சாட்சியம் பகரவும் அருள்புரிவீராக. ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452