துணிவு இருந்தால் துக்கம் இல்லை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

31  ஜனவரி 2026
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – சனி

2 சாமுவேல  12: 1-7a, 10b-17
மாற்கு  4: 35-41
 
 துணிவு இருந்தால் துக்கம் இல்லை!

முதல் வாசகம்.

 
இந்த வாசகம் தாவீது அரசனின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வைச் சுட்டிக்காட்டுவதோடு, அவரோடு இருந்த இறைவாக்கினர் நாத்தான்  ஓர் உவமை வாயிலாக அவருடைய பாவத்தை  எடுத்துரைப்பதை விவரிக்கிறது.

நாத்தானின் உவமை தாவீதின் குற்றத்தை அம்பலப்படுத்துகிறது, இதனால் அவர் தனது பாவத்தின் ஆழத்தை உணர்ந்து மனந்திரும்புகிறார். தாவீது போன்ற ஓர்  அன்பான அரசன் கூட கடவுளின் கட்டளைக்கு அப்பாற்பட்டவர் அல்ல - கடவுள் அனைத்து மக்களையும், குறிப்பாக தலைவர்களை, அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பேற்க அழைக்கிறார் என்பதுத் தெளிவாகிறது.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், இயேசுவும் அவருடைய சீடர்களும் ஒரு படகில் கலிலேயா கடலைக் கடக்கும்போது திடீரென ஒரு பெரும் புயல் எழுகிறது. அலைகள் படகில் மோதி, தண்ணீர் படகை நிரப்பத் தொடங்குகிறது. சீடர்கள் பதற்றமடைந்த நிலையில், இயேசு படகின் பின்புறத்தில்  தூங்கிக் கொண்டிருக்கிறார். பயந்துபோன சீடர்கள் அவரை எழுப்பி, இவ்வாறு கூறுகிறார்கள்:

“போதகரே, நாங்கள் மடிந்து போகிறோம் என்பது உமக்குக் கவலையில்லையா?”

விழித்தெழுந்த இயேசு காற்றைக் கடிந்துகொண்டு கடலிடம் பேசுகிறார்: “அமைதி! அமைதியாக இரு!” என்று. உடனடியாக, காற்று நின்று, ஒரு பெரிய அமைதி ஏற்படுகிறது. பின்னர் இயேசு சீடர்களிடம் திரும்பி, கேட்கிறார்:

“நீங்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்? இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்றார், சீடர்களோ  தங்களுக்குள் பிரமிப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கி,  “அப்படியானால் இவர் யார், காற்றும் கடலும் கூட அவருக்குக் கீழ்ப்படிகின்றன என்றே பேசிக்கொண்டனர். 


சிந்தனைக்கு.


தாவீது தொடக்கத்தில் தன் குற்றத்திலிருந்து தப்பிக்கச் சூழ்ச்சிகள் செய்தாலும், பின்னர் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு நல்லாட்சி வழங்க முன்வருகிறார். ஆம், தாவீது ஆரம்பத்தில் தோல்வியடைந்தாலும், தனது குற்ற உணர்வை நேருக்கு நேர் சந்திக்கிறார். இங்கே துணிவு இன்றியமையாத பண்பாக உள்ளது.


நற்செய்தியில், இயேசுவுக்கு இயற்கை சக்திகளின் மீது அதிகாரம் இருப்பதை அறிய வருகிறோம்.  கடலும் காற்றும் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகின்றன, படைப்பில் எதுவும் அவருடைய கட்டளைக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதைக் காட்டுகிறது. கடலைப் பற்றி நன்கு அறிந்த மீனவர்களாக இருந்த ஆரம்பகால சீடர்களுக்கு இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும். இந்த நிகழ்வு இயேசுவின் தெய்வீக சக்தியையும் அடையாளத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சின சீடர்கள், இயேசுவின் செயலால் துணிவு பெறுகிறார்கள்.

சீடத்துவத்தின் ஆணிவேர் நம்பிக்கையும் துணிவுமாகும்.    "துணிவு இருந்தால் துக்கம் இல்லை" என்பது ஒர்  பொன்மொழி. பயம் நிறைந்த வாழ்வு எதிர்காலத்தை முடக்கும், துணிவு அதுவே பாதி வெற்றிக்கு சமம். துணிவு என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல, மாறாக பயம் இருந்தபோதிலும் முன்னேறிச் செல்ல எடுக்கும் முடிவாகும். புனித யோசேப்பு மற்றும் அன்னை மரியா வாழ்வில் இத்தகையத் துணிவு நிலவியதை அறிவோம். ஆம், மனமாறவும் துணிவு வேண்டும், மனமாறியதை செயலில் வெளிப்படுத்தவும் துணிவு வேண்டும். 

'அச்சம் தவிர்' என்பது மகாகவி பாரதியாரின் கூற்று. ‘அஞ்சாதீர்’ என்பது ஆண்டவர் இயேசுவின் கூற்று. ஆகவே, அச்சம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவில் கொண்டு வாழ்வோம்.


இறைவேண்டல்.


“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ என்றுரைத்த ஆண்டவரே, உம்மில் நான் இணைந்திருக்கும் வேளை அச்சம் என்னை ஆட்கொள்ளாதிருக்க அருள்வீராக. ஆமென். 
 

ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452