அழைப்பும், அழைப்புக்கான காரணமும் அவருடையது! | ஆர்கே. சாமி | Veritas Tamil
14 ஜனவரி 2026
பொதுக்காலம் முதல் வாரம் – புதன்
1 சாமுவேல் 3: 1-10, 19-20
மாற்கு 1: 29-39
அழைப்பும், அழைப்புக்கான காரணமும் அவருடையது!
முதல் வாசகம்.
அன்னா என்ற தாய் தவம் கிடந்து பெற்றவர் சாமுவேல். சாமுவேல் கடவுள் பணிக்கென அர்ப்பணிக்கப்படவர். ஆலயத்தில் ஏலி என்று தலைமை குருவின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தார். ஓர் இரவு, சாமுவேல் உடன்படிக்கைப் பெட்டியின் அருகே தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஆண்டவர் இவரைப் பெயரிட்டு அழைக்கிறார். ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் கருதி, அவனிடம் ஓடுகிறார். ஆனால் கூப்பிட்டது ஏலி அல்ல.
இது மூன்று முறை நடக்கிறது. ஒவ்வொரு முறையும் சாமுவேல், ஏலி என்று நினைத்துப் பதிலளிக்கிறார், பின்னர்தான் கடவுள் சாமுவேலுவை அழைப்பதை ஏலி உணர்கிறார். நிறைவாக, ‘சாமுவேல், சாமுவேல்’ என்று முன்புபோல் கடவுள் அழைக்க, அதற்குச் சாமுவேல், ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று ஏலியின் ஆலோசனைபடி கடவுளுக்கு மறுமொழி கூறினார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு கலிலேயாவில் தனது நற்செய்திப் தொடங்குவதை வாசிக்கிறோம்.
நாசரேத்தில் தொழுகைக்கூடத்தைவிட்டு வெளியேறிய பிறகு, இயேசு சீடர்களுடன் சீமோன் (பேதுரு) மற்றும் அந்திரேயாவின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டருந்த சீமோனின் மாமியாரின் கையைப் பிடித்து அவளைத் தூக்கி இயேசு குணப்படுத்துகிறார். அவள் முழுமையாக குணமடைந்து, பின்னர் அவர்களுக்கு சேவை செய்கிறாள் - இது அவளுடைய நன்றியுணர்வின் அடையாளம் மற்றும் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யும் பண்பை வெளிப்படுத்துகிறது.
மாலையில் மக்கள், நோய்வாய்ப்பட்ட அனைவரையும் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். முழு நகரமும் வாசலில் கூடுகிறது, இயேசு பலரைக் குணப்படுத்தி, அசுத்த ஆவிகளைத் துரத்துகிறார், நோய் மற்றும் தீமையின் மீது தனது அதிகாரத்தை நிரூபிக்கிறார். "இயேசு யார் என்று பேய்கள் அறிந்திருந்தன என அறிகிறோம்.
நிறைவாக, இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார் என்றும் மாற்கு இப்பகுதியை நிறைவுச் செய்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், ஆரம்பத்தில் சாமுவேல் தன்னை ஏலி அழைப்பதாக நினைக்கிறார். இது கடவுளின் குரலை உடனடியாக அடையாளம் காண முடியாது என்பதைக் காட்டுகிறது, குறிப்பாக இளம் வயதினரோ அல்லது நம்பிக்கையில் அனுபவமற்றவர்களோ. கடவுளின் குரலைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்வதற்கு பெரும்பாலும் வழிகாட்டுதலும் பொறுமையும் தேவை. என்பதை உணர்த்துகிறது.
மேலும், கடவுள் ஒருவரை விரும்பி அழைக்கும்போது, அவர் ஒரு நோக்கத்தை வைத்திருப்பார். அவர் எளிதில் அவரது அழைப்பை விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதைக் காட்டும் விதமாக, சாமுவேலை மூன்று முறை அழைக்கிறார். ஆகவே, நமது அழைப்புக்கான காரணம் நமக்குத் தெரியாமல் இருக்கலாம், அதை கடவுள் அறிவார். அவரது திருவுளத்திற்கு விட்டு விட வேண்டும். நாம் எடுக்கும் முடிவு முடிவாக இருப்பதைவிட அவரது முடிவுக்கும் விருப்பத்திற்கும் விட்டுவிட வேண்டும். நாம் வெறும் கருவிகளே.
அடுத்து, நோயினால் துன்புறுவோரின் மீது இயேசு கொண்டிருக்கும் ஆழ்ந்த இரக்கத்தை இன்று அறிகிறோம். அவரது இரக்கமானது, ‘ஐயோ பாவம்’ என்பதோடு முடிவதல்ல. அவர் நோயுற்றவர்களை இரக்கதோடு அணுகுவதோடு, தொட்டு உடனடியாகக் குணப்படுத்தும் ஆண்டவராக விளங்குகிறார. தன்னிடம் வரும் அனைவரையும் வரவேற்கிறார். இது உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், அவரில், முழுமையையும் நம்பிக்கையையும் வேரூன்றச் செய்யும் அவரது பணியை வெளிப்படுத்துகிறது. ஆம், இயேசுவின் அதிகாரம், உடல், ஆன்மீகம் மற்றும் சமூக ரீதியான அனைத்து வகையான தாக்குதலிலிருந்தும் விடுதலையைக் கொண்டுவருகிறது.
சேவை மற்றும் பணி:
சீமோனின் மாமியார், குணமடைந்த பிறகு, அங்கிருந்தவர்களுக்கு "பணிவிடை " செய்தார் என்று மாற்கு குறிப்பிட்டுள்ளார். அவளுடைய செயலானது, கிறிஸ்துவால் தொடப்படும் நாம் சுயநலமற்ற பிறர் அன்புப் பணியில் ஈடுபட எடுத்துக்காட்டாக அமைகிறது.
இயேசுவின் இறைவேண்டல் பற்றி சிந்திக்கும்போது, அது தனித்துவமானது என்பதை அறிகிறோம். அவர் தம்முடைய வாழ்க்கையில் கடவுளின் உதவி தேவைப்பட்டதால் இறைவேண்டல் செய்யவில்லை. அவர் கடவுளாக இருந்தார், இருக்கிறார். இருப்பினும், அவரது மனித இயல்பில், அவர் தனியாக இருக்கவும், தனது தந்தையிடம் உரையாடவும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தந்தையுடனான ஒன்றிப்பை அவர் உன்னதமாகக் கருதினார்.
நாம் கடவுள் இல்லையென்றாலும், கடவுளுடன் ஒன்றித்திருக்க படைக்கப்பட்டுள்ளோம். இது வெளிப்புற அழைப்பு அல்ல, மாறாக, நாம் யார், நாம் யாராக மாற வேண்டும் என்பதற்கான இன்றியமையாத அழைப்பு. "படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தனை வணங்க’ என்பதன் பொருளறிந்து படைத்தவருடன் ஒன்றித்திருபது இன்றியமையாதது.
இயேசு தனியாகச் சென்று தந்தையுடன் இறைவேண்டலில் இணைந்ததன் மூலம், தந்தையிடம் செல்லும் வழியையும் நமக்கு சிறந்த முன்மாதிரியைக் காட்டுகிறார்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, அன்பாலும் வல்லமையாலும் நீர் தேர்ந்த என்னிடம் பேசிய உமது உயிருள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். பேதுருவின் மாமியாரைப் போன்று நானும் பணிவிடைப் புரிவதில் ஆழ்ந்திருக்க என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452