பகிர்ந்து வாழ்வோர்க்கு உயர்வு உறுதி! | ஆர்கே. சாமி | Veritas Tamil

30 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 21ஆம் வாரம் – சனி
1 தெசலோனிக்கர் 4: 9-11
மத்தேயு : 25: 14-30
பகிர்ந்து வாழ்வோர்க்கு உயர்வு உறுதி!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் புனித பவுல், தெசலோனிக்கருக்கு எழுதும்போது, கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில் வளர வேண்டும் என்று ஊக்குவிக்கிறார். கிறிஸ்தவ சமூகத்தின் நம்பிக்கையாளர்கள் அவர்கள் மத்தியில் அன்பை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இவரது அழைப்பு, ஒழுங்கான, தாழ்மையான வாழ்க்கைக்கான அழைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமைதியாக வாழ, ஒருவரின் சொந்த பொறுப்புகளை மனதில் கொண்டு, ஒட்டுமொத்தமாக, சமூகத்தின் தொண்டு மற்றும் மரியாதைக்குரிய சுதந்திரம் இரண்டையும் பவுல் அடிகள் ஊக்குவிக்கிறார்.
மேலும், கடவுளிடமிருந்து அன்பைக் கொடையாகப் பெற்றிருக்கின்ற தெசலோனிக்க ர் மக்கள் தங்களுடைய அன்பைப் பயன்படுத்தி, தங்களுடைய கைகளைக் கொண்டு நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல்.
நற்செய்தி.
நற்செய்தியில், கடவுள் நம்மை நடத்தும் விதத்தை, நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தான் இல்லாதபோது, தனது ஊழியர்களை வேலைகளை கவனித்துக் கொள்ளுமாறு பணிக்கும் விதத்துடன் இயேசு ஒப்பிடுகிறார்.
உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு அவர்களின் திறனைப் பொறுத்து வெவ்வேறு அளவு பணத்தை வழங்குகிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஒவ்வொரு ஊழியரும் தனக்குக் கொடுக்கப்பட்ட திறமைகளின் அளவைப் பயன்படுத்தி எஜமானருக்கு மேலும் பெருக்கித் தர சுதந்திரம் வழங்கப்படுகிறது. இரண்டு வேலைக்காரர்கள் தங்கள் திறமைகளை இரட்டிப்பாக்குகிறார்கள். மூன்றாவது வேலைக்காரன் தலைவருக்குப் பயப்படுகிறான், தனக்குக் கொடுக்கப்பட்ட திறமையை இழந்துவிடுவோமோ என்று பயப்படுகிறான், அதனால் அவன் அதை புதைத்து வைக்கிறான்.
தலைவர் ன் திரும்பி வந்தபோது, ஊழியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திறமைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையும், தலைவருக்கு அவர்கள் செய்த முதலீட்டிலிருந்தும், வருமானத்தை காட்ட அழைக்கப்படுகிறார்கள். தலைவர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதை விட இரட்டிப்பாகக் கொடுக்க இரண்டு வேலைக்காரர்களின் முயற்சிகளை பாராட்டுகிறார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரோ தலைவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.
சினம் கொண்ட தலைவரோ, உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும் என்று கூறி விடைபெறுகிறார்.
சிந்தனைக்கு.
கடவுள் நம் ஒவ்வொருவரிலும் நிறைய முதலீடு செய்கிறார். கடவுள் நமக்கு திறமைகளையும் கொடைகளையும் தந்துள்ளார். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த முதலீட்டில் ஒருவித வருமானத்தை (பிரதிபலனை) எதிர்பார்க்கிறார். நாம் பெற்றுக்கொண்ட தாலந்தைப் பெருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதோடு, தவறினால், எதிர்மறை தீர்ப்பைப் பெறக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
மேற்கண்ட உவமையில், இறுதியாக வருபவர், ஒரு தாலந்தையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் அதைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்து வைக்கிறார். தன் தலைவர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர், அதாவது அவர் ஒரு கஞ்சன் என்று கருதி, இருக்கிற ஒரு தாலந்தையும் பாதுகாத்து வைக்க புதைத்து வைக்கிறார். இந்த உவமையில் ‘தாலந்து’ என்பது கடவுள் நமக்கு அருளியிருக்கும் திறமைகைளக் குறிப்பதாகப் பொருள்கொள்ளலாம்.
நமக்கு நாமே ஒரு முடிவெடுத்து செயல்படுவதில் தவறுகள் ஏற்படலாம். ‘வட்டிக்காவது’ அவர் அந்த ஒரு தாலந்தை கொடுத்திருக்கலாம். சிறிது பலனாவது கிடைத்திருக்கும். புதைத்துவைத்தால் யாருக்கு என்ன இலாபம்!
தலைவரின் எதிர்பார்ப்புக்குப் பாத்திரமாக நடந்துகொண்ட இருவரைப் பாராட்டி, "நல்லது, என் நல்ல, உண்மையுள்ள வேலைக்காரரே, நீங்கள் சிறிய விடயங்களில் உண்மையுள்ளவனாக இருந்ததால், நான் உனக்குப் பெரிய பொறுப்புகளைத் தருவேன்." என தலைவர் கூறியதில் கவனம் செலுத்த நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நமகக்களித்த திறமைகளை, கொடைகளை பொதுநன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல ‘வீண், வீண், எல்லாமே வீண்தான்’.
கடவுள் நமக்குக் கொடுக்கும் கொடைகள் அவற்றின் இயல்பிலேயே பெருக வேண்டும். மேலும், நாம் கடவுளின் அருளுடன் ஒத்துழைக்கும்போது, பெற்றுக்கொண்ட கொடைகள் அதிவேகமாக பெருகும். நமது சொந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும்போது, கடவுள் நமக்குக் கொடுத்த எந்த கொடையை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்த விரும்புகிறோம் என்று இன்றாவது சிந்திப்பது வரவேற்கத்தக்கது. காலம் கடந்து யோசிப்பதால் கிஞ்சிற்றும் பலனில்லை.
தூய ஆவியின் ஏழு கொடைகளும் கடவுளால் வழங்கப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட கொடைகள். அவை நமக்கானவை மட்டமல்ல, பிறரோடு, பிறர் நல்வாவுக்குப் பயன்பட வேண்டியவை. முதல் வாசகத்தில் இதை தெசலோனிக்க இறைமக்களுக்குத் தெளிவுப்படுத்துகிறார் பவுல்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த உலகத்தின் அழிந்துபோகும் செல்வங்களை நான் புறக்கணித்து, நிலைவாழ்வுக்கானவற்றில் கவனம் செலுத்தவும். நீர் அருளிய கொடைகளைப் பிறர் நல வாழ்வுக்குப் பயன்படுத்தவும், எனக்கு உமது ஞானத்தின் ஆவியை அருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
