இறைவனின் மீட்பு யாருக்குரியது? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 28 வெள்ளி 
மு.வ: உரோ:  4: 1-8
 ப.பா: திபா 32: 1-2. 5. 11
லூக்: 12: 1-7

கிறிஸ்தவ வாழ்க்கையில் கடவுளின் மீட்பு ஒவ்வொருவருக்கும் கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு சட்டங்களை பின்பற்றுவதாலோ அல்லது நம்முடைய செயல்முறைகளை வைத்தோ வருவதில்லை. மீட்பு கடவுளின் அருளால் மட்டுமே நமக்குக் கிடைக்கும். கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக இருப்பது ஆழமான இறைநம்பிக்கை. இறைநம்பிக்கைதான் கடவுளின் இறையன்பை முழுமையாகச் சுவைக்க    நமக்கு அடிப்படையாக இருக்கின்றது. ஆபிரகாம்  கடவுள் தந்த மீட்பினைப் பெற்று ஆசீர்வாதமான இனமாக மாறினார். காரணம் அவரின் ஆழமான இறைநம்பிக்கை. அவர் இவ்வுலகம் சார்ந்த படைகளுக்கோ சூழலுக்கோ செல்வத்துக்கோ அவர் அஞ்சவுமில்லை; கீழ்ப்படியவுமில்லை . மாறாக இறைவனுக்கு மட்டுமே அஞ்சினார். எனவே தான் கடவுள் அவரை மிகச்சிறந்த உயரத்திற்கு உயர்த்தினார்.

இன்றைய நற்செய்தி வாசகமும் இத்தகைய ஆழமான சிந்தனையை சிந்திக்க தான் அழைப்பு விடுக்கின்றது. அழியக்கூடிய உடலும், அழியாத ஆன்மாவும் இணைவதே மனிதவாழ்வு. நாம் கொண்டிருக்கக்கூடிய உடல் அழியலாம்; ஆனால் நம் ஆன்மா எப்போதும் அழியாது. அது மட்டும்தான் கடவுளுடைய மீட்பினை முழுமையாக சுவைக்க இறுதிவரை செல்லும். எனவேதான் புனித  சவேரியார்   மற்றும் வனத்து அந்தோனியார் போன்ற புனிதர்கள் எல்லாம் உலகம் சார்ந்த சொத்துக்களையெயாம் களைந்து தங்களுடைய  ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என்ற வார்த்தைகளைக் கூறி நம்மை ஆன்மாவைக் காக்கின்றவர்களாக வாழ அழைக்கின்றார். அப்படியெனில் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்ற எண்ணம் நமக்கு வரலாம். ஆனால் அதன் உண்மைப் பொருள் என்னவென்றால் நமது ஆன்மாவை பலமானதாக நலமானதாக நாம் காத்துக்கொள்ள வேண்டும் என்பதே. நமது ஆன்மா பலமுள்ளதாக இருந்தால் நமது உடலும் நிச்சயம் பலமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

ஆன்மாவை காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? நம்மை எப்போதும் கண்ணோக்கிக் கொண்டிருக்கும் கடவுளுக்கு அஞ்சி வாழ்வது. இங்கே அச்சம் என்று கூறப்படுவது பயந்த வாழ்வை அல்ல. மாறாக இறைவனிட அன்பு கொண்டு, அவர் திருஉளப்படி நடந்து அவருக்கு விருப்பமில்லாதவற்றை தவிர்ப்பதே. இதற்கு எதிர்மறையானவற்றை நாம் செய்யும் போது உலக மாயைகள் நம்மை சூழ்ந்து கொள்ளும். நமது ஆன்மா பலமிழந்து கடவுள் தரும் மீட்பை நாம் இழக்க நேரிடும். எனவே கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்து ஆன்மாவைக் காத்து அவருடைய மீட்பை பெற வரம் வேண்டுவோம்.

 இறைவேண்டல்
ஆன்மாவின் காவலே இறைவா!  உமக்கு அஞ்சி வாழ்ந்து எமது ஆன்மாவை காத்துக்கொள்பவர்களாக நாங்கள் வாழ வரம் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்