கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கையே நமக்கு அருள் வளம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

11 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 19 ஆம் வாரம் –திங்கள்

இணைச்சட்டம் 10: 12-22
மத்தேயு  17: 22-27

 
 கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கையே நமக்கு அருள் வளம்!
 
 முதல் வாசகம்.

முதல் வாசகத்தில்,  மோசே இஸ்ரயேலர்களை அவர்களின்  முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் அவர்களின் ஆண்டவராகிய கடவுளுக்குப் பயந்து, அன்புகூர்ந்து, அவருக்குச் செவிசாய்த்து,  அவருடைய கட்டளைகளைச்  சொந்த நலனுக்காக ஏற்று வாழும்படி  பணிக்கிறார்.  

எனவே அவர்கள் தங்கள் இருதயங்களை விருத்தசேதனம் செய்ய வேண்டும், பிடிவாதமாக இருக்கக்கூடாது என்பதை அவர் அவர்களுக்கு நினைவூட்டுகிறார். குறிப்பாக ஆதரவற்றோர், கைம்பெண்கள் போன்ற பலவீனமானவர்களுக்குக் கடவுளின் நீதியை அவர் வலியுறுத்துகிறார், மேலும் இஸ்ரயேலர்களும் ஒரு காலத்தில்  எகிப்தில்  அந்நியர்களாக இருந்ததினால், அந்நியரையும் அன்புசெய்ய வேண்டும் என்று  அழைப்பு விடுக்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசுவின் வரவிருக்கும் மரணம் குறித்த செய்தியை அவரது சீடர்களால் ஏற்க இயலாத நிலையில் குழப்பமடைகிறார்கள்.   கடவுளின் திட்டத்தில் இயேசுவின் மரணம் உள்ளதை  அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மெசியாவாக இயேசு உரோமையின்  ஒடுக்குமுறையிலிருந்து மக்களை விடுவிப்பார் என்று அவர்கள் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

கடவுளின் அன்பு அவரது துன்பம் மற்றும் மரணம் - மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் வெளிப்படும் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.   பின்னர், இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்க,   “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார்.

எனவே, குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல என்ற போதிலும்,  பேதுருவை,  கடலில் தூண்டில் போட்டு  அகப்படும் மீனை எடுத்து அதன் வாயில் இருக்கும்  ஸ்தாத்தேர் நாணயத்தை அவர் சார்பாகவும்  இயேசுவின்  சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்று கூறுகிறார்.

சிந்தனைக்கு.

ஆதரவற்றோர் மற்றும் கைம்பெண்கள்  மீது கடவுள் கொண்டுள்ள அக்கறையாலும், அந்நியர் மீது அவர் கொண்டுள்ள அன்பாலும் கடவுளின் நீதி வெளிப்படுத்தப்படுவதோடு சிறப்பிக்கவும் படுகிறது. அதே வேளையில், எகிப்தில் அந்நியர்களாக இருந்தபோது இஸ்ரயேலர்களுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள், இது போன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களிடம் இரக்கம் காட்ட அவர்களைத் தூண்டப்படுக்கிறார்கள்.

முதல் வாசகத்தில் உள்ள இஸ்ரவேலர்களைப் போலவும், நற்செய்தியில் உள்ள சீடர்களைப் போலவும், சில சமயங்களில் கடவுளின் எண்ணமும் திருவுளமும் நம்மால்  புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மையே. இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறுமா என்று யோசித்து, பேதுரு அந்த மீனை  இழுக்கும்போது நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் நிறைந்திருப்பார். 

இயேசு சொன்னது போலவே, நாணயத்தைப் பார்த்தவுடன், பேதுரு பிரமிப்பில் ஆழ்ந்திருப்பார். இயேசுவின் பாடுகள் மற்றும் மரணம் பற்றிய இந்த இரண்டாவது கணிப்பில் அவர் அனுபவித்த பயமும் பதட்டமும் மெதுவாகக் குறையத் தொடங்கியிருக்கும், ஏனெனில் பேதுரு தனது இறைவனிடமிருந்து மற்றொரு நம்பமுடியாத அடையாளத்தைக் கண்டார்.

கடவுள் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அற்புதங்களைச் செய்கிறார். இதில் பிரச்சனை என்னவென்றால், நாம் அவற்றைப் பகுத்தறிவதில் பெரும்பாலும் தவறிவிடுகிறோம்.  வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை என்பதை கடவுள் எப்போதும் அறிவார். நமது போராட்டங்களையும் சந்தேகங்களையும் அவர் அறிவார். சில சமயங்களில், வேண்டுமென்றே இறைவேண்டல் மற்றும் நம்பிக்கைமிகு செயல்கள் மூலம் நமது நம்பிக்கையை ஆழப்படுத்த அமைதியாக இருக்கிறார் என்றே நாம் கருத வேண்டும். நேரமு கனியும்போது,   திடீரென்று வாழ்க்கையில் ஒரு புதிய தெளிவைப் பெறுவோம்.  அது அவருடைய அஉளின் விளைவாகும்.

பேதுரு தனது அச்சத்தையும்,  குழப்பத்தையும், போராட்டங்களையும் தாண்டி, இயேசுவின் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க, இந்த தனிப்பட்ட அவரது வல்ல செயலின் (மீனில் நாணயம் காணுதல்)  அருள் அவருக்குத் தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார். அவ்வாறே, நம்மையும் அவர் திடப்படுத்துவார் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கை கொள்வோருக்கு அவரது அருள் கிட்டாமல் போகாது.

இறைவேண்டல்.

ஆண்டவரே, எனது வாழ்வில்  உமது திட்டத்தை அறிந்துணராமல்  என் விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகள் எடுத்து வாழ்ந்ததற்காக என்னை மன்னியும். ஆமென்
 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452