கிறிஸ்துவின் ஆன்மாவை நாம் நாளுக்கு நாள் இழந்துவருகிறோம்! ஆர்கே. சாமி | Veritas Tamil

3 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 22ஆம் வாரம் – புதன்
 
கொலோசையர் 1: 1-8
லூக்கா  4: 38-44


கிறிஸ்துவின் ஆன்மாவை நாம் நாளுக்கு நாள் இழந்துவருகிறோம்!

முதல் வாசகம்.இன்றைய வாசகங்கள் பணி வாழ்வு பற்றிப் பேசுகின்றன. கொலோசையரின் நம்பிக்கைக்காக   பவுல் அடிகள் அவர்களைப் பாராட்டுகிறார்.  கொலோசையில் (நவீன துருக்கியில்) உள்ள விசுவாச சமூகத்திற்குப் புனித பவுல் தனது கடிதத்தைத் எழுதுகிறார்.  பவுலும் தீமோத்தேயுவும் கொலோசையச் சமூகத்திற்கு "கடவுளின் அருளையும் அமைதியையும் " பகிர்கிறார்கள்.

விண்ணகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையும், உலகளவில் கனி கொடுக்கும் நற்செய்தியும், கடவுளுடைய வார்த்தையின் உருமாற்றும் ஆற்றலையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் என்றும் கொலோசைய திருஅவையை முன்னிட்டு பெருமிதம் கொள்கிறார். 

நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்தில் போதித்துவிட்டு சீமோன் பேதுருவின் மாமியாரின் வீட்டிற்குப் போகின்றார். அங்கே பேதுருவின் மாமியார்  காய்ச்சலாய் அவதியுறுவது கண்டு  அவரைக் குணப்படுத்துகின்றார். குணம்பெற்ற அவர் சிறிதும் ஓய்வு எடுக்காமல் , உடனே  எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார் என்று லூக்கா குறிப்பிட்டு பதவு செய்துள்ளார். 

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தைக் கூர்ந்து வாசித்தால்,  பவுல் அடிகள் தெசலோனிகேயருக்கு எழுதிய திருமுகத்தில்,  “சகோதர, சகோதரிகளே, நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளரவேண்டாம்” என்று வலியுறுத்துவார். உலக மக்களுக்கு ‘நன்மை’ அளிக்கும் பணிகளை மேற்கொள்ளும் போது நாம் நற்செய்தி அறிவிக்கறோம். இதில் என்றும் மனந்தளரக் கூடாது என்பது பவுல் அடிகளின் அன்பான எச்சரிக்கையாக தரப்படுகிறது. 

நற்செய்தியில், தொழுகைக்கூடத்தில் போதித்தப் பிறகும் இயேசு, ஓய்வின்றி சீடரான பேதுருவின் மாமியாரைக் குணமாக்கினதோடு,  வீட்டிற்கு வெளியே இருந்த சுற்றத்தாரை, மற்றும் வெளியூர் மக்களோடு நற்செய்தியைப் பகிர்வதோடு,  சற்றும் ஓய்வும் இல்லாமல் கொண்ட பணியை நிறைவேற்றியதை வாசிக்கிறோம்.                   

மேலும், பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர் என்று லூக்கா குறிப்பிட்டுள்ளார். ஏன் மக்கள் இயேசுவைத் தடுத்துநிறுத்தப் பார்க்கின்றனர்? என்ற கேள்விய எழுப்பினால், ஒருவேளை அவர்கள் இயேசுவைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள விரும்பியிருக்கக்கூடும் என்ற பதிலதான் மிஞ்சும். 

ஆம், அவர்கள் இயேசுவை தங்களுக்குள் வைத்துக்கொள்ள முற்பட்டனர். இயேசு இங்கே முடக்கப்பட்டார்.  இன்று, கப்பர்நாகூம் மக்களின் கவனத்தை நம் ஆண்டவர் ஈர்த்த இந்த ஆரம்ப வழியைப் பற்றி சிந்தித்துப் பார்போம். சிலர் இறுதியில் இயேசுவிடமிருந்து விலகிச் சென்றாலும், இயேசுவோடு கொண்ட அனுபவங்களின் காரணமாக பலர் உண்மையுள்ள சீடர்களாக மாறினர் என்பதை மறுக்க இயலாது. அவர்களில் ஒருவர் போதுருவின் மாமியார். 

இன்றும், நமது பிறர் அன்பு பணிதான் இயேசுவின் சீடத்துவத்தை பெருகச் செய்யும். கிறிஸதுவத்தில் பணி வாழ்வும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதவை. எளிமையும் சேவையும் திருஅவையின் இரு கண்கள். மாறாக, இன்று நம்மில் பெரும்பாலோர், தனிமனித ஆசைகளையும் தேவைகளையும் மட்டுமே முன்னிறுத்தி பெருமைகொள்ளும் பண்பாட்டில் மூழ்கியுள்ளனர். கிறிஸ்துவின் ஆன்மாவை நாம் நாளுக்கு நாள் இழந்துவருகிறோம் என்றால் மிகையாகாது. 

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், அவரது ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ எனும் திருத்தூது மடலில் எண் 6-ல், “உயிர்ப்பு இல்லாத தவக்காலம்போல கிறிஸ்தவர்களின்  வாழ்வு உள்ளது” என்று தமது வேதனையை வெளிப்படுத்தினார்.  தவக்காலத்தின் முடிவானது ஆண்டவரின் உயிர்ப்பில்தான் மகிழ்ச்சியாக மாறுகிறது.  ஆனால், கிறிஸ்தர்களின் வாழ்வில் அத்தகைய நற்செய்தி மகிழ்ச்சியை நாம் காண்பதில்லை. இதற்கு அடிப்படை காரணம் பிறர் அன்பு சேவைக்கான அர்ப்பணிப்பு நம்மில் குறைந்துகொண்டே போகிறது.   

இறுதி தீர்ப்பு நாளில் ‘நீங்கள் எனக்குப் பெரும் செலவில் ஆலயம் கட்டினதால், ‘நீங்கள் ஞாயிறுதோறும் தவறாமல் திருப்பலிக்கு வந்ததால் என் வலப் பக்கத்திற்குச் செல்லுங்கள் என்று  ஆண்டவர் கூறப்போவதில்லை’.

நற்செய்தியில் கப்பர்நாகூம் மக்கள், இயேசுவைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள விரும்பினார்கள். இயேசு அதை ஏற்கவில்லை. இன்று நாமும் அப்படிதான் இயேசுவை நமக்குள் வைத்துக்கொள்ள முனைகிறோம். இதனால் பலன் ஒன்றுமில்லை. பிறர் அன்பு பணியின் வாயிலாக இயேசுவின் நற்செய்தி மணம் கமழ வேண்டும். 

இறைவேண்டல்.

வல்லமைமிகு என் ஆண்டவரே, வாழ்க்கையில் நற்செய்திக்கு என் முழுமையான கவனத்தை நீர் விரும்புவதை நான் அறிவேன். உம்மாலும் உமது செயலாலும் என் வாழ்க்கை உமக்கனாப் பணியில்  வியப்படைவதற்குத் தேவையான அருளை எனக்குக் தந்தருள்வீராக. ஆமென்.

 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்