மனமுவந்து சிலுவை ஏற்போர் அதன் சுமை அறியார்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு
15 ஜூலை 2024 
பொதுக்காலம் 15 ஆம் வாரம் -  திங்கள்

எசாயா 1: 11-17                                                  
மத்தேயு  10: 34- 11: 1

மனமுவந்து சிலுவை ஏற்போர் அதன் சுமை அறியார்!

முதல் வாசகம்.

இன்று எசாயா இறைவாக்கினர் நூலின் முதல் அதிகாரத்திலிருந்து முதல் வாசகம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசாயா இறைவாக்கினர்  இஸ்ரயேலரை சற்று  கடுமையாக எச்சரிக்கிறார். ஏனெனில்,  அவர்கள் பலிகள் செலுத்துவதிலும், சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.  ஆனால்  அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள்  கடவுளுடனான அவர்களின் நம்பிக்கை உறவுக்கு விரோதமாக இருந்தது.   

பொதுவாக ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை  வதைத்துக் கடவுளுக்கு நல்லவர்களாக இருக்க  முற்படுகிறார்கள்.  கடவுள் உண்மையில் விரும்புவது பிராணிகளின் பலிகளையோ அல்லது சடங்குகளையோ அல்ல, மாறாக ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்வதும்,  திக்கற்றோருக்கு நீதி வழங்குவதும்,  ஆதரவற்றோருக்குக் கைகொடுப்பதும் கைம்பெண்ணுக்காகப் பரிந்து பேசுவதும் அவர்களின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியை வாசிக்கத் தொடங்கும்போது,  இயேசுவின் கூற்று  அதிர்ச்சியளிக்கக் கூடியதாக  இருக்கிறது.  “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன் என்கிறார். 
அவருடைய போதனைக்கு எதிர்மறையான கூற்றாக இயேசுவின் இன்றைய படிப்பினை வெளிப்படுகிறது.

இயேசுவின்  நற்செய்தி சீடர்கள் மற்றம் மக்கள் மத்தியில் பிரிவு, வெறுப்பு, துன்புறுத்தல் போன்றவற்றைத் தலைத்தூக்கச் செய்யும் என்கிறார்.  இத்தகைய பிரிவும் போராட்டமும்  அவர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் வரக்கூடும் என அறிவுறுத்துகிறார். அதிலும், இயேசுவை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் இயேசுவின் சீடர் எனக் கருதப்படத் தகுதியற்றோர் என்வும் தெளிவுறக் கூறுகிறார். 

அனைத்துக்கும் மேலாக, தம் சிலுவையைச் சுமக்காமல் இயேசுவைப்  பின்பற்றும் சீடர்கள்  அவரது சீடர்கள் என் கூறிக்கொள்ள  தகுதியற்றோர் எனவும், யாரெல்லாம் அவரவர் உயிரைத் தற்காத்துக்கொள்ள  விரும்புகிறாரகளோ அவர்கள் அதை இழந்துவிடுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். 

சிந்தனைக்கு.

 வழக்கமாக, ஞாயிறுதோறும் திருப்பலிக்குத் தவறாமல் செல்வதாலும், மறைக்கல்வி வகுப்பிற்குப் பிள்ளைகளை அனுப்புவதாலும், திருவிழாக்களில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துக் கொள்வதாலும், பங்கில் பணிக்குழுக்களில் பங்குப் பெறுவதாலும், பங்குத் தந்தைக்குப் பக்கபலமாக இருப்பதாலும், கூழைக்கும்பிடு போடுவதாலும்  சிறந்த கிறிஸ்தவர் என்று எண்ணிக்கொள்வோர் எண்ணிக்கை ஏட்டில் அடங்கா. 

முதல் வாசகத்தில் எசாயாவுக்கு வழங்கப்பட்ட வாக்கின்படி இவை போதாது. ஒரு கிறிஸ்தவராக நம் முன் கடவுள் வைக்கும் சவாலானது,  இன்று உலகில் உள்ள அநீதியான மற்றும் நியாயமற்ற நடைமுறைகளை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதாகும். ஒடுக்கப்படுவோரையும், நசுக்கப்படுவோரையும், ஏமாற்றப்படும் ஏழைகளையும், அநீதியாகத் துன்பறுத்தப்படுவதோடு, உரிமைகள் பறிக்கப்படும் பூர்வீக குடிகளையும் விடுவிக்க நமது முனைப்பு என்ன? இந்த முனைப்பில்தான் இன்று கிறிஸ்தவம் அடங்கியுள்ளது. முடங்கிக் கிடக்கும், மறுக்கப்படும்  நீதியை நிலைநாட்டவும், பறிக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும், நமது பணியும் ஈடுபாடும்  இல்லையெனில், கிறிஸ்தவம் மேலும் வேரூன்றுவதில் பயனில்லை. உண்மைக்குக் குரல் கொடுக்கும்போது பிரிவும் பிளவும் வரும். அதை ஏற்கத்தான் வேண்டும். 

இன்று நம்   இயேசு ஒரு சவாலை முன்வைக்கிறார். நற்செய்தியின் படி வாழ்வதால்  நம் சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் கூட ஒதுக்கிவைக்கப்படும் நிலை ஏற்படலாம்.   எனவே, கிறிஸ்தவ  வாழ்க்கையில் நமது முதன்மையான முன்னுரிமை எது என்பதை நாம் தேர்வு செய்ய வேண்டும்.  பெயர், புகழ், செல்வாக்கு என இவற்றை எதிர்ப்பார்த்து இயேசுவின் பணியில்  காலடி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவர். கிறிஸ்துவத்தில், சிலுவையின்றி சிம்மாசனம் இல்லை என்பதை நாளும் நினைவில் கொண்டு பணியில் துணிவுகொள்ள வேண்டும். நாம் இயேசுவின் ஆவியால் இயக்கப்படும் ஓர் உயிருள்ள இறை சமூகம். இந்த ஆவியாரால் அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த நீதி என மண்ணகத்தில் நாம் வாழுமிடத்தில் நிலைப்படுத்த வேண்டியது நம் கடமையும் மீட்புக்குரிய  செயலுமாகும். 

ஆண்டவர் கூற்றின்படி பிளவுகளும் குழப்பங்களும் ஏற்படக்கூடும். ‘ஆனால், நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20) என்று அன்று திருத்தூதர்கள் சான்று பகர்ந்ததைப்போல் இன்று நாம் துணிவுடன் செயலால் சான்று பகரப் பணிக்கப்படுகிறோம்.

அனைத்துக்கும் மேலாக, நாம் இயேசுவின் பக்தர்களாக அல்ல சீடர்களாக பணியேற்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவேதான், “ஒருவன் என்னைப் பின்பற்றி வர  விரும்பினால், தன்னை வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்” என்று,  இன்று நினைவூட்டுகிறார் ஆண்டவர். 

இறைவேண்டல்.

சோர்ந்திருப்போரை என்னிடம் வாருங்கள் என்றழைக்கும் ஆண்டவரே, பணி காலத்தில் ஏற்படும் சஞ்சலங்களுக்குப் பயந்து ஒதுங்கி வாழாமல்,  உமது துணையில் சவால்களை ஏற்று வாழும் மனப்பக்குவத்தை என்னில் அருள்வீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments

David Allymuthu (not verified), Jul 14 2024 - 8:39pm
I’m reading daily very good and simple explanations,
David Allymuthu (not verified), Jul 14 2024 - 8:39pm
I’m reading daily very good and simple explanations,
David Allymuthu (not verified), Jul 14 2024 - 8:39pm
I’m reading daily very good and simple explanations,