ஆண்டவரின் மாட்சியின் பங்குதாரர்கள் நாம்! |ஆர்.கே. சாமி | VeritasTamil
இன்றைய இறை உணவு
06 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18ஆம் வாரம் - செவ்வாய்
தானியேல் 7: 9-10, 13-14
மாற்கு 9: 2-9
ஆண்டவரின் மாட்சியின் பங்குதாரர்கள் நாம்!
முன்னுரை
இன்று நாம் இயேசுவின் தோற்றமாற்ற பெருவிழாவினை கொண்டாடுகின்றோம். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று தந்தை கடவுள் தன் மகனை மாட்சி படுத்தியது தான் இயேசுவின் தோற்றமாற்ற பெருவிழாவின் மையமாக உள்ளது.
தபோர் மலையின் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இயேசு கிறிஸ்து தோற்றமாற்றம் அடைந்தார் என்ற நம்பிக்கை, கி.பி. 3ஆம் நூற்றாண்டில் உருவானதாக அறிகிறோம். இந்த நம்பிக்கையின் விளைவாக, அவ்விடத்தில் 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் ஆகஸ்ட் 6ந்தேதி திறக்கப்பட்டது. அந்நாள் முதல், ஆண்டவரின் தோற்றமாற்ற விழாவை ஆகஸ்ட் 6ந்தேதி சிறப்பிக்கும் வழக்கம் நமது திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்பு உருமாற்றம் என்றோம், இக்காலத்தில் புதிய மொழிப்பெயர்ப்பின் பலனாக தோற்றமாற்றம் என்கிறோம். ஆம், தாபோர் மலையில் இயேசுவின் உருவம் மாறவில்லை, மாறாக அவரது தோற்றமே மாறியது.
முதல் வாசகம்.
இன்று நாம் கொண்டாடும் இயேசுவின் தோற்றமாற்ற பெருவிழாவினை முன்னறிவிக்கும் விதமாக முதல் வாசகம் அமைகின்றது. இறைவாக்கினர் தானியேல் கண்ட காட்சி இதனை விவரிக்கிறது. அதில் விண்ணத்தில் இறைத்தந்தை மாட்சியோடு அமர்ந்திருப்பதைத் தானியேல் காண்கிறார். இதன்வழி, கடவுளின் அரசு அழிந்து போகாது என்பதை உறுதியாகக் கூறுகிறார்.
மேலும், தானியேலின் இந்த காட்சியை, இயேசு கிறிஸ்துவின் மாட்சியும் அரசும் இயேசுவுக்கே உரியது என்றும், அவரது ஆட்சிக்கு முடிவே இராது என்ற உண்மைய விவரிப்பதாகவும் நாம் பொருள் கொள்ளலாம். .
நற்செய்தி.
இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகமாக தரப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான நிகழ்வு. அதனை நேரில் காண பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான் ஆகிய முன்று சீடர்களுக்கு வாய்ப்புக் கிட்டியது.
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. இந்த நிகழ்வே, ஆண்டவரின் தோற்றமாற்ற விழா கொண்டாட்டத்துக்கு அடிப்படையாக திருஅவை ஏற்றது.
சிந்தனைக்கு.
இயேசு அவரது இந்த தோற்றமாற்றத்திற்கு சற்று முன்பு, தம் சீடர்களுக்கு அவரது பாடுகள் துன்பம் மற்றும் மரணம் குறித்து முன்னறிவித்தார். அதிலும் அவர் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவார், கொல்லப்படுவார் என்றும் பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்றும் கூறினார். இந்த அறிவிப்பானது சீடர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னரே, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் தாபோர் மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
இன்று, நமது ஆண்டவரால் சீடர்களுக்கு அளித்த இந்த மிக அற்புதமான அனுபவத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
தந்தையாகிய கடவுளின் மாட்சியை அறிந்து செயல்பட வேண்டும் என்பது இயேசுவின் எதிர்ப்பார்ப்பாகும். திருச்சட்டத்தை கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார். மோசே இஸ்ரயேல் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். எனவே தான் மத்தேயு நற்செய்தியாளர், இயேசுவை புதிய மோசேயாக ஒப்பிட்டு, தனது நற்செய்தியை எழுதுகிறார். அதேபோல், பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தவராகவும் சித்தரிக்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் மதிக்கக்கூடிய மற்றுமொரு மிகப்பெரிய மனிதர் எலியா. இறைவரக்கினர்களுள் மிகச் சிறந்த இறைவாக்கினராக, இஸ்ராயேல் மக்களால் கருதப்படுகிறவர். இவர்கள் இருவரும் இயேசு தனது சாவை முதல்முறையாக முன்னறிவித்தவுடன், இயேசுவோடு உரையாடுகிறார்கள்.
இந்த இரண்டுபேரும் இங்கே தோன்றுவது ஒரு சிறந்த செய்தியை நமக்குத்தருகிறது. அதாவது, திருச்சட்டத்தையும், இறைவாக்கினர்கள் முன்னறிவித்ததையும் இயேசு நிறைவேற்றுகிறவராக விளங்குகிறார் என்பதுதான் அது.
கடவுளிடமிருந்து நாம் பெற்ற பணியை நிறைவேற்ற முயற்சி செய்தால், இயேசுவின் தோற்றமாற்றத்தின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்பதை அவரது தோற்றமாற்றம் நினைவூட்டுகிறது. ஆகவே, நமக்கு வரும் துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டு, இயேசு விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்வோமானால், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்ற குரல் நமக்கும் உரியதாக இருக்கும்.
இறைவேண்டல்.
‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே’ என்று தந்தையால் போற்றப்பெற்ற ஆண்டவரே, ஒரு நாள் உமது மாட்சியை கண்டு களிக்கும் பேற்றினை நானும் பெற்றிட என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452