மார்க்கோபோலோவின் பயணம்
மிகப் பழங்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்த வரும், பல நாடுகளைக் கண்டவரும், பல வரலாற்றுக் குறிப்புகளுக்கு ஆதாரமாகவும் விளங்கிய மார்க்கோ போலோவை நாம் 'பயண நாயகர்' எனலாம். வரலாற்றை எழுதி, வரலாற்றைத் திருத்தி எழுதிய சாதனையாளராக நாம் இவரைக் குறிப்பிடலாம். சாலை வசதி, பயண வசதிகள் இல்லாத அக்காலத்தில் இவரது துணிவு மிக்க பயணம் ஓர் வரலாற்றுப் பயணம் எனலாம்.
இவரது காலம் 1254-1324 கி.பி. ஐரோப்பாவில், இத்தாலி நகர அரசான வெனிஸ் பகுதியில் பிறந்தவர். இக்காலத்தில் ஐரோப்பியர்களுக்கு ஆசியாவைப் பற்றி அதிகம் தெரியாது. அதுவும் குறிப்பாக தூரகிழக்கு நாடான சீனா பற்றி தெரியாது. செங்கிஸ்கான் என்ற மங்கோலிய மாவீரனின் படையெடுப்பால் சீனா குறித்து அறிந்தாலும் - தொடர்பு கிடையாது எனலாம். அதோடு மற்ற ஆசிய நாடுகளுடன் தொடர்புக்கு வழியில்லை எனலாம். மத்திய ஆசியா, துருக்கி போன்ற நாடுகளின் வணிகர்கள் மூலமாக அறிந்த செவிவழிச் செய்தியே அவர்களுக்கு இருந்தது.
1260க்கு மத்தியில் மார்க்கோபோலோவின் தந்தை நிக்கோலோபோலோவும், அவரது சகோதரர் மாஃபியா போலோவும் சீனா பற்றி அறிய, செல்ல வேண்டிய இடம் சீனாவே என முடிவு செய்தனர். பிறகு பலவித இன்னல்களுக்கு இடையில் அவர்கள் இருவரும் முதன்முதலாக சீனா சென்றனர். அப்போதைய சீசன அரசர் குப்ளே கான் (Kublaikhan 1215 - 1294). அவரது அரசவைக்கு இவ்விருவரும் சென்றனர். அவர் இதற்கு முன் எந்த ஐரோப்பியரையும் சந்தித்ததில்லை. இவர் களைத்தான் முதலில் சந்தித்தார். எனவே இவர்களை சந்திப்பதிலும், இவர்கள் என்ன சொல்கிறார்கள் என அறிவதிலும் மிக்க ஆர்வம் காட்டினார்.
இவர் சீனாவிற்கு கிறிஸ்துவ சமயம் பற்றி, ஐரோப்பிய கலை, இலக்கியம் பற்றி போதிக்க ஐரோப்பியர்களை சீனாவிற்கு அழைக்க விரும்பினார். மார்க்கோபோலோவின் தந்தை ஐரோப்பா திரும்பி, குப்ளேகானின் விருப்பம் பற்றி கூறினார். பலர் இவர்கள் சீனா சென்றது குறித்தும், இந்த வேண்டுகோள் குறித்தும் நம்பக்கூடத் தயாராய் இல்லை.
1271இல் மீண்டும் இந்த இருவரும் சீனா செல்ல முடிவு செய்தனர். அப்போது இளவயதான மார்க்கோ போலோவையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்.
குப்ளேகான் மார்க்கோபோலோவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மார்க்கோபோலோ குப்ளேகானை மிகவும் கவர்ந்தார். குப்ளேகான் மார்க்கோபோலோவை சீனாவின் பல இடத்திற்கும், திபெத் பகுதிக்கும் அனுப்பி வைத்தார். மார்க்கோ போலோ இச்சமயத்தில் பர்மா நாட்டிற்கும் சென்றார். பல இடங்களுக்கும் சென்று, பல்வேறு மதம் - இனம் - மொழி மக்களை மார்க்கோபோலோ சந்தித்தார். இந்தவகையில் இதுவரை எந்த ஐரோப்பியரும் காணாத ஆசியப் பகுதிகளை மார்க்கோபோலோ சுற்றிப் பார்த்தார். ஏறத்தாழ தன் தந்தையுடன் மார்க்கோ போலோ சீனாவில் இருபது ஆண்டுகள் தங்கியிருந்தார். ஆசிய மொழிகள், நாகரிகம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கைமுறை என எல்லாம் தெளிவாய் அறிந்தார்.
பிறகு 1295இல் வெனிஸ் திரும்பினார். செல்லும் போது சீனாவில் இருந்து அவர் கொண்டு சென்ற பல பொருள்கள் ஐரோப்பியரை மிகவும் கவர்ந்தது. இதனையெல்லாம் அவர்கள் இதற்குமுன் கண்டதே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு சீனர்கள் பல விஷயங்களில் முன்னோடியாய் இருந்தனர். கலைப் பொருள்கள், சர்க்கரை, காகிதம், பட்டு, வெடிமருந்து இதில் அவர்கள் மிகமிக முன்னணியில் இருந்தனர்.
மார்க்கோபோலோ தனது பயண அனுபவத்தை ஒரு நூலாக எழுதினார். "மார்க்கோபோலோவின் பயணம்'' (The travels of Marcopolo) என்பதே இப்பயண நூல். எல்லாவகையான பயண நூலிலும் இது சிறப்பானதாக கருதப்படுகிறது. பழங்காலத்திலேயே சீனாவில் இருந்து பாகியான், யுவான்சுவாங், இத்சிங் போன்றவர்கள் வெளிநாடு சென்று பயணக் குறிப்பு எழுதினர். ஐரோப்பியர், சீனா சென்று மிக விரிவாக சுற்றுப் பயணம் செய்து எழுதப்பட்ட இந்நூல் ஓர் அரிய படைப்பாகும். இந்நூல் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு வித்திட்டது. அரசியல் உறவு, வணிகம் போன்ற வற்றிற்கு துணை செய்தது.
எனவே மார்க்கோபோலோவை, வரலாற்றில் ஒரு பயண நாயகர் எனலாம். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தரைவழியாகவே பல மலைகளைக் கடந்து, பாலை நிலம் கடந்து, ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரை பயணம் செய்தவர் இவர். இவரது பயணம் 344 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய சாதனை. பாக்தாத், பாரசீகம், ஆப்கானிசம், பாமீர் மலைகள் கடந்து சீனா சென்றவர். வெனிஸ் நகரில் ஜெனோவாவுக்கும் வெனிஸுக்கும் ஏற்பட்ட கடல் போரில் இவர் கலந்து கொண்டார். இவர் கைது செய்யப்பட்டு, ஜெனோவா சிறையில் அடைக்கப்பட்டார். இக்காலத்தில்தான் தனது பயண அனுபவத்தை நூலாக்கினார். சீனப் பேரரசு பற்றி உலகுக்கு அறிவித்தவர் இவர் எனலாம்.