புரியாத உறவு! ஆனா புடிச்சிருக்கு | Mariyadhivyadas

"கையில பைசா காசு இல்லே.... பயபுள்ள பள்ளிக்கொடம் போகணுமின்னு அடம் புடிக்கிறான்...."

"அப்புறம்...?"

"கொடத்தை வச்சேன்...''

இப்பவெல்லாம் அண்டா, குண்டான் என்று எதையாவது அடகு வச்சாவது புள்ளைங்களை படிக்க வைக்கணுமின்னு ஜனங்க கிட்ட ஒரு விழிப்புணர்வு வந்துடுச்சிங்க. படிப்பை பிள்ளைங்களுக்கு குடுத்திட்டா போதும், அதுங்க வருங்காலத்துல எப்படியும், எங்கேயும் போயி பொழைச்சிக்கிடுமின்னு பெத்தவங்க நெனைக்க ஆரம்பிச்சுட்டாங்க. பிள்ளைகளும் படிப்போட அருமை தெரிஞ்சிகிட்டு கஷ்டப்பட்டு படிச்சி முன்னுக்கு வந்துடுதுங்க. படிப்பே சரியான மூலதனம் என்றாகிப் போச்சுதுங்க.

அப்பா தன் மகனிடம் “தம்பி, வருங்காலத்துல நீ எப்படியாவது பெரிய படிப்பு படிச்சி முன்னேறி எனக்கு நல்லபேரு வாங்கித் தரணும் அப்படீன் னாராம். அதுக்கு அவன் “ஏம்ப்பா.... உனக்கு உங்க அப்பா வச்ச குமரவேலுங்கற பேரே நல்லாத்தானே இருக்கு” அப்படீன்னு பதில் சொன்னானாம். எப்படி???

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான். என்ன ஓர் அருமையான வார்த்தை பாருங்க. பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை இதுக்கு மேலேயும் எப்படிங்க உசத்தியாகச் சொல்ல முடியும், சொல்லுங்க!

ஆசிரியர் என்று சொல்லும் போது எல்லோராலும் ஆசிரியர் ஆகி விட முடியாதுங்க. அது ஒரு புனிதமான தொழிலுங்க. அந்தத் தொழிலை ஏற்றுக் கொள்ள கடவுளோட ஆசி வேணுமுங்க. அதுக்காகத்தான் பெயரிலேயே 'ஆசி'ன்னு இருக்கு பார்த்தீங்களா! அதே போல ஆசிரியரின் நல்லாசி இருந்தாதாங்க எந்த ஒரு மாணவனாலும் நல்லா படிச்சி வாழ்க்கைல முன்னுக்கு வரமுடியுமுங்க. இல்லாட்டி நோ சான்ஸ்....

மாணவர் என்று சொல்லும் போது யு. கே.ஜி படிச்சாலும் அவரும் மாணவர்தான். யுனிவர்சிட்டியிலே படிச்சாலும் அவரும் மாணவர் தாங்க. ஒருவரது வாழ்க்கையிலே வர்ற இந்த மாணவப்பருவம் அப்படீங்கறது அவங்களால அப்பப்ப - எப்பவாவது வந்து சில மலரும் நினைவுகள் வந்து எட்டிப் பார்க்குமுங்க. அப்ப நமக்கு வெட்கம் கலந்த சின்னச் சிரிப்பு வரும் பாருங்க.... சம்திங் ஸ்பெஷல்தான் போங்க.....

ஆசிரியர்களுக்கு என்று ஒரு நாளை ஏற்படுத்தி அவங்களை அன்று சிறப்பு செய்வது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயமுங்க. ஏன்னா படிப்போடு கூட நல்ல ஒழுக்கத்தையும், சிறிசுலேயிருந்து புள்ளைகளுக்கு கத்துத் தர்றாங்க பாருங்க, அதுக்கு தான் ஒழுங்கில்லாத வாழ்க்கை மழுங்கிப் போயிடுமுங்க

மாணவர்கள் பொறுப்பா, ஆசை ஆசையா உணர்ந்து படிச்சது அந்தக் காலமுங்க. இப்ப படிப்பு சம்பந்தமா எவ்வளவோ டெக்னாலஜி வளர்ந்தாலும் படிப்பை அவர்களுக்கு அங்குலம், அங்குலமா ஏத்தி ஏத்திப் படிக்க வைக்க வேண்டியதா இருக்குதுங்க. காரணம் சுமை அதிகமாயிடுச்சி. சுகம் குறைஞ்சி போச்சி. ஆனா படிக்கிற புள்ளைங்க எப்பவுமே படிச்சிடு துங்க, படிக்காத புள்ளங்களையும் எப்படியோ அப்படி இப்படின்னு முன்னுக்குக் கொண்டு வந்துடறாங்க பாருங்க... இதுலதாங்க ஆசிரியரோட திறமையே இருக்குதுங்க, கொண்டு வந்துடுவோம்ல.... மே மாதம் ஒரு மாதம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ரிலாக்ஸ் பண்ணிக்கிறதுக்காக விடுமுறை குடுத்திடுறாங்க. இதிலிருந்தே இது இருவருக்குமே எவ்வளவு டென்சனான பணி என்று தெரிய வருதுங்க. ஒரு மாதம் லீவுல தங்களை நல்லா ரிலாக்ஸ் பண்ணிகிட்டு ராம்ராஜ் வேட்டி, சட்டை மாதிரி சும்மா பளிச்சின்னு வந்திடறாங்க.

விவரம் புரியாத வயசில புள்ளைங்க ஆசிரியர் என்றாலே பயந்து பம்முவாங்க. வீட்டார் அந்த அளவுக்குப் பயமுறுத்தி வச்சிருப்பாங்க. நேர்ல வந்து மிஸ். உங்க பொறுப்பு.. சரியா படிக்கலேன்னா தோலை உரிச்சிப் போடுங்க அப்படீம்பாங்க. என்னவோ ஆசிரியர்கள் கசாப்பு கடையில ட்ரெயினிங் எடுத்திகிட்டு வந்த மாதிரி. ஆனா புள்ளைங்க நல்லா விவரம் தெரிஞ்ச பிற்பாடு ஆசிரியர்களை புரிஞ்சிக்க றாங்க. அப்புறம் என்னங்கறீங்க. ஆசிரியர் என்ன சொன்னாலும் அது தான் அவங்களுக்கு வேதவாக்கு அதுக்கு நோ அப்பீல். எவரெஸ்டிலேயே எங்க மிஸ்தான் ஏறி சாதனை பண்ணி இருப்பாங்க, ஆனா இடையில் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சிங்கற ரேஞ்சில பேசுவாங்க. யாரும் அவங்களை ஒண்ணும் சொல்லக் கூடாது. அப்படியே ஆசிரியரையே முன் மாதிரியா எடுத்துக்குவாங்க. விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க.

ஆசிரியப் பணி என்பது அவ்வளவு சுலபமான பணி இல்லீங்க. மற்ற எல்லா பணிகளையும் விட பொறுப்பும், சுமையும் அதிகமுள்ள பணிங்க. ஒரு ஆசிரியர்தாங்க பிள்ளைகள் அனைவருக்கும் பிக் பாஸ்

ஆசிரியர்-மாணவர் உறவே அலாதியானதுங்க. மற்ற பணிகளை விட உணர்வு பூர்வமானதுங்க, பல வருடங்கள் ஓர் ஆசிரியர் மாணவர்களோடேயே பழகிடறதாலே அவங்களோட ஒன்றிப் போயிடறாங்க. காலம் ஓடிடுது. பிரிவுன்னு வரும்போதுதான் ஒரு வெறுமையையும், வெற்றிடத்தையும் ஆசிரியர்கள் உணருறாங்க. ரொம்பவும் அப்செட் ஆயிடறாங்க. ஆசிரியர்-மாணவர் உறவை அவ்வளவு லேசில அவங்களால உதறிட முடியாதுங்க, மாணவர் களுக்கு இவங்க இல்லேன்னா அடுத்த நாளே இன் னொருவர் வந்திடறாங்க. ஆனா ஆசிரியர் தாங்க தனிமைப்படுத்தப்பட்டது போலச் சிரமப்படுறாங்க. தன்கிட்ட படிச்ச புள்ளைங்க வருங்காலத்துல ஒரு நல்ல பொஸிஷன்ல இருக்கிறதைப் பார்த்து பெருமைப் பட பேசிக்கிறாங்க பாருங்க, அதுதாங்க ஆசிரியர்கள் தங்கள் பணியில் கண்ட பலன்

சில மாணவர்கள் வளர்ந்து நல்ல நிலையில் இருந்தாலும், தங்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை பொது இடத்தில் எங்காவது பார்க்க நேர்ந்தால் அவர்களை பார்த்தும் பார்க்காததுபோலச் சென்று விடுவார்கள். அப்படிச் செய்வது ரொம்ப ரொம்பத் தப்புங்க, நமக்கு கரு கொடுத்தது தாயாக இருந்தாலும், உரு கொடுத்தவங்க நமக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்தாங்க. அவங்களை மதிக்கணுமுங்க, அவங்களைப் பார்க்க நேர்ந்தால் அவங்ககிட்ட ஜஸ்ட் ஒரு 'ஹலோ' சொல்றதால நாம என்ன குறைஞ்சிடப் போறோம்? சொல்லுங்க

இப்பவெல்லாம் புள்ளைங்களால் சரியா படிக்க முடியலேங்க. டி.வி. போன். அது, இதுன்னு அவங் களுக்கு நாலு பக்கமும் கவனம் சிதறிப் போகுதுங்க அதனால ஆசிரியர்களுக்கு இந்தக் காலத்துல பொறுப்பு அதிகமாயிடுதுங்க மாணவர்களை இழுத்துப் பிடிச்சி உட்கார வைக்கறதுக்குள்ள போதும் போதும் என்றாகி விடுகிறது. தேர்வில் ஒரு மார்க் குறைந்தாலும் பிள்ளைகளின் பெற்றோர்கள் வந்திட றாங்க. ஏன்.. இவ்விடம் என்று கேள்வி மேல் கேள்வி கேக்குறாங்க. ஏங்க மாதம் மும்மாரி ஏன் பொழிய லேன்னு கேட்டாக்கா என்ன காரணத்தைங்க சொல்ல முடியும்

ஒண்ணுமில்லாதவங்க எல்லாம் ஓவரா சீனைப் போட்டு கிட்டு திரியிற இந்தக் காலத்துல தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் தந்து அவர்களை முன்னேற்றத்திற்காக தங்களையே அர்ப்பணிக்கிற ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் ஒரு ராயல் சல்யூட்... ஓ....கே. வாங்க!

எழுத்து - மரிய திவ்யதாஸ்

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.