சாக்ரடீஸ் - தத்துவஞானிகளின் தந்தை

தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர். ஃபிலாஸ் என்றால் அறிவு; ஸோஃபியா என்றால் நேசிப்பது என்று பொருள். அப்படியானால் தத்துவம் என்பது 'அறிவை நேசிப்பது' என்று விளக்கமே பிறக்கிறதல்லவா?

 

ஆம் அறிவார்ந்த சிந்தனையே தத்துவம். உலகில் உயர்ந்த தத்துவங்களை விதைத்த பெருமை கிரேக்க நாட்டையே சாரும். பழம்பெரும் நாகரிகச் சிறப்பும், கலையும், இலக்கியமும், வீரமும் நிறைந்த மண்ணில் உதித்தவர் சாக்ரட்டீஸ்.

 

உலக வரலாற்றில் இவரின் சிந்தனை மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. வரலாற்று நாயகர் வரிசையில், சாகாத சரித்திரம் படைத்திட்ட சாதனையாளர் வரிசையில் எழுதப்படவேண்டிய முத்தான  பெயர் இது.

 

கலை - இலக்கியம் - நாகரிகம் எனப் புகழ்பெற்ற பண்டைய கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவஞானி சாக்ரட்டீஸ். இவரே தத்துவஞானிகளின் தந்தை (Father of Philosopers) என்று போற்றப்படுகிறார்.

 

பண்டைய கிரீஸ் நாட்டின் ஒரு பகுதி ஏதென்ஸ். நகர அரசுகளில் பலம்பொருந்திய நாடாக இருந்தது. இதுவே இவரின் பிறப்பிடம். கி.மு. 469இல் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மகத்தான மனிதர். மாபெரும் சிந்தனையாளர்.

 

ஏழ்மையில் பிறந்தார். வறுமையில் வளர்ந்தார். வறுமையிலேயே வாழ்ந்தார். வறுமை அறிவை அழிக்க முடியாது என்பதற்கு உதாரணம் இவர். காலில் செருப்பு இல்லை. சமயத்தில் அணிய மேல் சட்டை இல்லை. குடும்பத்திலோ வறுமை. ஆனபோதும் தன்னை நினைக்காது, தன் பிள்ளை தன்பெண்டு என சுயநலம் காட்டாது, சுயநலமில்லாது, தான் வாழ்ந்த கால சமுதாயம் நினைத்த ஒரு மனிதராக வரலாறு இவரை நமக்கு அறிமுகம் செய்கிறது. 'பசி வந்திட பத்தும் பறந்து போகிற' யதார்த்த உலகில், இறுதிவரை ஓர் லட்சிய வாதியாக வாழ்ந்த இவர் ஓர் உதாரண புருஷர் எனலாம். வாக்கும் - வாழ்வும் ஓர் தத்துவமாகவே விளங்கிய உலகின் முதல் அறிவுஜீவி இவர்.

 

வாழ்வியல் கருத்துக்களை, நீதிகளை, வாழும் முறையினை உலகுக்கு வாரி வழங்கியவர். இவர் பிளேட்டோவின் ஆசிரியர்.

 

உன்னையே நீ அறிவாய்' என்பது இவரின் புகழ் ' பெற்ற வாசகம். 'பகுத்தறிவு' என்பது இவர் போதனை யின் அடிப்படை தத்துவம். இருபதாம் நூற்றாண்டின் பல சீர்திருத்தவாதிகளுக்கு எல்லாம் அன்றே அடிப்படை யாக இவர் இருந்தார் எனலாம்.

 

எதையும் ப்படியே நம்பிடாதே! ஏன்? எதற்கு எனக் கேள்வி கேள் என்ற சிந்தனையை வளர்த்தவர்; வலியுறுத்தியவர். மூடத்தனம் - குருட்டுநம்பிக்கை - என்பதை ஒழித்து, அறிவார்ந்த சிந்தனை என்பதனை அவனிக்கு அளித்த அறிஞரே இவர்.

 

காலையிலும் - மாலையிலும் தனக்கு ஓய்வு கிடைக் கும் நேரமெல்லாம் ஏதென்ஸ் நகருக்கு - கடைத்தெரு, சாலைகள் என மக்கள் கூடும் இடத்திற்கு செல்வார். அவர்கள் கவனம் கவர்ந்து, அவரிடம் பேச்சு மூலம் தன் சிந்தனையை வெளிப்படுத்துவார். கிரேக்க நாட்டு இளைஞர்களிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார். இவருக்கும், இவர் பேச்சுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. பகல் பொழுதில் கையில் விளக்கோடு செல்வார். கூட்டம் உள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவது போல் கையில் விளக்குடன் நடிப்பார். வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடும். 'என்ன தேடுகிறீர்கள்?' என யாராவது கேட்பார். 'மனிதர்களைத் தேடுகிறேன்' என்பார் சாக்ரட்டீஸ். மக்கள் புரியாது விழிக்க, அவர்களிடம் பேசுவார். தன் கருத்தை விதைப்பார். இது இவர் பயன்படுத்திய யுக்திகளில் ஒன்று.

 

இவரது நூல்கள் என ஏதுமில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றே இவரைக் கொள்ளலாம். ஓர் பண்டைய படிக்காத மேதையாகவே வரலாறு இவரை நமக்கு அறிமுகம் செய்கிறது.

 

இவருக்குப் பிற்காலத்தவர் - சமகாலத்தவர் நூல்கள் வழியே (பிளேட்டோ, மற்றும் ஸெலோபோன்) தான் நாம் இவரைப்பற்றி அறிய முடிகிறது.

 

அன்றைய ஆட்சியாளர்கள் இவருக்குப் பயந்தனர். இவரின் அறிவுபூர்வ பேச்சால் ஒரு புரட்சி வெடிக்கலாம் எனப் பயந்தனர்.

 

எங்கே நம் ஆட்சிக்கே ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் கொண்டனர். ஒரு சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது 'கிரேக்க இளைஞர்களை கெடுக்கிறார்' என்ற குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. கைது செய்யப் பட்டார். விசாரணை என்ற பெயரில் ஒரு போலி நாடகம் நடத்தப்பட்டது. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டினை ஆணித்தரமாக சாக்ரட்டீஸ் மறுத்தார். தவறு என ஒத்துக்கொள்ளவோ, தண்டனைக்கு அஞ்சவோ இவர் இசையவில்லை. மன்னிப்பு கேட்காது, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றார்.

 

என்ன தண்டனை தெரியுமா? மரணதண்டனை. மகிழ்வோடு ஏற்றார். மரணத்திற்கு அஞ்சாத மேதை யல்லவா அவர். அதற்குமுன்பே சாக்ரட்டீஸ் மரணம் பற்றிய ஓர் அழகான கருத்தை போதனையாகத் தந்தார்.

 

"மரணம்பற்றி கவலைப்படாதே! நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை. அது என்னவென்று உனக்குத்தெரியாது. அது வந்தபோது-நீயே இருக்கப் போவதில்லை. பிறகு ஏன் கவலை?" என்றவர் இவர். அதுபோலவே தனது அறிவுப் போதனைக்கு ஆ சியாளர் தந்த பரிசை ஏற்றார்.

 

விஷம் கொடுத்து கொல்லப்பட வேண்டும் என்பது தீர்ப்பு. இடைக்காலத்தில் இவரை சிறையில் இருந்து தப்ப வைக்க இவரது மாணவர் சில ஏற்பாடுகளை செய்தார். சாக்ரட்டீஸ் தன் நாட்டின் மீதும், தன் நாட்டு சட்டத்தின் மீதும் கொண்டிருந்த அன்பு, மதிப்பால், சட்டம் மீறிட சம்மதிக்கவில்லை.

 

கி.மு.399இல், ஒரு மாலைநேரம், சூரிய அஸ்தமன நேரம். கொடிய விஷம் கோப்பையில் தரப்பட்டது. இறுதிவரை மகிழ்வோடு தன் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சாக்ரட்டீஸ் அவரே விஷக் கோப்பையை வாங்கி அருந்தி உயிர்துறந்தார்.

 

இயேசுவுக்கு பிற்காலம் சிலுவை தந்ததுபோல, நபிகளுக்கு கல்லடி தந்தது போல அன்று அவருக்கு விஷம் தரப்பட்டது.

 

'நல்ல குணங்களை நான் ஞானம் என்பேன்" என்று அறிவுக்கு புதுவிளக்கம் தந்தவர் இவர். ஞானம் என்பது நற்குணம் எனும் நற்கருத்தை அன்றே சொன்னவர் இவர்.

 

"நாம் எதை இழந்தாலும் கௌரவத்தை இழக்க இடம் தரக்கூடாது" என்பது இவரின் தத்துவ முத்துக்களில் ஒன்று. இதனை தன் வழக்கின்போது, இவரே கடைப்பிடித்தார். இன்றும் தத்துவ உலகின் சரித்திர நாயகனாய் வாழ்கிறார்.

 

நட்பு குறித்து இவர் கூறிய ஓர் நற்கருத்து இதோ: "நட்பைப் பெறுவதில் நிதானமாக இரு. நட்பைபெற்றபின்பு உறுதியுடன் நீடித்து நட்பைக் காப்பாற்று'' இது போன்ற வாழ்வியல் நீதிகளை ஓர் அறநூல்கூறுவது போல, வள்ளுவர் கூறுவதுபோல சாக்ரட்டீஸ் கூறியிருப்பது இவரின் சீரிய சிறப்புக்கு சிறந்த சான்றாகும்.