நல்ல விதையாக

மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.
1 கொரிந்தியர் 15-43,44

நீதிமான் நம்பிக்கையோடுகூட உலகை விட்டு கடந்து போகிறார். அவருக்கு  ஒரு மகிமையான விண்ணக வாழ்வு பற்றி எதிர்பார்ப்புண்டு. 

இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

அத்தகைய மரணம் ஆண்டவருடைய  பார்வையில் மகிழ்ச்சியானது, பாவி தன் மரணத்தில் நம்பிக்கையில்லாமல் மரிக்கிறான். குற்ற மனசாட்சியுள்ளவர்கள் நிம்மதியில்லாமல் மரிக்கிறார்கள். 

யோபுவின் மரணத்தில் அவருக்கு ஒரு பெரிய நம்பிக்கையிருந்தது. அவர் சொல்லுகிறார் "என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும் போதே கடவுளைக் காண்பேன்.நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது."

யோசேப்புக்கு தன் மரணத்தின் மேல் ஒரு நம்பிக்கையிருந்தது. ஆகவேதான் தன்னுடைய எலும்புகள் எகிப்தில் இருக்கக்கூடாது என்றும் கானானிலுள்ள தன் மூதாதையர்களின்  கல்லறையிலே அவைகள் அடக்கம் பண்ணப்பட வேண்டுமென்றும் விரும்பினார். காரணம், ஒருநாள்  ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடைய எலும்புகளோடு தனது எலும்புகளும் உயிர்ப்பிக்கப்பட்டு ஆண்டவருக்கு  எதிர் கொண்டு போகும் என்பதே அந்த நம்பிக்கையாய் இருந்திருக்கும்.

நாம் மரித்தவர்களைக் கொண்டுபோய் புதைக்கவில்லை .விதைக்கிறோம்.  இறுதி நாளில் உயிரோடு எழுந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு விதைக்கிறோம்.

 

ஆண்டவரே! மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்வு உண்டு என்று நம்பும் நாங்கள் நல்ல விதையாக விதைக்கப்பட்டு உம்மோடு கூட உம வருகையில் எடுத்துக்கொள்ளப் பட தகுதியான வாழ்வு வாழ துணை செய்யும். கொரோனாவினால் இறந்தவர்கள்,யாரும் நினையாது இருக்கிறவர்கள், எங்களோடு வாழ்ந்து எங்களை விட்டு சென்ற எல்லா ஆத்துமாக்களும்அமைதியில் இளைப்பாறி நிலை  வாழ்வு  அடைய செய்தருளும். ஆமென்.